செய்திகள்

வேட்பாளர்களின் பின்னால் சென்று பேச்சு நடத்த நாம் தயாரில்லை -எம்.ஏ.சுமந்திரன்

தமிழ் மக்களின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள 13 அம்சக் கோரிக்கைகள் எமக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்த கோரிக்கைகள் தொடர்பில் பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவருடனும் பேச நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம்.ஆனால் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சு நடத்த நாம் தயாரில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழர் பிரதிநிதிகளாகிய எமது நிலைப்பாடு என்ன என்பதை அறிந்துகொள்ள பிரதான கட்சிகள் ஆவலாக உள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு தினமான 31 ஆம் திகதிக்கு முன்னர் எமது நிலைப்பாட்டை அறிவிப்போம். அதற்கிடையில் நாம் ஐந்து தமிழ் கட்சிகளும் மீண்டும் இந்த வாரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.அத்துடன் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுகொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.(15)