சைற்றம் பிரதான நிறைவேற்று பணிப்பாளரின் கார் மீதான சூட்டு சம்பவம் அவரே செய்ததாம் : விசாரணையில் தெரியவந்தது
மாலபே சைற்றம் தனியார் மருத்துக் கல்லூரியின் பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளரின் கார் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்டிருந்த துப்பாக்கி சூட்டு சம்பவமானது அவராலேயே செய்யப்பட்டது என பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது அவர் பொலிஸாரினால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவதுடன் அந்த துப்பாக்கி சூட்டை நடத்தியவர்கள் இருவர் தொடர்பான தகவல்களையும் பொலிஸார் அறிந்துள்ளனர். அத்துடன் இதனுடன் பிரதேச அரசியல்வாதியொருவரும் தொடர்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.
குறித்த கார் மீது துப்பாக்கி சூட்டை நடத்திய பின்னர் அந்த காரில் காணப்படும் சூட்டு அடையாளங்களை அடிப்படையாக கொண்டு அந்த காரின் சாரதி ஆசனத்தில் யார் இருந்திருந்தாலும் அவர்களுக்கு நிச்சயம் காயம் ஏற்பட்டிருக்க வேண்டுமெனவும் இதன்படி யாருக்கும் காயம் ஏற்படாதிருந்தமை சந்தேகத்திற்கு உரியது எனவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் காரில் சாரதி ஆசனத்தில் இருந்ததாக கூறப்படும் நிறைவேற்றுப்பணிப்பாளர் வெளிநாட்டுக்கு சென்றிருந்த நிலையில் தற்போது மீண்டும் நாடு திரும்பி பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)




