செய்திகள்

திங்களன்று கொழும்பு வரும் நிஷா பிஸ்வால் யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்வார்

மூன்று நாள் இராஜாங்க விஜயத்தை மேற்கொண்டு திங்கட்கிழமை கொழும்பு வரவுள்ள தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் யாழ்ப்பாணத்துக்கும் செல்லவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் பதவியேற்ற பின்னர் இலங்கை வரும் அமெரிக்காவின் உயர் மட்ட தலைவரான இவர், தங்கியிருக்கும் போது, அரசாங்க உயர்மட்டப் பிரமுகர்களை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

போருக்குப் பிந்திய நல்லிணக்கம், மற்றும் பெர்றுப்பக் கூறல் தொடர்பாக கொழும்பில், ஆரம்பக் கட்டப் பேச்சுக்களை நடத்திய பின்னர், அவர், வடக்கு மாகாணத்துக்குப் பயணம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் யாழ்ப்பாணத்தில், வடக்கு மாகாணசபையின்  உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்துப் பேசவும் திட்டமிட்டுள்ளார்.