செய்திகள்

தமிழர்-முஸ்லிம் அரசியல் ஐக்கியம் காலத்தின் கட்டாயம்

கலாநிதி அமீர் அலி, மேர்டொக் பல்கலைக்கழகம், மேற்கு அவுஸ்திரேலியா

(தமிழர்-முஸ்லிம் என்ற பெயர்கொண்டு இந்நாட்டின் இரு சிறுபான்மை இனங்களையும் அழைப்பதில் எனக்குப் பிரச்சினையுண்டு. தமிழர் என்பது ஓர் இனத்தின் பெயர். முஸ்லிம் என்பது ஒரு மதத்தைப் பின்பற்றுபவர்களின் பெயர். இலங்கை முஸ்லிம்களின் இனப் பெயரென்ன? இந்தச் சர்ச்சையை நான் ஏற்கனவே வேறோரிடத்தில் விளக்கியுள்ளேன். ஆதலால் தமிழர்-முஸ்லிம் என்ற பெயர்களை வசதிக்காக இங்கு கையாளுகின்றேன்)

கடந்த சில வாரங்களாக நாட்டில் நடக்கும் அரசியல் சூதாட்டம் வெறுமனே கட்சிகளுக்கிடையேயும், ஆளும் கட்சிக்கும் தேசாதிபதிக்கிடையேயும், நடைபெறும் அதிகாரப் போரட்டம் மட்டுமல்ல, அதற்கெல்லாம் மேலாக ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரத்துக்குமிடையே நடக்கும் ஒரு ஜீவமரணப் போராட்டம். இந்தப் போராட்டம் இன்று வரை முற்றுப்பெறாது தொடர்வதற்குக் காரணம் பாராளுமன்றத்தில் தமிழர், முஸ்லிம் அங்கத்தவர்களுள் பெரும்பான்மையினர் ஜனநாயகம் நிலைக்க வேண்டுமென்ற தமது கொள்கையில் விடாப்பிடியாக நின்றமையாகும். இது பெருமைப்பட வேண்டிய ஒரு விடயம். இவர்களுடன் பெரும்பான்மைச் சமூகத்தின் முற்போக்குவாதிகளும் சேர்ந்து கொண்டமை அரசியல் இருளிற் சிக்குண்டு தவிக்கும் இலங்கைவானிற் தோன்றிய ஒரு விடிவெள்ளியாய் அமைந்துள்ளது.

இதன் பின்னணியில் ஒரு முக்கியமான உண்மையை இலங்கைவாழ் தமிழர்களும் முஸ்லிம்களும் உணரவேண்டியுள்ளது. கடந்த சில தசாப்தங்களாக பெரும்பான்மை இனத்தினரிடையே வளர்ந்துள்ள பேரினவாதச் சக்திகள் சிறுபான்மை இனங்களின் வாழ்வுக்கும் வளத்துக்கும் குந்தகம் விளைவிப்பனவாக இயங்குகின்றன என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. இதுவரை சிறுபான்மை இனங்கள் அனுபவித்த இன்னல்களும் இழப்புகளுமே இதற்குச் சான்று. இந்தச் சக்திகளின் செல்வாக்கு பெரும்பான்மை அரசியற் கட்சிகளுக்குள்ளும், பௌத்த சங்கத்தினுள்ளும் பாதுகாப்புத் துறைக்குள்ளும் ஊடுருவியிருப்பதை யார்தான் மறுப்பர்? இந்தச் சக்திகளுக்குப் பின்னால் ஒரு பெரும்பான்மைப் பணக்காரவர்க்கமும் அவர்களின் புதினப் பத்திரிகைகளும் ஒலி, ஒளி ஊடகங்களும் செயற்படுகின்றன என்பதும் கண்கூடு. சில வெளிநாட்டுச் சக்திகளும் இவர்களின் பலத்துக்கு உரம்போடுகின்றன என்றும் சில நடுநிலை அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த நிலையில் இப்பேரினவாதச் சக்திகள் ஆட்சியைக் கைப்பற்றுமாயின் அது ஒரு சர்வாதிகாரப்போக்கினைக் கடைப்பிடிக்கும் என்பதில் சற்றேனும் ஐயமுண்N;டா? எழுபதாண்டுகளுக்கும் மேலாக இங்கே நிலைத்திருக்கும் ஜனநாயக ஆட்சிமுறைக்கு அவர்களின் ஆட்சி சாவுமணியாக அமையாதா? அவ்வாறமைந்தால் சிறுபான்மை இனத்தினரின் கதியென்ன? இரு இனங்களும் எண்ணிப்பார்க்கவேண்டிய ஒரு விடயமிது.

தமிழர்களும் முஸ்லிம்களும் ஓருண்மையை உணரவேண்டும். ஜனநாயகம் என்ற ஓர் ஆட்சிமுறை இருக்கும்வரைதான் இவ்விரு இனங்களும் தனித்தனியே போராடியும் ஒருவரை மற்றொருவர் பலிகொடுத்தும் தத்தமது இனங்களுக்கெனச் சில நன்மைகளைப் பெறமுடியும். அவ்வாறுதான் இதுவரை அவர்கள் பெற்றுக்கொண்டனர். ஜனநாயக ஆட்சி அகலும்பட்சத்தில் அவர்களின் அந்த யுக்திகள் பலனளிக்கா. சர்வாதிகாரத்துக்குச் சார்ந்துநின்றால் தனிப்பட்டவர்கள் சில நன்மைகளைப் பெறலாம். ஆனால் சிறுபான்மையினர் சமூகவாரியனெ அபார நன்மைகளைப் பெறும் என்பது சந்தேகமே.

இந்த உண்மையை உணர்ந்துகொண்டு கடந்த சில வாரங்களாக தமிழ் முஸ்லிம் தலைவர்கள் பெரும்பான்மைச் சமூகத்தின முற்போக்குச் சக்திகளுடன் சேர்ந்து சம்பந்தன் தலைமையிலும் ஹக்கிம் தலைமையிலும் ஜனநாயகத்துக்காகக் கைகோர்த்து நின்றதையும் அவதானிக்கையில் வேறோர் உண்மை புலப்படவில்லையா? அதாவது, இலங்கையின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பாரிய பொறுப்பை இறைநியதி அல்லது விதி சிறுபான்மையின் தலையிற் சுமத்தியுள்ளதென்பது தெளிவாகின்றதல்லவா? இந்த மகோன்னத நிலையை அவர்கள் சாமர்த்தியமாக உபயோகித்தால் வருங்காலச் சந்ததிகள் நன்றியுடன் அவர்களை நினைவுகூரும் என்பதிற் சந்தேகமில்லை. முஸ்லிம்களைப் பொறுத்தவரை ஹக்கிமும் அவரது சகாக்களும் இதுவரை நடந்துகொண்ட விதம் மெச்சத்தக்கதே. அதே போக்கினைத் தொடர்வார்களா என்பதே எனது கேள்வி.

இவற்றையெல்லாம் நோக்கும்போது தமிழர்களும் முஸ்லிம்களும் அரசியல் ரீதியாக ஐக்கியமாவது காலத்தின் கட்டாயமாகின்றது. தமது இனங்களின் நலனுக்காக மட்டுமல்ல நாட்டின் சபீட்சத்துக்காகவும் ஜனநாயகத்தைக் காப்பாற்றுதற்காகவும் இந்த ஐக்கியம் ஏற்படவேண்டியுள்ளது. அவ்வைக்கியம் இனப்பற்றைவிட தேசப்பற்றைப் பறைசாற்றுவதாக அமையவேண்டும். இதுவரை காலமும் இனப்பற்றை மையமாகவைத்தே இவ்விரு இனங்களின் அரசியற் கட்சிகளும் அவற்றின் அங்கத்தினர்களும் செயற்பட்டுவந்துள்ளனர். இதைக்கடந்து நாட்டுப்பற்றை மையமாகவைத்து இவர்கள் இணைந்து செயற்படும்போது அது பெரும்பான்மையினரின் முற்போக்குச் சக்திகளையும் நாட்டின் ஏனைய நலவிரும்பிகளையும் கவராதா? அவ்வாறு கவரப்பட்டு எழுகின்ற செயற்படை சிறுபான்மை இனங்களின் இன்னல்களையும் தீர்த்துவைக்காதா?

சென்றகாலக் குரோதங்களையும் குற்றங்களையும் பல்லவிகளாக இன்னும் பாடிக்கொண்டிருப்பதிற் பலனில்லை. அவற்றை மறக்க முடியாவிடினும் மன்னிக்க முடியுமல்லவா? ஊணர்ச்சியின் அடிப்படையில் பிரச்சினைகளை அணுகாமல் அறிவின் அடிப்படையில் அவற்றை அணுகினால் அது ஐக்கியத்துக்கு வழிவகுக்கும். அல்லது பிரிவினைவாதம் தொடரும்.

இப்போது உருவாகியுள்ள அரசியற் குழப்பம் சிறுபான்மை இனமிரண்டும் இணைந்து செயற்படவேண்டிய ஓர் ஒப்பற்ற சூழலைப் படைத்துள்ளது. இதனை நழுவவிட்டு விரயமாக்கினால் காலம் இவ்வினங்களை ஒருபோதும் மன்னிக்காது. பேரினவாதச் சர்வாதிகாரத்தினால் சிறுபான்மை இனங்கள் ஒடுக்கப்படுவது உறுதி.