செய்திகள்

வடகிழக்கு இணைப்பு கட்டாயம் வேண்டும் : மட்டக்களப்பில் சிவில் அமைப்புகள் கோரிக்கை

இலங்கையில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் யாப்பில் வடகிழக்கு இணைப்புடன் கூடிய சமஷ்டி அதிகாரத்தினை தமிழ் பேசும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை சிவில் சமூக அமைப்புக்கள் மீண்டும் முன்வைத்துள்ளனர்.

இன்று மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் நடைபெற்ற அரசியல் யாப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதத்தின் போதே மேற்படி விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களில் ஒன்றியமான இணையம் மற்றும் எகட் ஹரிதாஸ் அமைப்பு என்பன இணைந்து இந்த கலந்துரையாடலை ஏற்பாடுசெய்திருந்தன.
அங்கு மேலும் நடைபெற்ற கலந்துரையாடலில் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான அருட்தந்தை யோகேஸ்வரன் உட்பட மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.
இலங்கையில் இதுவரை மூன்று அரசியல் யாப்புக்கள் நடைமுறையில் இருந்துள்ளது இதில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே எழுப்பப்பட்டு வருகின்றது.
பிரித்தானியரினால் தயாரிக்கபட்ட முதலாவது சொல்பரி யாப்பின் போது சிறுபான்மையின மக்கள் தங்களுடைய பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பிய போது குறித்த யாப்பின் 19 வது சரத்தில் சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படுத்தும் சட்டங்கள் நிறைவேற்றப்படக் கூடாது என்ற விடயம் உள்வாங்கப்பட்டிருந்தது.
ஆனால் அதன் பிறகு வந்த யாப்புக்கள் தொடங்கி அதனை நடைமுறைப்படுத்திய அரசாங்கள் அனைத்தும் தொடர்ச்சியாக சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்கும் உரிமைகளுக்கும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் நாடு பாரிய யுத்தத்தை எதிர்கொண்டதனால் தற்போது புதிய யாப்பிற்கான தேவை உணரப்பட்டு அதற்கான வேலைகள் இடம்பெற்று இன்று இடைக்கால அறிக்கை வெளியாகியுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

DSC06260 DSC06267 DSC06270 DSC06273