செய்திகள்

ஊர்காவற்துறை கொலை வழக்கு: மூவருக்கு இரட்டை மரண தண்டனை

யாழ் – ஊர்காவற்துறை நாரந்தனைப் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு, இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட மூன்று எதிரிகளுக்கும் இரட்டை மரணதண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணை யாழ். மேல் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிபதி மா. இளஞ்செழியன் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளார்.

எதிரிகள் மூவருக்கும் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஐவருக்கும் தலா ஒரு இலட்சம் தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளது.

தண்டப்பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக சென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி, இருவரை படுகொலை செய்ததுடன் 20 பேர் வரை காயமடைந்தனர்.

குறித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூன்று எதிரிகளுக்கும் இரட்டை மரண தண்டனையும் பத்து வருட சிறைத் தண்டனையும் விதிக்க வேண்டும் என்று சட்ட மாஅதிபர் சார்பில் பிரதி அரச சட்டவாதி யாழ். மேல் நீதிமன்றுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

இதனடிப்படையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட குறித்த வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என்று யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்திருந்த நிலையில், குறித்த மூன்று சந்தேக நபர்களுக்கு இன்று இரட்டை மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக 2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் ஊர்காவற்துறை பிரதேசத்துக்கு சென்றிருந்தனர்.

இதன்போது, ஊர்காவற்துறை – நாரந்தனைப் பகுதியில் வைத்து அவர்கள் மீது இனந்தெரியாவர்கள் தாக்குதல் மேற்கொண்டனர்.

இந்த தாக்குதலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் இருவர் கொலை செய்யப்பட்டதுடன், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் உட்பட பதினெட்டு பேர் காயமடைந்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு, யாழ். மேல் நீதிமன்றத்துக்கு சட்ட மாஅதிபரால் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் பாரப்படுத்தப்பட்டு, அங்கு வழக்கு விசாரணை இடம்பெற்று வந்திருந்தது.

இதற்கமைய குறித்த வழக்கு விசாரணை கடந்த 15 நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில்இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இருதரப்பு சாட்சி பதிவுகளும் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் இருதரப்பு தொகுப்புரையும் இடம்பெற்றிருந்தது.

இத் தொகுப்புரையின் போதே வழக்கு தொடுநர் தரப்பு சட்டத்தரணியான சட்டமா அதிபர் திணைக்கள பிரதி மன்றாதிபதி நாகரட்ணம் நிஷாந், தனது தொகுப்புரையில் மேற்குறித்த தண்டணையை எதிரிகளுக்கு வழங்க வேண்டும் என நீதிமன்றுக்கு பரிந்துரைத்திருந்தார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற வழக்கு நடவடிக்கையின் போது இரு தரப்பு சட்டத்தரணிகளாலும் தொகுப்புரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் முடிவில் நீதிபதி மா.இளஞ்செழியன் இன்றைய தினம் காலை 10.30 அளவில் இந்த வழக்கின் தீர்ப்பை அறிவிப்பார் எனத் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

n10