செய்திகள்

சீன – இலங்கை உறவுகளால் இந்திய நிபுணர்கள் அச்சம்

வளர்ந்து வரும் இலங்கை – சீன உறவுகள் குறித்து இந்திய நிபுணர்கள் அச்சம் கொண்டுள்ளனர் என்று இந்திய ஊடகம் ஒன்றில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 70 வீத உரிமையை 99 ஆண்டுகளுக்கு இலங்கை  அரசாங்கம் சீனாவுக்கு வழங்கியுள்ளமை குறித்து, தேவிரூப மித்ரா என்பவர் எழுதியுள்ள கட்டுரையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த உடன்பாட்டில் கூறப்பட்டுள்ள பாதுகாப்பு உத்தரவாதங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று இந்தியா நம்புகிறது, எனினும், இந்த துன்பகரமான விற்பனை போன்ற நிலை அண்டைநாட்டில் உள்ள ஏனைய திட்டங்களுக்கும் ஏற்படுமோ என்ற அச்சமும் அதற்கு உள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டை புதுடெல்லி வரவேற்கவில்லை. ஆனால், சீனாவின் கடன் பளுவில் இருந்து தப்பிப்பதற்கு, கொழும்புக்கு வேறு நல்ல வழி இல்லை. இதனால், அம்பாந்தோட்டையை சீன நிறுவனம் நிர்வகிப்பதை ஏற்றுக் கொள்வதைவிட இந்தியாவுக்கு வேறு தெரிவு இல்லை.

இந்த உடன்பாடு குறித்த பேச்சுக்கள் மற்றும் அதில் பாதுகாப்பு குறித்த சில பிரிவுகளை உட்சேர்ப்பதில், அமெரிக்காவுடன் இந்தியாவும், தொடர்புபட்டிருந்தன என்றும் உறுதிப்படுத்த முடிகிறது.

எந்தவொரு இராணுவ செயற்பாடுகளையும் இங்கு முன்னெடுப்பதற்கு கடுமையான தடைகள் விதிக்கப்பட்டுள்ளன என்றும் இராணுவ செயற்பாடுகளை மேற்கொள்ளும் முழு உரிமையும் சிறிலங்காவுக்கே உள்ளது என்றும் உடன்பாட்டு வரைவில் கூறப்பட்டிருந்தது.

துறைமுக பாதுகாப்புச் சேவைகளில் ஈடுபடும் அனைவருமே இலங்கையர்களாக இருக்க வேண்டும் என்ற விதிமுறையும் சேர்க்கப்பட்டுள்ளது என்றும் அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

n10