செய்திகள்

பொலிசார் எமது கட்டுப்பாட்டுக்குள் இல்லை, குற்றச்செயல்களைத் தடுக்கும் அதிகாரம் எம்மிடம் இல்லை-சீ.வி.விக்னேஸ்வரன்

வடபகுதியில் வாழுகின்ற மக்கள் ஏனைய பகுதிகளில் வாழுகின்ற மக்களின் தேவைகளை விட அதிக அளவு தேவைகளையுடையவர்கள். போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் பல தேவைகளை அவர்கள் கொண்டவர்களாக காணப்படுகின்றார்கள். எமது மக்களில் பலர் போரின் விளைவாக உயிர் இழப்புக்களையு சந்தித்தது ஒருபுறமிருக்க, பொருள் பண்டங்கள், வீடு வளவுகள் என அத்தனையையும் தொலைத்துவிட்டு நடைப்பிணங்களாக யுத்த வடுக்களை உடல்களிலும் உள்ளங்களிலும் சுமந்தவர்களாக சுற்றித்திரிவது எமக்கு மிகுந்த மனவருத்தத்தை தருகின்றது.

போர் முடிந்து அடுத்த மே மாதம் 10 வருடங்கள் ஆகப் போகின்றது. இன்னமும் எம்மைப் போர்க்கால மக்களாகப் பார்த்து இராணுவ கண்காணிப்பை முடுக்கி வைத்து வருவது எம் மேல் நம்பிக்கை இன்மையைக் காட்டுகின்றது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

‘உத்தியோகபூர்வப் பணி’ ஜனாதிபதி மக்கள் சேவையின் 8வது வேலைத்திட்டம் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு இராணுவம் அவசியமானது. தமது சொந்த நாட்டை ஏனைய நாடுகளின் ஆக்கிரமிப்புக்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளில் இருந்து பாதுகாப்பதற்கும் உள்நாட்டில் அமைதியான சூழ்நிலையை உருவாக்குவதற்கும் இராணுவத்தின் பணி அவசியமானது. ஆனால் எமது பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும்,உணவகங்களை நடத்துவதற்கும், காணிகளைத் தம் வசப்படுத்தி வைத்திருப்பதற்கும்,குளங்களைப் புனரமைப்புச் செய்வதற்கும் இராணுவ வீரர்களின் சேவைகள் தேவைப்படமாட்டாது.

போர் முடிந்து அடுத்த மே மாதம் 10 வருடங்கள் ஆகப் போகின்றது. இன்னமும் எம்மைப் போர்க்கால மக்களாகப் பார்த்து இராணுவ கண்காணிப்பை முடுக்கி வைத்து வருவது எம் மேல் நம்பிக்கை இன்மையைக் காட்டுகின்றது.

படிப்படியாக இராணுவ பிரசன்னத்தைக் குறைப்பதாக அரசாங்கம் உத்தரவாதம் தந்திருப்பினும் அது நடைபெறாமலே இருக்கின்றது. மாறாக குற்றச் செயல்கள் இங்கு கூடியுள்ளன. அவற்றைத் தடுக்க எமக்கு அதிகாரங்கள் தரப்படவில்லை.

பொலிசார் எமது கட்டுப்பாட்டுக்குள் இல்லை. இராணுவம் வெளியேறி பொலிஸ் அதிகாரம் எமக்குக் கையளிக்கப்பட்டால் இன்றைய வன்முறைக் கலாச்சாரத்தை வடக்கில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது ஒரு பெரிய காரியமன்று. உள்ளூர் வாசிகளை ஆட்கொண்டு வெளியூர்வாசிகள் தமது காரியங்களைச் சாதித்துக் கொள்ள எமது மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள்.

இராணுவ அதிகாரிகள் மீதோ, போர் வீரர்கள் மீதோ எந்தவிதமான காழ்ப்புணர்ச்சியும் எனக்கு இல்லை. இராணுவ உயர் அதிகாரிகளுடன் நான் சிறந்த உறவை வெளிப்படையாகக் கொண்டிருக்கின்றேன். ஆனால் கொள்கை அடிப்படையில் படையினர் முன்னெடுக்குஞ் செயற்பாடுகள் கபட நோக்கங்கள் கொண்டிருக்கக் கூடாது.

எமது எதிர்பார்ப்புக்களை நன்கறிந்து எமது மனோ நிலைகளை நன்கு புரிந்து, நீங்கள் இப் பகுதி மக்கள் தொடர்பாக, அவர்களின் பிரச்சனைகள் தொடர்பாக இப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பாக உயர் அதிகாரிகளுடனும் மக்கள் பிரதிநிதிகளுடனும் தொடர்ந்து வெளிப்படையாக பேச்சுக்களை முன்னெடுங்கள்.

அவற்றின் அடிப்படையில் எமது பிராந்தியத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கள் சிதைவுறா வகையில்,பாரம்பரியங்கள் பழுதுறா வகையில், கலாசார சீரழிவுகள் நடைபெறா வகையில் உயரிய திட்டங்களைத் தீட்டி எம் மக்களுக்கு உதவ முன்வாருங்கள் என வினயமாக வேண்டி எனது உரையை இந்த அளவில் நிறைவு செய்கின்றேன் என கூறியுள்ளார்.(15)