செய்திகள்

யானை பசிக்கு சோளப் பொறி போல உயர்ந்துள்ள சம்பள அதிகரிப்பு – பெரியசாமி பிரதீபன்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தனியான ஆட்சியில் இருந்திருந்தால் பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை கட்டாயமாக பெற்றுக்கொடுத்திருக்கும். அவர்களை ஒருகாலமும் அரசியல் இலாபத்திற்காக ஏமாற்றியிருக்காது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும், மஸ்கெலியா பிரதேச சபையின் பிரதி தவிசாளருமான பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.

அட்டனில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரியாலயத்தில் 27.01.2019 அன்று மதியம் இடம்பெற்ற ஊடாகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இன்று ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை வழியுறுத்தி அணைவரும் போராடி வந்தநிலையில் 750 ரூபாய் என்ற அடிப்படை சம்பளத்திற்கு முடிவு காணப்பட்டுள்ளது.

ஆனால் ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்று தருவதாக 2015ல் கூறப்பட்டது. இந்த கூற்றினை இன்றைய அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். அரசியல் இலாபம் கருதி அன்று தெரிவிக்கப்பட்ட இந்த கூற்று இன்று வரை இழுபறி நிலைக்கு வந்தும் முடிவு பெறாமல் இருக்கின்றது.

தோட்ட தொழிலாளர்கள் மீது கரிசனை கொண்ட பிரதமராக இருந்திருந்தால் அவர்களின் இன்றைய வாழ்க்கை நிலையை அறிந்து ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை ஆளும் ஐக்கிய தேசிய கட்சி தலையீட்டு பெற்றுக்கொடுத்திருக்க முடியும்.

மாறாக அக் கட்சியில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் ஊடாக நாடகம் அரங்கேற்றப்பட்டு அல்லது அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்த 750 ரூபாய் சம்பள ஒப்பந்தம் செய்யப்படுகின்றதா என்ற சந்தேகம் நிலவுகின்றதாக அவர் தெரிவித்தார்.

முதலாளிமார் சம்மேளனத்திற்கு ஆதரவாக செயல்பட்ட அமைச்சர் நவீன் திஸாநாயக்க இந்த சம்பள ஒப்பந்தத்தில் அரச தரப்பாக செயல்பட்டு நான்கு மாதங்களுக்கான நிலுவை கொடுப்பனவை தேயிலை சபையின் ஊடாக வழங்க முடியும் என்றால் தொழிலாளர்களின் சம்பள உயர்வை தேயிலை சபையின் ஊடாக வழங்கவும் இவர் முன்வந்திருக்க வேண்டும்.

இந்த விடயத்தில் நிலுவை தொகையை வழங்க கூடிய கம்பனிகளை காப்பாற்றும் விதத்தில் தேயிலை சபையின் ஊடாக இத்தொகையை வழங்குவதற்கு இவர் முன்வந்துள்ளார்.

இன்று 500 ரூபாய் அடிப்படை சம்பளமாக இருந்த நிலையில் 200 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 700 ரூபாவும், ஒரு கொடுப்பனவாக 50 ரூபாவும்  இணைத்து 750 ரூபாவாக அடிப்படை சம்பளம் வழங்கப்படவுள்ளது.

இதில் வரவுக்கு ஏற்ற கொடுப்பனவு என்ற வகையில் முன்னர் வழங்கப்பட்ட 140 ரூபாய் இப்போது இல்லை. ஆனால் விலைக்கு ஏற்ற கொடுப்பனவு 30 ரூபாவாக வழங்கப்பட்ட தொகை 20 ரூபாவால் அதிகரித்து 50 ரூபாவாக மாற்றம் பெற்றுள்ளது. இது ஒருபுறம் இருக்க அனைத்து கொடுப்பனவுகளுடன் 730 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்ட நிலை மாறி 750 ரூபாய் சம்பளம் அடிப்படையாக வழங்கப்படவுள்ளது.

20 ரூபாய் சம்பள அதிகரிப்பு கிடைத்துள்ளது என சுட்டிக்காட்டிய இவர் தொழிலாளர் மக்களின் சம்பள விடயத்தில் தொடர்ந்தும் மௌனம் சாதித்து வந்த நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் என்ற வகையில் முதலாளிமார் சம்மேளனத்திற்கு அழுத்தம் கொடுக்காத நிலையிலேயே ஆயிரம் ரூபாய் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படாமல் போயுள்ளது. அதேநேரத்தில் தொழிற்சங்க முரண்பாடுகளை கலைத்து குறித்த ஆயிரம் ரூபாய் இலக்கை எட்ட ஒன்றிணைந்து போராட ஸ்ரீலங்கா சுதந்திர சங்கம் என்ற வகையில் நான் அழைப்பு விடுக்கின்றேன்.

யானை பசிக்கு சோளப் பொறி போல உயர்ந்துள்ள இந்த சம்பளம் மக்களுக்கு ஏற்புடைய ஒன்றல்ல. இது எதிர்வரும் தேர்தலில் மக்களை ஏமாற்ற ஐக்கிய தேசிய கட்சியினர் ஏற்படுத்திய ஒரு கபட நாடகம் என அவர் தெரிவித்தார்.