செய்திகள்

ஜனாதிபதியின் பதவிக்காலம் ஒரு வருடத்தால் நீடிக்கப்படுமா?

இந்த வருடம் ஒக்டோபர் மாதத்திற்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்ற போதும், பாராளுமன்றத்தின் அனுமதியுடன் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை ஒருவருடத்தால் அதிகரிக்க முடியுமா என்றும் அல்லது சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக ஜனாதிபதியின் பதவிக்காலம் மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை இரண்டு வருடங்களால் அதிகரிக்க முடியுமா? என்றும் ஐக்கிய தேசியக் கட்சித் தரப்பில் ஆராயப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னும் பின்வாங்கவில்லை என்றும் இதனால் அந்தக் கட்சியினால் இது தொடர்பில் முக்கியத் தீர்மானங்களை எடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் ஜனாதிபதிக்கு ஆதரவாகவும் மற்றும் எதிராகவும் பொதுஜன பெரமுனவுக்குள் இருவேறு குழுக்கள் உருவாகியுள்ளதால் அது தொடர்பிலும் அந்தக் கட்சியினால் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன் சில கட்சிகள் தமது புதிய கூட்டணிகளை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவும் திட்டமிட்டுள்ளன.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக அமைக்கப்படும் புதிய கூட்டணியுடன் கைகோர்ப்பதற்கு திட்டமிட்டுள்ளதுடன், சில கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டுச் சேர திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனால் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகும் அடுத்துவரும் வாரங்கள் கொழும்பு அரசியலில் தீர்மானமிக்கவையாக இருக்கும் என்பதுடன், அரசியலில் பெரும் பரபரப்பு நிறைந்த வாரங்களாகவும் அமையவுள்ளன.

-(3)