செய்திகள்

19 ஆவது திருத்தம் தொடர்பான விவாதம் அரசியலமைப்புக்கு முரணானது: ஜி.எல். பீரிஸ்

19 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் சம்பந்தமாக எதிர்வரும் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறும் விவாதம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடந்த நிகழ்வொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் சம்பந்தமாக 9 ஆம் திகதியும் 10 ஆம் திகதியும் விவாதம் நடத்தப்படவுள்ளது.

இந்த விவாதம் நாட்டின் இன்றைய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்பதுடன் மக்களின் உரிமைகளை மீறும் செயல் என ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளார். இந்த விவாதம் நடத்தப்படுவதற்கு எதிராக தான் உட்பட எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவை சந்தித்து விளக்க உள்ளதாக முன்னாள் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நிறைவேற்று அதிகாரத்திற்கு மேலும் அதிகாரங்களை வழங்கி சர்வாதிகார ஆட்சியாளராக உருவெடுக்கும் வகையில் கொண்டு வந்த 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கி அதனை நிறைவேற்றக் காரணமாக இருந்தவர்களில் ஒருவரான ஜீ.எல். பீரிஸ் ஜனநாயகத்திற்கு சற்று வழியைத் திறக்கும் 19 ஆவது திருத்தச்சட்டத்தை எதிர்ப்பது ஆச்சரியமளிப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.