செய்திகள்

பரபரப்புக்கு மத்தியில் இன்று பாராளுமன்றம் கூடுகிறது : ஆட்சியமைக்கப் போவது யார்?

கூட்டு அரசாங்கம் தொடருமா? அல்லது ஐக்கிய தேசிய கட்சி அல்லது ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் எந்தக் கட்சி அரசாங்கத்தை அமைக்கப்பேகின்றது? என்ற கேள்விகளுக்கு மத்தியில் இன்று திங்கட்கிழமை பாராளுமன்றம் கூடவுள்ளது.
இதன்போது இந்த கேள்விகளுக்கு பதில்கள் கிடைத்துவிடலாம் என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து விலகாது தொடர்ந்தும் பதவியில் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதால் பாராளுமன்றத்தில் குழப்ப நிலைமைகள் உருவாகலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிணை முறி மற்றும் பாரியளலான ஊழல் மோசடிகள் தொடர்பான இரண்டாம் நாள் விவதத்திற்காகவும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கவியல் கோவை , நிலையியல் கட்டளைகள் ஆகியவற்றை நிறைவேற்றும் வகையிலும் இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் பாராளுமன்றம் கூடவுள்ளது.
இதன்போது கட்சித்தாவல்கள் ஏற்பட்டு எந்தத் தரப்புக்கு ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை பலம் இருக்கின்றதென்பது காட்டப்படலாம். என தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சி பக்கத்திற்கோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பக்கமிருந்து ஐக்கிய தேசிய கட்சி பக்கத்திற்கோ உறுப்பினர்கள் கட்சித்தாவல்களில் ஈடுபடலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இதனால் சபையில் பெரும் குழப்ப நிலைமைகள் உருவாகலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி ஐக்கிய தேசிய கட்சியினர் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பார்களாக இருந்தால் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அரசாங்கத்தை அமைத்து புதிய அமைச்சரவையை அறிவிக்கலாம். இல்லையேல் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பெரும்பான்மையை நிரூபித்தால் தற்போதைய பிரதமரை பதவி விலக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து பிரதமராக நிமல் சிறிபால டி சில்வாவை அறிவிக்கலாம். இதன்படி ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை அமைத்தால் எதிர்க்கட்சி தலைவராக தினேஸ்குணவர்தன அறிவிக்கப்படலாம். அதேபோன்று ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கையெடுத்தால் எதிர்க்கட்சி தலைவராக ரணில் விக்கிரமசிங்க அறிவிக்கப்படலாம். என தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் யார் அரசாங்கத்தை அமைக்கப் போகின்றார்கள். என்றோ அல்லது தற்போதைய தேசிய அரசாங்கம் தொடருமா? என்றோ ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவித்தல்கள் எதனையும் விடுக்கவில்லை. அவர்களின் இரண்டு தரப்பினரும் தனித்து அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளமையினால் அவர்கள் இருவரினாலும் அது தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்க முடியாதிருக்கின்ற நிலைமையிலேயே இன்றைய தினம் பாராளுமன்றமும் கூடவுள்ளது.
ஆனால் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 10 உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேநேரத்தில் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த 22 பேரை தங்களுடன் இணைத்துக்கொண்டு தமது அரசாங்கத்தை அமைத்துக்கொள்வதற்கான முயற்சிகளை ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முன்னெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் , ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பூரண இணக்கத்தை வெளியிட்டுள்ளனர். இதன்படி அந்த இரண்டு தரப்பினரும் அந்த முயற்சிகளை கைவிடாது கடந்த சிலநாட்களாக தொடர்ந்தனர்.
பாராளுமன்றத்தில் தற்போது ஐக்கிய தேசிய கட்சிக்கு 106 ஆசனங்களும் , ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 95 ஆசனங்களும் , தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 16 ஆசனங்களும் , ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு ஒரு ஆசனமும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் (தனித்து போட்டியிட்டு பெற்ற ஆசனம்) ஒரு ஆசனமும் உள்ளன. இவற்றில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு ஐக்கிய தேசிய கட்சிக்கு இருப்பதினால் அந்த கட்சிக்கு தற்போது 107 பேர் இருக்கின்றனர். ஆனால் ஐக்கிய தேசிய கட்சி வசமுள்ள 107 உறுப்பினர்களில் விஜேதாச ராஜபக்‌ஷ மற்றும் அதுரலிய ரத்ன தேரர் ஆகியோர் சுயாதீனமாக செல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது. இதனால் அதன் எண்ணிக்கை 105ஆக குறைவடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணத்தினால் கட்டாயமாக எதிர் தரப்பிலிருந்து 8 பேரை தமது பக்கம் இணைத்துக்கொள்ள வேண்டிய கட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி இருக்கின்றது. இதற்காக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து 10பேரை தம் பக்கம் இழுக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேநேரத்தில் அந்த 10 பேரின் ஆதரவு இல்லாது போனாலோ அல்லது தமது அணியிலிருந்து யாரேனும் எதிர்தரப்பு பக்கம் சென்றாலோ தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளித்தால் மட்டுமேன ஐக்கிய தேசிய கட்சியால் ஆட்சியமைக்க முடியும். இதனால் அந்த தரப்புடனும் பேச்சுக்களை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இறுதி வரை அவர்களின் ஆதரவு தொடர்பாக எதுவும் கூற முடியாத நிலைமையே காணப்படுகின்றது.
இதேநேரத்தில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சிமைக்க இன்னும் 18 ஆசனங்கள் தேவையாக இருக்கின்றன. இதற்காக ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து உறுப்பினர்களை எடுக்க முடியுமென சுதந்திரக் கட்சியினர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. இதேநேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்துவிடக் கூடாது என்பதில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் குறியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறாக ஆதரவு கிடைப்பதை தடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் இன்றைய தினம் இது தொடர்பான கேள்விகளுக்கு பதில் கிடைத்துவிடலாம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.-(3)