செய்திகள்

ஜுனில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த திட்டம்

மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் ஜுன் மாதத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதில் காணப்படும் தாமதம் குறித்தும் காணப்படும் நிலையிலேயே அரசாங்கம் ஜுன் மாதத்தில் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

எதிர்வரும் புதன்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களை சந்திக்கவுள்ளதுடன், இதன்போது மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராகுமாறு அவர்களுக்கு அறிவிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அனைத்து மாகாண சபைகளுக்கும் பதவிக் காலம் முடிவடைந்து இரண்டு வருடங்களை கடந்துள்ள போதும், இன்னும் தேர்தல் நடத்தப்படாதுள்ளது.

புதிய முறையில் தேர்தலை நடத்துவதற்காக கடந்த அரசாங்கம் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த போதும், எல்லை நிர்ணயம் தொடர்பான சர்ச்சைகளால் அந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்த முடியாது போயுள்ளது. இதனால் மீண்டும் அதில் திருத்தத்தை கொண்டு வந்து பழைய முறையில் தற்போதைய அரசாங்கம் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. -(3)