செய்திகள்

வவுனியா வடக்கு கிராமத்தின் பெயரை ‘லைக்கா ஞானம் கிராமம்’ என பெயர் மாற்றிய விவகாரம் மாவட்ட அபிவிருத்திக் குழுவிற்கு செல்கிறது!

வவுனியா வடக்கில் கிராமத்தின் பெயரை மாற்றி லைக்காவின் பெயரை சூட்டியது தொடர்பான இறுதி முடிவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்க வேண்டும். கிராமத்தின் பெயரை மாற்றுவதை ஏற்க முடியாது வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு சின்னடம்பன், இராசபுரம் பகுதியில் லைக்கா ஞானம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த மக்களுக்கு வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டன. அப்போது குறித்த கிராமத்தின் பெயரை லைக்கா ஞானம் அறக்கட்டளையினர்’ லைக்கா கிராமம்’ எனப் பெயர் மாற்றி நடுகைக் கல் நடப்பட்டுள்ளதாக கடந்த முறை நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டு அந்த நடுகைக் கல்லை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச சபையிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் முன்னேற்றம் குறித்து இன்று நடைபெற்ற கூட்டத்தில் கேட்ட போது வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் ப.சத்தியசீலன்,

தாம் குறித்த இராசபுரம் கிராமத்தின் பெயரை மாற்றி வீதிகளில் லைக்கா ஞானம் கிராமம் என நிறுவப்பட்டுள்ள நடுகைக் கற்களை அகற்றுமாறு எழுத்து மூலம் குறித்த அமைப்புக்கு அறிவித்து இருந்ததாகவும், அவர்கள் தாம் மீள்குடியேற்ற அமைச்சர், வீதி அபிவிருத்தி அதிகார சபை, மாவட்ட அரச அதிபர் ஆகியோரின் ஒப்புதல் பெற்றே நிறுவியுள்ளதாக பதில அனுப்பி ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளனர். இருப்பினும் குறித்த பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் எமது வவுனியா வடக்கு பிரதேச சபையிடம் அனுமதி பெறவில்லை என நாம் தெரிவித்து அதனை அகற்றுமாறு தெரிவித்திருக்கின்றோம். அவர்கள் அகற்றாத பட்சத்தில் நாம் சட்ட நடவடிக்கைக்கே செல்ல வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதன்போது பதில் அளித்த வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர் ஜா..ரி.லிங்கநாதன், செ.மயூரன் ஆகியோர் அவ்வாறு கிராமத்தின் பெயரை மாற்ற அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்ததுடன், இதனை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு எடுத்துச் சென்று அப் பெயர் பலகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனை பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், வடக்கு சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராசா, இ.இந்திரராசா ஆகியோரும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டதையடுத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு குறித்த விவகாரம் செல்கிறது.

DSC_0094 (1) DSC_0092 (1)

N5