செய்திகள்

தன்மானத்தினை காவுகொடுத்துவிட்டு மேற்கொள்ளும் அபிவிருத்திகளுக்கு துணைபோகமாட்டோம்: சிறிநேசன்

அரசாங்கத்திடமிருந்து கௌரவமான முறையில் நிதியைப் பெற்று அபிவிருத்திகளை செய்யவேண்டுமே தவிர, தன்மானத்தினை காவுகொடுத்துவிட்டு மேற்கொள்ளும் அபிவிருத்திகளுக்கு துணைபோகமாட்டோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கூறியுள்ளார்.

கம்பெரலிய திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு – குருமண்வெளி பகுதியில் புனரமைக்கப்பட்ட வீதி நேற்று (வெள்ளிக்கிழமை) திறந்துவைக்கப்பட்டது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய சிறிநேசன் இவ்வாறு குறிப்பிட்டார்.

இன்று அரசாங்கம் நிமர்ந்து நிற்பதற்கு கூட்டமைப்பே காரணம் எனக் குறிப்பிட்ட சிறிநேசன், அன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு சரியாக செயற்பட்டிருக்காவிட்டால் இன்று தேர்தல் காலமாகவே இருந்திருக்குமென சிறிநேசன் இதன்போது கூறினார்.

அத்தோடு, புலம்பெயர்ந்த உறவுகள் கூறுவதைப்போல கடும்போக்கினை கடைப்பிடிக்க முடியாதென்றும் குறிப்பிட்டார். காரணம், மீண்டும் வன்முறைகள் உருவாகுமானால் அதனை தாங்கும் சக்தி தமிழ் மக்களிடம் இல்லையென அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், இருக்கின்ற ஜனநாயக பெரும்பான்மை பலத்தினை வைத்துக்கொண்டு சாணக்கியமான பாதையில் சென்று, உரிமைகளை பெறவேண்டிய நிலையில் உள்ளோம் என சிறிநேசன் மேலும் தெரிவித்தார்.

குறிப்பாக கடந்த கால அரசியல் சூழ்நிலையின்போது கூட்டமைப்பை நடுநிலை வகிக்குமாறு சிலர் கூறியதாகவும், அவ்வாறு செய்திருந்தால் இன்று மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியமைத்திருப்பார் என்றும் குறிப்பிட்டார்.

யார் வெல்லவேண்டும் என்பதைவிட யார் தோற்கடிக்கப்படவேண்டும் என்பதில் தமிழ் மக்கள் இம்முறை கவனமாக உள்ளனர் என்றும், அந்தவகையில் கடந்த 2005ஆம் ஆண்டு வாக்களிக்காமல் விட்ட தவறை மீண்டும் செய்யாமல் சரியான தீர்மானங்களை மக்களுடன் இணைந்து கூட்டமைப்பு எடுக்குமென சிறிநேசன் மேலும் குறிப்பிட்டார்.