செய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிக்கை

கொரோனா தொற்று நிலைமை மீண்டும் தலைதூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக கல்வி அமைச்சு விசேட கவனம் செலுத்தியுள்ளது.
அனைத்து மாகாணங்கள் மற்றும் வலய மட்டத்தில் தகவல்களை பெற்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கை வருமாறு,
தற்போதைய கொரோனா தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு மாணவர்கள் , ஆசிரியர்கள் , அதிபர்கள் மற்றும் மற்றைய கல்வி பணியாளர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்ததுவதில் கல்வி அமைச்சு விசேட கவனம் செலுத்தியுள்ளது.
கல்வி , விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் ஆலோசனைக்கமைய கல்வி அமைச்சுக்குள் மாகாண கல்வி பணிப்பாளர்கள் மற்றும் சுகாதார முன்னேற்ற அதிகாரிகளின் தொடர்புபடுத்தி தகவல் மத்திய நிலையமொன்று அமைமக்ககப்பட்டுள்ளது. இந்த மத்திய நிலையம் பிரதி கல்வி பணிப்பாளரின் கீழ் இயங்கும் என்பதுடன் இதற்காக விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி 1988 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் -112785818 என்ற பெக்ஸ் இலக்கத்திற்கும் அல்லது info@moe.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அதிபர்கள் , கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்ட கல்வி அதிகாரிகளுக்கு தாம் சேவைப்புரியும் இடங்கள் மற்றும் பிரதேசங்களிலுள்ள கொவிட் 19 நிலைமை தொடர்பான தகவல்களை அனுப்பி வைக்க முடியும். இந்த தகவல் நிலையத்தினூடாக நாடு பூராகவும் மாகாண மற்றும் கல்வி வலயங்களுக்குள் வைரஸ் பரவல் நிலைமை தொடர்பாகவும் மற்றும் பாடசாலைகளின் நிலைமைகள் தொடர்பாகவும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு அந்த தகவல்கள் தொடர்பாக சுகாதார அதிகாரிகளுக்கு அறிவித்து தேவையான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க நடவடிக்கையெடுக்கப்படும்.
நிலைமை மிகவும் மோசமான நிலைக்கு சென்றால் நாடு பூராகவுமுள்ள பாடசாலைகள் , பிரிவெனாக்கள் மற்றும் மற்றைய கல்வி நிறுவனங்களுக்கு மீண்டும் விடுமுறையை வழங்கி அனைவரின் சுகாதார பாதுகாப்பையும் உறுதிப்படுத்த தயங்காது நடவடிக்கையெடுப்போம். என குறிப்பிடப்பட்டுள்ளது. -(3)