செய்திகள்

சைவதூஷண பரிகாரமாக கந்தபுராணம்

மருத்துவர் சி. யமுனாநந்தா

உலகில் வெவ்வேறு யுகங்கள், மன்வந்தங்கள், கற்பங்களில் நிகழ்ந்தவைகளை மக்களை அறநெறிப்படுத்துவதற்காக அருளப்பட்டதே வேதங்கள். உலகில் அறம் மருகியபோது வேதநெறிகள் மீறப்பட்டபோது திருமால் சிவனிடம் முறையிட, சிவனருளால் திருமால் பூலோகத்தில் விசயர் என்ற முனிவராக அவதரித்து வேதங்களை தனது சீடர்களுக்கு அருளினார். இவற்றுள் பத்து சிவபுராணங்களாகவும், விஸ்ணு புராணங்களாக நான்கும், பிரம புராணங்களாக இரண்டும், சூரிய புராணமாக ஒன்றும், அக்கினி புராணமாக ஒன்றும் ஆக பதினாறு புராணங்கள் வடமொழியில் அமைந்துள்ளன. சிவபுராணங்களில் ஒன்றே கந்தபுராணமாகும். வடமொழியில் அமைந்த கந்தபுராணத்தை கச்சியப்ப சிவாச்சாரியார் தமிழில் நல்கினார்.

இன்றைய விஞ்ஞான ஆய்வுகள் அண்டவெளியில் தகவல்கள் யாவும் ஒலியலைகளாகச் சேமிக்கப்படலாம் என்பதனை உறுதிப்படுத்தி உள்ளது. அவ்வாறே தெய்வபாசை எனப்படும் சமஸ்கிருத ஓசையிலே வெவ்வேறு மன்வந்தரங்களில் நிகழ்ந்தவைகளை விளக்கி சிவதத்தவத்தினைத் தனது சீடர்களுக்கு வேதவியாசர் அருளினார். இதில் மெய்ஞானத்திற்கு முதன்மையானது அசபை யோகநிலையாகும்.

கந்தபுராணப் பாடல்களைக் கற்கும்போது வெவ்வேறு காலங்களில் நிகழ்ந்தவைகளை ஒரு கணத்தில் காண்பது காலாக்கினி அல்லது காலகண்டம் எனலாம். இது இன்றைய விஞ்ஞானத்தில் காலஒடுக்கம் (Time Wrapping) எனக் கூறப்படுகின்றது. காலத்தின் படைப்பினை காலகண்ட உருத்திரன் மேற்கொள்வதாக சிவமூர்த்த மகிமை கூறப்படுகின்றது. இதனைக் காலாக்கினீசுவர் எனவும் காணலாம்.

கோர மிக்குயர் நூறு பத்தாயிரகோடி
சார தத்தொகை சூழ்தரச் சதுர்முகன் முதலோர்
ஆருமச்சுறச் சரபமாய் வந்தருள் புரிந்த
வீரபத்திர வுருத்திரன் வந்தனன் விரைவில்.
(கணங்கள் செல் படலம் 7)

இங்கு வெவ்வேறு கற்பங்களில் நிகழ்ந்த சம்பவங்கள் ஒருங்கே கூறப்பட்டுள்ளன. இதுவே ஆதி பௌதீகம், ஆதி தெய்வீகம் மற்றும் ஆதி ஆன்மீகமாகும். அதி உன்னத யோகநிலையிலேயே இவ்வாறான வெவ்வேறு கற்ப நிகழ்வுகள் ஒருங்கே மெய்யுணரப்படும். காலத்தின் வெவ்வேறு புள்ளிகளை கந்தபுராணத்தில் ஒருங்கே காணலாம்.

வெவ்வேறு கற்பங்கள், மனவந்தரத்தில் ஒளியின் வேகம் வேறுபடும். ஈர்ப்பு அலைகளின் வேகம் வேறுபடும். பிரபஞ்சப் பிரக்ஞை வேறுபடும். சரம் என்ற பிரபஞ்சமும் அசரம் என்ற மாற்றுப் பிரபஞ்சமும் காணப்படும். பிரபஞ்சத்தில் பல புவனங்கள் காணப்படும். இதில் அனாசிருதை முதல் காலாக்கினியீறாகிய 224 புவனங்களும் புத்தியட்டகம் என்னும் எட்டு சூக்கும புவனங்களும் அடங்கும். சூக்கும புவனங்களாவன பைசாசகம், இராச~ம், யா~ம், காந்தரூவம், மகேந்திரம், சௌமியம், பிராசேசுவரம், பிராமம் என்பனவாகும். இதனைக் கந்தபுராணத்தி;ல் காணலுறலாம்.

இத்திறத்தரா முருத்திரர் அல்லதையேனை
மெத்து பல் புவனங்களு மளித்த வண்மேவி
நித்தன் அன்புறும் உருத்திர கணங்களும் நெறிசேர்
புத்தி யட்டக முதல்வரும் வந்தனர் பொருப்பில்.
(கணங்கள் செல் படலம் 10)

சில மன்வந்தரத்தில் ஆறுகள், மலைகள், நட்சத்திரங்கள், கடல்கள் என்பனவும் உயிர்த்தன்மை பெறும் இதனைக் கந்தபுராணத்தில் காணலாம்.

மேதகு பொலஞ்சுடர் மேரு மந்தரம்
ஆகிய வாகிய அலகில் சுற்றமும்
ஒதருங் கடல்களும் உரக வேந்தரும்
மாதிர யானையும் பிறவும் வந்தவே.
(வரைபுனை படலம் 33)

பார்வதி திருமணத்திற்கு மேருமலை, ஆறுகடல், யானைகள் வந்தமை கூறப்பட்டுள்ளது. இன்று நாம் கடலில் சில விலங்கினங்கள் பாறைகளாக அசைவது போல் வெவ்வேறு மன்வந்தரத்தில் உயிரினங்கள் மலைகளாக கிரௌவுஞ்சமலை, ஆறுகளாக கங்கை, யமுனை, காவேரி என்பனவும் அமைந்திருந்தன.

போதலு மதனை நோக்கிப் பொற்றொடி யாகிநின்ற
சீதர னமலன்றன்பாற் சேறலுந் தொடர்ந்து பின்னர்
மாதவர் யாரும் போந்தார் மற்ற தனியல்பு நோக்கி
னே தமில் கங்கை பாலாம் யமுனையைக் கடுத்ததன்றே.

கங்கை யமுனை சங்கமம் சிவன் மால் சங்கமத்தின் உட்பொருளாம். இஃதே ஐயனார் உற்பவம் யமுனையில் உமாதேவியார் வலம்புரிச் சங்காக அமைந்து தக்கனுக்கு மகளாக அருளப்பட்டாள். கங்கை யமுனை திரிவேணி சங்கமம் பிரளயகால வைரவக் கடவுளின் உற்பவமாகும். அதாவது அந்திமகாலமாக காசி வைரவர் அருளுகின்றார்.

உடலின் நவத்துவாரம் உட்பட வியர்வைத் துவாரங்களும் சில கற்பங்களில் ஆறுகளாக அமையும். இதனை கந்தபுராணம் திருநகரப்படலம் 76வது செய்யுளில் காமதேனுவில் இருந்து பாலியாறு உருவாகி காஞ்சி மாநகரில் அணிசெய்வது கூறப்பட்டுள்ளது.

பங்கமில் வசிட்டன் பசுப்பொழி பாலி படர்ந்திடு முத்தரஞ் சேயைச்
செங்கம லத்தோன் முதலினோ ராட்டுந் திருநதி தென்றிசைச் செல்லும்
அங்கவற் றிடையே கம்பமே செல்லும் முதலா மாலயத் தந்திடு வேதி
கங்கை காளிந்தி யிடைப்படுந் தலத்தின் முற்படுங் காஞ்சிமா நகரம்.
(திருநகரப்படலம் 76)

மறைகள், ஆகமங்கள், பூதங்கள், நகர்கள், காலங்கள் ஏனைய பொருட்கள் எல்லாம் பிரக்ஞை உடன் கையிலையினை அடைந்தமை பிரபஞ்ச அதிர்வாகும்.
வாலிதாகிய மறைகள் ஆகமங்கள் மந்திரங்கள்
ஞாலமாதிய பூதங்கள் உலகங்கள் நகர்கள்
காலமானவை ஏனைய பொருளெல்லாங் கடவுட்
கோல மெய்தி வந்திறுத்தான கயிலைகுறுகி.
(கணங்கள் செல்படலம் 17)

சிவனின் குண்டலினி சக்தியில் திருமாலின் குண்டலினி சக்தியும், பிரமாவின் குண்டலினி சக்தியும் அடங்குகின்றன. இதனை அடிமுடிதேடு படலப் பாடல் மூலம் உணரக்கூடியதாக உள்ளது.

நின்றானொருபா னெடுமாலது நிற்க யான்முன்
பின்னா வகையாற் பெருஞ் சூளிவை பேசிவானிற்
சென்றாயிர மாண்டு திரிந்து திரிந்து நாடிக்
குன்றாத சோதிக் கொழுந்தின் றலை கூடலேன் யான்
(அடிமுடி தேடு படலம் 75)

“சென்றாயிரமாண்டு திரிந்து நாடி” என்பது காலத்தின் ஒடுக்கத்தினையும் (Time wrap up) அடிமுடி காணவொண்ணா சிவலிங்கம் ஒளியின் ஒடுக்கத்தினையும் (Light wrap up) சிவலிங்கக் காட்சி அண்ணாமலையான வெளியின் ஒடுக்கத்தினையும் (Space wrap up) எமக்கு எடுத்துக் காட்டுகின்றது.

காலமும் ஒளியலை போன்றது என்பதை காலத்தீ எனவும் பிரளய அழிவு சூலத்தீ எனும் ஒளியலையாகவும் ஆக்கத்திற்குரிய தீயாக மூலத்தீ எனும் ஒளியலையும் வெவ்வேறு இடங்களை காலம் கடந்து இணைக்கும். (Wormhole) ஆக பாலத்தீ எனும் ஒளியலையும் அமைவதனை கந்தபுராணத்தில் காணலாம்.

பாலத்தீப் பொழி விழியுடைப் பஞ்சவத்திரனே
மூலத்தீப்புரை விடைப் பெருங்கேதுவே முதலாஞ்;
சூலத்தீக் கரத்தாயிற் கோடியோர் சூழக்
காலத்தீப் பெயர் உருத்திரன் வந்தனன் கடிதில்.
(கணங்கள் செல்படலம் 4)

இன்றைய பௌதீகத்தில் கருச்சக்தியின் பரிமாணத்தை அறிவதற்கான ஆய்வுகூடப் பரிசோதனைகளும் அணுவினை சக்தியாக மாற்றும் ஆய்வுகளும் செய்யப்படுகின்றன.

கந்தபுராணத்தில் கிரவுஞ்சப்படலம் பாடல் மூன்றில் அணுவினை மலையாக்கவும், மலையினை அணுவாக்கவும், கடலை புவனமாக்கவும், பிரளயத்தீயை பிரளய நீராக்கவும் முடியும் என்பதைக் காணலாம்.

அணுவினை மேருவாக்கும் அன்னதோர் மேருவெற்பை
நுணுகிய அணுவே யாக்கும் நொய்தெனப் புவனிதன்னைப்
புணரிய தாக்கும் நேமிப் புணரியைப் புவனமாக்கும்
இணருறு நேமித்தீயை எல்லை நீராகச் செய்யும்
(கிரவுஞ்சப் படலம் – 3)

புராணங்கள், இதிகாசங்கள், பிரபஞ்சத்தில் வெவ்வேறு காலங்களில் அதாவது கற்பங்களில் நிகழ்ந்த சம்பவங்களை எமக்கு வழிகாட்டுவதற்காக சிவ அருளாளர்களால் கிடைக்கப் பெற்றவை. இவை வேதவியாசரால் வேதங்களாக முனிவர்களுக்கு அருளப்பட்டது. சிவனது அசபை ஞானத்தை நேரடியாகப் பெற்ற சனகர், சனாதனர், சனந்தனர், சனற்குமாரர் மூலமும் திருநந்தி தேவர் மூலமும் இவை மென்மேலும் உபதேசிக்கப்பட்டது. அவ்வாறே இவர்கள் அருளால் ஆகமங்களும் அருளப்பட்டன. ஆகமங்களின் சாரத்தினை தமிழில் திருமூலர் திருமந்திரமாக அருளினார். இவையே சைவமெய்யியல் சாரம் ஆகும். இவற்றை நாம் தொகுக்கலாம், விரிக்கலாம், ஓம் சிவசிவ எனச் சுருக்கலாம் ஆன்மாக்களின் சித்தத்தில் அஃதே அவ்வாறே யாண்டும்.