ஜனவரில் இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை பேச்சுவர்த்தை : வடக்கு அரசியல் தலைமைகளும் பங்குபற்ற வேண்டும்
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் ஜனவரி மாதம் அமைச்சர்கள் மட்டத்திலான கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளதாகவும் அதில் வடக்கு அரசியல் தலைமைகளையும் அதில் பங்குபெறச் செய்யவுள்ளதாகவும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் மீதான வரவு-செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்களின் வருகை ஒப்பீட்டளவில் தற்போது குறைவடைந்திருப்பதாக கடற்படையினருடனான கலந்துரையாடலொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. எவ்வாறிருப்பினும், இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களின் கைது நடவடிக்கை தொடர்பில் கடற்படையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த விடயம் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்துடனும் நாம் பேசியுள்ளோம். இந்திய அரசுடனான இந்த பேச்சுக்களை நாம் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வோம். எதிர்வரும் ஜனவரி மாதம் இந்தியாவின் மீன்பிடித்துறை அமைச்சர் உள்ளிட்ட குழுவினருடன் சந்திப்பொன்றுள்ளது. இந்த சந்திப்பில் வடக்கின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைமைகளையும் இந்த சந்திப்பில் பங்கேற்கச் செய்ய நாம் எதிர்பார்க்கிறோம். என அவர் தெரிவித்துள்ளார். -(3)




