செய்திகள்

பணியாளர் மீது தொடரும் அச்சுறுத்தல்கள்: டிரான்ஸ்பெரன்ஸி சீற்றம்

சர்வதேச ஊழல் மோசடி எதிர்ப்பு அமைப்பான டிரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெஷனல், இலங்கையிலுள்ள தனது கிளையானது தொடர்ந்தும் துன்புறுத்தலுக்கு உள்ளாவதாக கண்டனம் தெரிவித்திருக்கிறது.

தனது பணியாளர்களுக்கு மரண அச்சுறுத்தல்கள் அதிகரித்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் அந்த அமைப்பு விசாரணையை முன்னெடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் டிரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெஷனல் ஈடுபட்டிருக்கிறது. தேர்தல்களை கண்காணிக்கும் பணியிலும் வரவு செலவுத் திட்ட வெளிப்படைத் தன்மை தொடர்பாக உள்ளூராட்சி அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கும் பணியிலும் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது.

அத்துடன் அரச மற்றும் தனியார் துறைகளில் ஊழலை எவ்வாறு வெளிச்சத்திற்கு கொண்டுவருதல் என்பது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான கருத்தரங்குகளையும் இந்த அமைப்பு தொடர்ச்சியாக நடத்தி வருகிறது.

கடந்த சில மாதங்களாக டிரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பின் பிரிவின் மீது அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இந்தப் பிரிவிற்காக பணியாற்றுவோர் தற்காலிகமாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது.

ஆயினும் இந்த விடயத்தில் பாதுகாப்புத் துறை சேவைகள் சிறியளவிலேயே கிடைத்துள்ளன. சிவில் சமூகத்திற்கு பாதுகாப்பளிப்பதற்கான இடத்தை அரசாங்கம் வழங்க வேண்டும். அத்துடன் இலங்கை டிரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெஷனல் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களை கண்டிக்கின்றோம்.

இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக அதிகாரிகள் பேச வேண்டுமெனவும் அச்சுறுத்தல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் நாங்கள் அதிகாரிகளை கேட்டுக் கொள்கின்றோம் என்று டிரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெஷனலின் உதவித் தலைவர் எலினா ஏன்பிலோவா தெரிவித்திருக்கிறார்.

இந்த வருடம் ஊடகவியலாளர் பயிற்சிப் பட்டறைகள் மூன்றும் டிரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெஷனல் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஏனைய இரு நிகழ்வுகளும் வன்முறை அச்சுறுத்தல் மூலம் குழப்பப்பட்டிருந்தன. இலங்கை டிரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெஷனலின் பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கையில் சிவில் சமூகத்திற்கான வெளியை மூடிவிடுவதற்கு அரசாங்கம் சுறுசுறுப்பாக செயற்பட்டு வரும் தருணத்தில் இது இடம்பெற்றிருக்கிறது. கட்டுப்பாடான ஒழுங்குவிதிகளை அறிமுகப்படுத்தப்போவதாக அச்சுறுத்தப்படுகிறது. சிவில் சமூகத்தின் பங்களிப்பானது அதிகாரத்திலிருப்பவரை பொறுப்புக்கூற வைப்பதாகும். இதனை செய்வதற்கு அச்சுறுத்தல் இல்லாமல் இடமளிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.