செய்திகள்

புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் தடை: இலங்கைக்கு வெற்றி என்கிறார் அஜித் பெரேரா

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் தடையைக் கொண்டுவந்துள்ளமை இலங்கையின் புதிய அரசுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய ராஜாங்க வெற்றி என அந்நாட்டின் வெளியுறவுத் துறைக்கான புதிய துணை அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் மீது தடை ஏற்படுத்துவது குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே மேற்கொள்ளப்பட்ட தொடர்பாடல் மற்றும் பேச்சுக்களை அடுத்து விடுதலைப்புலிகள் இயக்கம் மீது ஐரோப்பிய ஒன்றியம் சில நாட்களுக்கு முன் மீண்டும் தடையைக் கொண்டுவந்திருந்தது.

விடுதலைப்புலிகள் மீதான ஐரோப்பியத் தடை இலங்கை அரசாங்கத்துக்கு மாத்திரமல்ல சர்வதேச அளவிலுமேகூட அது முக்கியமான விடயம் என அஜித் பெரேரா கூறினார்.

“உள்நாட்டில் மீளிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாக இலங்கை அரசு செயற்படும் வேளையில், பயங்கரவாதத்துக்கு எதிராக அது செயல்படுவதென்பதும் மிகவும் முக்கியம், எனவே தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தப் புதிய தடையும் முக்கியம்தான்”

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை நீக்கி ஐரோப்பிய நீதிமன்றம் கடந்த வருடம் தீர்ப்பளித்திருந்தது.

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான முன்னைய அரசாங்கத்தின் இராஜதந்திர செயற்பாடுகளில் காணப்பட்ட குறைபாடுகளே ஐரோப்பிய ஒன்றியம் கடந்த வருடம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதிருந்த தடை நீக்கப்பட காரணமாயிருந்தது என அஜித் பெரேரா கூறினார்.

ஆனால் புதிய அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றின் தலையீடு காரணமாகவே, விடுதலைப்புலிகள் மீது மீண்டும் தடை வந்துள்ளது என்றும் துணை அமைச்சர் அஜித் பெரேரா குறிப்பிட்டார்.