செய்திகள்

தமிழ்நாட்டில் புதிய பயங்கரவாதிகள் சதி திட்டம்- ராக்கெட் லாஞ்சர் செலுத்தி சோதனை நடத்தினர்

நாடு முழுவதும் பாகிஸ்தான் ஆதரவு இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பல்வேறு சதி திட்டங்களை அரங்கேற்றி வருகிறது.இதற்காக தங்களது அமைப்புக்கு ஆதரவாளர்களையும் ஐ.எஸ். பயங்கவாதிகள் திரட்டி வருகிறார்கள். இது போன்று மூளைச்சலவை செய்யப்படும் பயங்கரவாத எண்ணம் கொண்ட இளைஞர்களின் துணையுடன் தான் குண்டு வெடிப்பு சம்பவங்களும் பல இடங்களில் அரங்கேற்றப்பட்டுள்ளன.

இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 21-ந்தேதி ஈஸ்டர் பண்டிகையின் போது கிறிஸ்தவ தேவாலயங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து சிதறியதில் பலத்த உயிர் சேதம் ஏற்பட்டது. 250-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.இந்த குண்டு வெடிப்பு சம்பவம் உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தமிழகத்திலும் அது போன்று சதி திட்டம் தீட்டப்பட்டதாகவும் அப்போது திடுக்கிடும் தவல்கள் வெளியானது.

இந்த குண்டு வெடிப்புக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து நாடு முழுவதும் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன.பயங்கரவாதிகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுப்பதற்காக உருவாக்கப்பட்ட தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.

நாடு முழுவதும் ரகசியமாக செயல்பட்டு வந்த ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர்கள் 127 பேர் கைது செய்யப்பட்டனர். அதிக பட்சமாக தமிழகத்தில் மட்டும் 33 பேர் பிடிபட்டனர்.இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழகத்தில் நாசவேலையில் ஈடுபடும் திட்டத்துடன் 33 பேரும் பல்வேறு பயங்கரவாத செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட அதிர்ச்சி தகவல் வெளியானது.24C12

இலங்கை குண்டு வெடிப்பின்போது தற்கொலை படையாக மாறி தாக்குதல் நடத்திய பயங்கரவாதியான ஜக்ரான் ஹசீம் என்பவனின் வீடியோ பேச்சுக்களே தமிழக இளைஞர்களை மூளைச் சலவை செய்து பயங்கரவாத ஆதரவாளர்களாக மாற்றியதும் தெரிய வந்துள்ளது.இது தொடர்பாக டெல்லியில் நடந்த தேசிய புலனாய்வு முகமையின் கூட்டத்தில் ஐ.ஜி. அசோக் மிட்டல் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.

இதன்படி தமிழகத்தில் வங்கதேசத்தை தலைமையிடமாக கொண்ட பயங்கரவாத அமைப்பான “ஜமாத் உல் முகாஜுதீன்” என்கிற அமைப்பும் புதிதாக சதி திட்டங்களை தீட்டி செயல்பட்டு வந்திருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.மேற்கு வங்க மாநிலத்தில் புர்கான் என்ற இடத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் துப்பு துலக்கி வந்தனர்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஜமாத் உல் முகாஜுதீன் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் பெங்களூரில் 3 மாதத்துக்கு முன்பு அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.இதில் மேற்கு வங்க குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முகமது ரஹ்மான், கவுசர் ஆகிய 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் இருவரும் தமிழ்நாட்டில் குண்டு வெடிப்புக்கு பயிற்சி பெற்றதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர். கிருஷ்ணகிரி மலைப் பகுதியில் அதற்கான பயிற்சியை மேற்கொண்டதாகவும் கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், பயங்கரவாதிகள் இருவரையும் கிருஷ்ணகிரி மலைப் பகுதிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.அப்போது மலைப் பகுதியில் வெடிகுண்டு துகள்கள் சிக்கியது. ஜெலட்டின் குச்சிகளும் பிடிபட்டன. இது தொடர்பாக 2 பேரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் பயங்கரவாதிகள் இருவரும் கிருஷ்ணகிரி மலைப்பகுதியில் வெடிகுண்டு சோதனையுடன் சேர்த்து ராக்கெட் லாஞ்சரையும் செலுத்தி சோதனை நடத்தி இருக்கும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்தை பொறுத்தவரையில் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர்களே தொடர்ந்து பிடிபட்டு வந்த நிலையில், வங்கதேசத்தைச் சேர்ந்த “ஜமாத் உல் முகாஜுதீன்” பயங்கரவாத அமைப்பும் புதிதாக சதி செயல்களில் ஈடுபட்டு வந்திருப்பது உள்ளூர் போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மலைப் பகுதியில் இந்த இயக்கத்தை சேர்ந்த 2 பயங்கரவாதிகளும் தனியாக வந்து ராக்கெட் லாஞ்சர் சோதனையை நடத்தி இருக்க வாய்ப்பு இல்லை. இதன் பின்னணியில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.பெரிய அளவில் ‘நெட் வொர்க்’ அமைத்து செயல்பட்ட பின்னரே 2 பயங்கரவாதிகளும் கிருஷ்ணகிரிக்கு வந்து சென்றிருக்கலாம் என்று தேசிய புலனாய்வு அமைப்பினர் கருதுகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து ராக்கெட் லாஞ்சரை செலுத்திய 2 பயங்கரவாதிகளின் பின்னணியில் இருப்பவர்கள் யார்-யார் என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்து கைது செய்யப்பட்டவர்களில் தமிழகத்தில்தான் அதிகம் பேர் பிடிபட்டுள்ளனர். இதனால் தேசிய புலனாய்வு அமைப்பினர் தமிழகத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.(15)