செய்திகள்

உயிரிழந்தவர்களை நினைவேந்துவது ஒவ்வொரு சாதாரண குடி மக்களதும் ஆழ்மன விருப்பமாகும் – டக்ளஸ் தேவானந்தா

எமது உரிமைப் போரிலும் அதன் பின்னரான அழிவு யுத்தத்திலும் இதுவரை போராளிகள் முதற்கொண்டு பொதுமக்கள் வரை எண்ணற்ற உயிர்களை நாம் இழந்திருக்கின்றோம்.அரசியல் துஷ்பிரயோகங்கள் இன்றி உயிரிழந்தவர்களை தமது ஆழ்மனங்களில் நினைவேந்தி அஞ்சலி செலுத்தும் எமது மக்களின் உரிமையை யாரும் தடுக்க மாட்டார்கள். மக்களின் உணர்வுகளுக்கும் ஆழ்மன விருப்பங்களுக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் என்றும் மதிப்பளிப்போம்.உயிரிழந்த அனைத்து உயிர்களையும் நெஞ்சில் நினைவேந்தி அஞ்சலி மரியாதை செலுத்துகின்றோம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சக போராளிகளினதும் பொது மக்களினதும் உயிரிழப்புக்கள் நிகழ்ந்தபோது அதைவைத்து அரசியல் ஆதாயம் தேடலாம் என ஆனந்தக் கூத்தாடி மகிழ்ந்தவர்களே இன்று உறவுகளை நினைவேந்தும் நிகழ்வுகளில் கூடி நிற்கின்றார்கள். இவர்கள் குறித்த மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

அமைதியானதும் சமாதானமானதுமான முறையில் மக்கள் அனுஷ்டிக்கும் நினைவேந்தலை துஷ்பிரயோகம் செய்து அதில் அரசியல் ஆதாயம் தேட அவர்கள் முற்படுவார்கள். இத்தகைய துஷ்பிரயோகங்களுக்கு எமது மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள் என நம்புகின்றோம் என மேலும் தெரிவித்துள்ளார்.(15)