ஜனாதிபதிக்கு ஏன் அவர்கள் சொல்லவில்லை?
நிஹால் ஜெயவிக்கிரம
2015 ஜனவரியில் ஜனாதிபதி பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டபோது அரசியலமைப்பின் வாயிலாக தனக்கு கிடைக்கப்பெற்ற முழுமையான நிறைவேற்று அதிகாரங்களை இன்னமும் தான் கொண்டிருப்பதாக ஜனாதிபதி நம்பிக்கொண்டிருக்கிறார் போலத் தெரிகிறது. பதவிக்கு வந்து மூன்று மாதங்கள் கடந்த நிலையில் பாராளுமன்றத்தில் கொந்தளிப்பான ஒரு அமர்வில் தனது தலைமையிலான அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்புக்கான 19 வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதை ஜனாதிபதி சபைக்குள் அமர்ந்திருந்து நேரடியாகவே கண்டார்.தற்போது அவர் அனுபவிக்கின்ற மூன்று அதிகாரங்களைத் தவிர தனது ஏனைய சகல நிறைவேற்று அதிகாரங்களையும் அந்த திருத்தச்சட்டம் அவரிடமிருந்து நீக்கிவிட்டது. தூதுவர்களை நியமிக்கும் அதிகாரம், அமைச்சுக்களின் செயலாளர்களை நியமிக்கும் அதிகாரம், மாகாணங்களின் ஆளுநர்களை நியமிக்கும் அதிகாரம் ஆகியவையே ஜனாதிபதி கொண்டிருக்கும் அந்த மூன்று அதிகாரங்களுமாகும். அவற்றைக்கூட ஒருதலைப்பட்சமாக அவரால் செயற்படுத்த முடியாது.உதாரணத்துக்கு கூறுவதென்றால், தூதுவர் ஒருவரை நியமிப்பதற்கு முன்னதாக அந்த தூதுவர் செல்லவிருக்கும் நாட்டு அரசிடமிருந்து எமது வெளியுறவு அமைச்சர் இணக்கத்தைப் பெறவேண்டும்.அதை ஏன் அவர்கள் அவருக்கு சொல்லவில்லை?
பிரதமரைப் பதவிநீக்கம் செயவதற்கான அதிகாரம் தனக்கு இருப்பதாக ஜனாதிபதி நம்புகிறார்.ஆம்.அவருக்கு அந்த அதிகாரம் இருந்தது.ஆனால், முன்னொரு காலத்தில். அரசியலமைப்புக்கான 19 வது திருத்தம் அந்த அதிகாரத்தை வெளிப்படையாகவே நீக்கிவிட்டது.அதை ஏன் அவர்கள் அவருக்குச் சொல்லவில்லலை?
பாராளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெறக்கூடிய வாய்ப்பைப் பெருமளவுக்கு கொண்டிருக்கும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை – அதுவும் அத்தகைய உறுப்பினரை பாராளுமன்றம் அறுதிப்பெரும்பான்மையினால் அடையாளம் காட்டிய பின்னரும் கூட பிரதமராக நியமிக்க தன்னால் மறுப்புத் தெரிவிக்கமுடியும் என்று ஜனாதிபதி நம்புகிறார். தனக்கு அவரைப் பிடிக்கவில்லை அல்லது அவருடன் பணியாற்ற தன்னால் முடியாது என்ற காரணங்களை முன்வைத்து தனது மறுப்பை நியாயப்படுத்தமுடியும் என்று நம்புகிறார். பிரதமராக நியமிக்கப்படக்கூடிய பாராளுமன்ற உறுப்பினரை ஜனாதிபதி விரும்பவேண்டும், நேசிக்கவேண்டும், மெச்சவேண்டும் என்று அரசியலமைப்பில் எந்த இடத்திலும் கூறப்பட்டிருக்கவில்லை.பிரதமர்ஜனாதிபதியின் ஊழியர் அல்ல.அதை ஏன் அவர்கள் அவருக்குச் சொல்லவில்லை?
அமைச்சர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கவேண்டியவராக ஜனாதிபதி இருக்கிறார்.ஆனால்,அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை முப்பதைத் தாண்டக்கூடாது என்று 19 வது திருத்தம் கூறுகிறது.ஜனாதிபதி 2015 ஆகஸ்டில் தீர்மானித்த அமைச்சர்களின் எண்ணிக்கை அதைவிடவும் மிகவும் அதிகமானதாகும்.பாராளுமன்றத்தில் கூடுதல் ஆசனங்களைக் கைப்பற்றிய கட்சி ‘ தேசிய அரசாங்கமொன்றை’ அமைத்திருந்தால் மாத்திரமே ஜனாதிபதி அமைச்சர்களின் எண்ணிக்கையை முப்பதுக்கும் அதிகமாகத் தீர்மானித்திருக்க முடியும். பாராளுமன்றத்தில் கூடுதல் ஆசனங்களைப் பெறும் கட்சி ஏனைய அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்த்துக்கொண்டு அமைப்பதே தேசிய அரசாங்கம் என்று 19 வது திருத்தம் வரையறுத்திருக்கிறது. ஐக்கிய தேசிய கட்சி — ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ( தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜே.வி.பி. மற்றவை நீங்கலாக) அரசாங்கம் ஒரு கூட்டரசாங்கமே தவிர தேசிய அரசாங்கம் அல்ல.அதை ஏன் அவர்கள் அவருக்குச் சொல்லவில்லை?




