செய்திகள்

புளொட் அமைப்புக்குள் பிளவு? தமது கட்சி அமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உயர்பீட உறுப்பினர்

புளொட் அமைப்புக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதுடன் தமது கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு விவசாய அமைச்சருக்கு எதிராக புளொட் அமைப்பின் உயர் பீட உறுப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் தெ.யோகேஸ்வரன் அவர்களுக்கு வடமாகாண விவசாய அமைச்சினால் இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது. இந்த இடமாற்றத்தை தடுத்து நிறுத்துமாறு பிரதி விவசாய பணிப்பாளர் பலரதும் உதவியை நாடியிருந்தார். இந்நிலையில் பிரதி விவசாய பணிப்பாளருக்கு சார்பாக குறிப்பிட்ட சில அமைப்புக்களைச் சேர்ந்த சிலர் வடக்கு விவசாய அமைச்சர் மற்றும் வடமாகாண முதலமைச்சர் ஆகியோரை சந்தித்தித்து இருந்தனர்.

இந்த சந்திப்புக்களில் பிரதி விவசாய பணிப்பாளர் சார்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாகிய புளொட் அமைப்பின் உயர்பீட உறுப்பினரும், செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினருமான ஜெகதீஸ்வரன் (சிவம்) அவர்களும் கலந்து கொண்டிருந்தார். தமது கட்சியைச் சேர்ந்த வடக்கு விவசாய அமைச்சர் க.சிவநேசன் தமது கோரிக்கைக்கு சாதகமான பதில் வழங்காததையடுத்து இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு புளொட் அமைப்புக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதன் தொடர்ச்சியாக, புளொட் உயர்பீட உறுப்பினர் அவர்களின் இணை ஏற்பாட்டில் நேற்றைய தினம் வடக்கு விவசாய அமைச்சர் மற்றும் முதலமைச்சர் ஆகியோருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரே கட்சியைச் சேர்ந்த அமைச்சருக்கு எதிராக அதே கட்சி உயர்பீட உறுப்பினர் ஆர்ப்பாட்டத்தில் முன்னின்று செயற்பட்டமை கட்சிக்குள் உள் முரண்பாடுகளை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளதாக தெரியவருகிறது.

N5