செய்திகள்

ஜனாதிபதி மைத்திரி இன்று புதுடில்லி விஜயம்: நாளை இந்தியப் பிரதமர் மோடியுடன் பேச்சு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வெள்ளிக்கிழமை இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்தியா வின் மத்திய பிரதேஷ் சாஞ்சியில் நடைபெறவுள்ள அனைத்து மத மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி யின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற் கொண்டு இந்தியா செல்கின்றார்.

தாய்லாந்து மற்றும் வியட்னாம் உட்பட பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டினை மத்திய பிரதேஷ் ஆளும் கட்சியான பாரதீய ஜனதா கட்சி ஏற்பாடு செய்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ள இந்த மாநாட்டில் வலய நாடுகளுடனான மத சார்ந்த ஒற்றுமை உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.

இந்த இரு நாள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரித்தானிய விஜயத்தை நிறைவு செய்து , அங்கிருந்து நேரடியாக இந்தியாவிற்கு செல்கின்றார் இந்த விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட மத்திய அரசின் முக்கியஸ்தர்களுடன் சந்திப்புகள் இடம்பெறவுள்ளன.
R-06