செய்திகள்

100 நாள் திட்டம் நகைச்சுவையாகவே முடிவடைந்துள்ளது : அனுர பிரியதர்ஷன யாப்பா

அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் பாரிய நகைச்சுவையுடன் நிறைவடைந்துள்ளது. எமது ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை திறந்து வைப்பதையே 100 நாள் திட்டத்தில் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் –

அரசாங்கம் பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துவிட்டன. எம்மை பொறுத்தவரை 100 நாள் வேலைத்திட்டம் நகைச்சுவையாகவே முடிவடைந்துள்ளது. 100 நாட்களில் பல திறப்பு விழாக்களை செய்துள்ளனர்.

ஆனால் எமது அரசாங்க காலத்தில் ஆரம்பித்து செய்யப்பட்ட வேலைத்திட்டங்களை இந்த அரசாங்கம் 100 நாட்களில் திறந்து வைத்துள்ளது. குறிப்பாக பின்னவலை திறந்த மிருகக்காட்சிசாலை எமது அரசாங்கத்தின் காலத்தில் உருவாக்கப்பட்டது. அதனை 100 நாள் அரசாங்கம் திறந்து வைத்துள்ளது. நல்லாட்சி என்று கூறுகின்றனர். ஆனால் நல்லாட்சியில் இவ்வாறு செய்வது நல்ல விடயமாக தெரியவில்லை எனவும் தெரிவித்தார்.