செய்திகள்

பாடசாலை வளாகத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய விசேட வேலைத்திட்டம்

பாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் ஆலோசனைக்கமைய விஷேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் கல்வி பணியாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் கல்வி அமைச்சுக்கு பாரிய பொறுப்பு உண்டு. இதனால் அனைத்து பெற்றோர் மற்றும் முதியோர் தொடர்பில் கவனம் செலுத்தி பாதுகாப்பு வேலைத்திட்டத்தை அனைத்து தேசிய மற்றும் மாகாண பாடசாலை வளவுகளிலும் அதனை அடுத்துள்ள பகுதிகளில் முறையான வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் 29 ஆம் திகதி திங்கட்கிழமை இரண்டாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக நாட்டில் உள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலை வளவுகள் அதனை அண்டியுள்ள பிரதேசங்களில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இது தொடர்பாக அனைத்து பாதுகாப்பு முக்கியஸ்தர்களுக்கும் அறிவித்துள்ளார். அத்துடன் அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்கவினால் பாடசாலை வளவு மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பாதுகாப்பு படை அதிகாரிகளின் தலைமை அதிகாரி முப்படையினர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். -(3)