செய்திகள்

கொரோனா – ஸ்பெயினில் ஒரே நாளில் 514 பேர் – ஐஸ்லாந்தில் முதல் பலி

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 197 நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில், உலகம் முழுவதும் இதுவரை 4 லட்சத்து 21 ஆயிரத்து 69 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 18 ஆயிரத்து 802 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 லட்சத்து 93 ஆயிரத்து 939 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 130 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, இத்தாலியை புரட்டி எடுத்துவரும் இந்த வைரஸ் மற்றொரு ஐரோப்பிய நாடான ஸ்பெயினிலும் கோரத்தாண்டம் ஆடி வருகிறது. அந்நாட்டில் இதுவரை 42 ஆயிரத்து 58 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் வைரஸ் தாக்குதலுக்கு 514 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 696 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், ஐஸ்லாந்து நாட்டில் கொரோனாவுக்கு முதல் பலியாக 60 வயது நிரம்பிய பெண் நேற்று உயிரிழந்தார். மேலும், 588 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக ஐஸ்லாந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.(15)