செய்திகள்

கிழக்கு மாகாணத்துக்கு இந்திய பிரதமர் வருகைதராதது வேதனையான விடயம்: சீ.யோகேஸ்வரன்

இலங்கைக்கு வருகைதரவுள்ள இந்திய பிரதமர் மோடி அவர்கள் கிழக்கு மாகாணத்துக்கு வருகைதராதது கிழக்கு மாகாண மக்களுக்கு வேதனையினை ஏற்படுத்தியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட எருவில் கண்ணகி மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள பட்டியலிலே கிழக்கு மாகாணம் இடம்பெறவில்லையென்பது கிழக்கு மாகாண மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ஆனாலும் எங்களது தமிழ் தேசிய தலைவர் சம்பந்தன் ஐயா அவர்கள் இந்திய பிரதமர் கிழக்கு மாகாணத்துக்கு வரவேண்டும், திருக்கோணேஸ்வரம், சம்பூர் ஆகிய பகுதிகளுக்கு வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஆனால் இந்திய நாட்டின் அமைச்சர் ஒருவருடன் தொடர்புகொண்டுகேட்டபோது அதற்கான சாதகமான நிலை இல்லையென தெரியவருகின்றது.

அவர் இங்குவரவில்லையென்று கவலைப்படுவது அவசியமில்லை.அவர் வடமாகாணத்துக்கு செல்வது எங்களுக்கு முக்கியத்துவம் மிக்கதாகவுள்ளது.பெரும்பாலானவர்கள் கொழும்புக்கு வந்து அங்கிருந்து திரும்பிவிடுகின்றனர்.ஆனால் வடமாகாணத்துக்கு சென்று அங்குள்ள நிலைமையை அறியக்கூடியதாகவுள்ளது.

2009ஆம் ஆண்டு இந்த நாட்டில் நடைபெற்ற பாரிய மனித உரிமை மீறலும் மனிதாபிமான செயற்பாட்டு மீறலுமே சர்தேசத்தில் ஊன்றுகோலாகவுள்ளது.அவ்வாறான சம்பவம் பெருவாரியாக இடம்பெற்றது வடமாகாணத்திலாகும்.அங்கு அவர் சிலவேளைகளில் சில விடயங்களை தெரிந்துகொள்ளும் வாய்ப்பு உள்ளது.

தற்போது உள்ளக விசாரணைக்காக இலங்கை அரசாங்கம் ஆறு மாதங்கள் கோரியுள்ளதுடன் இதன் பின்னர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ள நிலையில் இங்கு வருகின்ற இந்திய பிரதமர் இந்த நாட்டில் நடைபெற்ற அநீதியை உணர்ந்துகொண்டு சர்வதேச சமூகம் கொண்டுவரும் தீர்ப்பை அவர் மாற்றமாட்டார் என நாங்கள் எண்ணுகின்றோம்.அவர் இங்குவந்து பார்த்து உண்மை நிலையை உணர்ந்துகொள்ளவேண்டும்.அவர் இங்கு வருவதை நாங்கள் வரவேற்கின்றோம்.

இன்று நாங்கள் முற்று முழுதாக சுதந்திரம்பெற்றதாக கருதமுடியாது.ஆட்சிமாற்றத்தின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்த சொத்து பாடசாலைகளின் விளையாட்டு நிகழ்வுக்கு அதிதியாக செல்வது.இந்த நிலைமையே உள்ளது.அதற்கு மேலாக எதுவும் செய்யமுடியாத நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது.

ஆனாலும் கிழக்கு மாகாணசபையில் இரண்டு அமைச்சுகளையும் பிரதி தவிசாளரைம் பெற்றுள்ளோம்.அவற்றினை வைத்து எமது மக்களுக்கு ஏதாவது செய்வதற்கு முயற்சிகளை மேற்கொள்வோம். இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுதந்திரம் மறுக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.இன்று இராணுவ புலனாய்வாளர்களின் கண்காணிப்பு தொடர்ந்தவண்ணமேயுள்ளது.

நாங்கள் சுதந்திரமாக எங்களது கருத்துகளை வெளியிடமுடியாத நிலையில் இன்னும் புலனாய்வாளர்களின் அட்டூழியம் தொடர்கின்றது.இதில் மாற்றம்வேண்டும்.

இந்த நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் இருக்கும் வரைக்கும் நிம்மதியாக எமது மக்கள் வாழமுடியாது.அந்த சட்டம் நீக்கப்படவேண்டும்.அந்த சட்டத்தினை கொண்டுவந்தவரும் தமிழர்தான்.அந்த சட்டம் நீக்கப்படவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக கூறிவருகின்றது.

 

IMG_0002 IMG_0008 IMG_0011 IMG_0012 IMG_0015 IMG_0017 IMG_0022 IMG_0027 IMG_0047 IMG_0061 IMG_0068