செய்திகள்

புலி சந்தேக நபரை கொன்ற இராணுவ மேஜர் விடுதலையாவரா?

பருத்தித்துறை பகுதியில் 1998 காலப்பகுதியில் இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட் டிருந்த விடுதலைப் புலி சந்தேக நபர் ஒருவர் மீது துப்பாக்கி நடத்தி அவரை கொன்ற குற்றச்சாட்டில் அண்மையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ மேஜர் தரப்பினர் விடுதலை கோரி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பாராக இருந்தால் அதனை பரிசீலிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கின்றோம்.. அவர் தரப்பிலிருந்து இது வரை அரசாங்கத்திற்கோ அல்லது ஜனாதிபதிக்கோ எந்த கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை. அவ்வாறு முன்வைக்கப்படுமாகவிருந்தால் அது தொடர்பாக ஆராய தயார்.என அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த கொலை சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு அண்மையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட  போது சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் இராணுவ மேஜருக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் பாதிக்கப்பட்ட தரப்புக்கு 20 இலட்சம் ரூபா நஷ்ட ஈடும் வழங் வெண்டுமென நீதிமன்றம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   -(3)