செய்திகள்

ஜனநாயக போராளிகளுடன் கலந்துரையாடிய ஸ்செலப்: பெண் தலைமைத்துவ குடும்பங்களை இலக்கு வைக்கும் நுண் நிதி பற்றியும் ஆலோசனை!

சுவிட்சர்லாந்து நாட்டின் இலங்கைக்கான முன்மைச் செயலாளர் கிசெல ஸ்செலப், போருக்கு பின்னரான முன்னாள் போராளிகளின் பாதுகாப்பு,சமூக, பொருளாதார செயற்பாடுகள் சமூகநிலை, அரசியல் களத்தில் அவர்களது வகிபாகம் தொடர்பாக நேற்று ஜனநாயக போராளிகள் கட்சியினரிடம் கலந்துரையாடியுள்ளார்.

மேலும், இலங்கை அரசு தமிழர் பகுதிகளில் புதிய முறையிலான நில ஆக்கிரமிப்பு, வலிந்து காணாமல் செய்யப்பட்டோருக்கான பொறுப்பு கூறலில் காணப்படுகின்ற அசமந்தப்போக்கு, அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய உறுதிமொழிகளின்வழி செயற்படாமை தொடர்பாகவும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் பெண்களை தலைமையாக கொண்டுள்ள குடும்பங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுகின்ற நுண் கடன்கள் மூலம் இடம்பெறும் தற்கொலை, மன உளைச்சல் மற்றும் பன்னாட்டு உதவிகள் வழங்கப்பட வேண்டியமைக்கான தேவைகள் தொடர்பாகவும் இதன்போது அவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

யுத்தகாலத்திலும் அதற்கு பின்னரும் புலம்பெயர்ந்த உறவுகளுக்கு வதிவிடம் வழங்கி அவர்களது மொழி கலாச்சாரம் பண்பாட்டு விழுமியங்கள் தொடர்பில் கரிசனை செலுத்திய சுவிட்சர்லாந்து அரசுக்கு, முன்னாள் போராளிகள் சார்பிலும் மக்கள் சார்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

அதேபோன்று எதிர்வரும் காலங்களில் இலங்கையில் நிலையான தீர்வுகள் எட்டப்படும் வரை தமிழர்கள் திருப்பி அனுப்பப்படுவது நிறுத்தப்பட வேண்டும் எனவும் ஜனநாயக போராளிகள் கட்சி அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.