செய்திகள்

தனிமைப்படுத்தல் நடைமுறையில் மாற்றம்

இனி வரும் காலங்களில் கொரோனாவுடன் தொடர்புடைய தனிமைப்படுத்தல் நடைமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி லெப்ரினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய கொரோனா தொற்று உறுதியான நோயாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படமாட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக, கொவிட்-19 தொற்றாளர் இனங்காணப்பட்டதும் அவருடன் தொடர்பைப் பேணியவர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இனிமேல் அந்த நடைமுறை அமுலில் இருக்காது. மாறாக தொற்றாளருடன் முதலாவது தொடர்பை பேணியவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவார். இவ்வாறு வீடுகளில் தனிமைப்படுத்தப்படுபவர்கள் உரிய விதிமுறைகளை அனுசரித்து வீடுகளில் தங்கியிருக்க வேண்டும் என இராணுவத் தளபதி லெப்ரினன் ஜென்ரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
கொரோனா தொற்று உறுதியானவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இந்த காலகட்டத்தில் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் இராணுவத் தளபதி கேட்டுக்கொண்டார்.
அவர்களுக்கு தொற்று உள்ளதா என கண்டறிய மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் சோதனை முடிவு கிடைக்கும் வரை அவர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்படுவார்கள் முதியவர்கள் மற்றும் அவர்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகள் காரணமாக பலர் வீடுகளை விட்டு வெளியேறுவதில் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்றும் இதனை கருத்திற்கொண்டு நோயாளிகளின் குடும்ப உறுப்பினர்களை வீட்டில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டார். -(3)