ஜெனிவா தீர்மானம் – நாடுகளின் நலன்கள் – தமிழர்களின் எதிர்பார்ப்பு ?
யதீந்திரா
ஜெனிவா ஆரவாரம் முடிவுற்றது. எதிர்பார்க்கப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. முன்னரைப் போலவே தமிழ் தரப்புக்கள், தங்களின் ஏமாற்றத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ஜெனிவா அரசியலை விளங்கிக் கொள்வது தொடர்பாக, எனது முன்னைய கட்டுரைகளிலும் குறிப்பிட்டிருக்கின்றேன். ஜெனிவாவின் அரசியலை புரிந்து கொண்டவர்களுக்கு இதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இனி வரப் போகும் தீர்மானங்களும் கூட, தமிழர்களின் எதிர்பார்ப்புக்கள் அனைத்தையும் பூர்த்தி செய்யப் போவதில்லை. பேரவையின் உறுப்பு நாடுகளின் விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையில்தான் தீர்மானங்கள் அமையும். இம்முறை 20 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றன. எதிராக 7 நாடுகள் வாக்களித்திருக்கின்றன. 20 நாடுகள் வாக்களிப்பில் பங்குகொள்ளவில்லை. வாக்களிப்பில் பங்குகொள்ளாத நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதுவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். காம்பியாவும் வாக்களிப்பில் கலந்து கொள்ளாத நாடுகளில் ஒன்றாகும். இந்த இடத்தில் காம்பியா பற்றி குறிப்பிடுவதற்கு ஒரு விசேட காரணமுண்டு.
நமது சூழலில் சிலர் அடிக்கடி ரோகிங்கியா என்னும் சொல்லை பயன்படுத்துவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். மியன்மார் நாட்டின் வடபகுதியில் அமைந்துள்ள ரிங்கின் என்னும் மானிலத்தில் வாழ்ந்த மக்களையே ரோகிங்கியா முஸ்லிம்கள் என்பர். இந்த பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம் மக்கள் மீது, மிலேச்சத்தனமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இவர்களை அந்தப் பகுதியிலிருந்து துரத்தியடிக்கும் நோக்கில், அவர்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்காண மக்கள் கொல்லப்பட்டனர். மியன்மார் அடிப்படையில் ஒரு பௌத்த நாடு. சிங்களவர்களை போன்று தேரவாத பௌத்தத்தை பின்பற்றும் மக்களை பெரும்பாண்மையாக கொண்டிருக்கும் நாடு.
ரோகிங்கியா முஸ்லிம் மக்களை, மியன்மாரின் மக்களாக ஏற்றுக்கொள்ள பௌத்த ஆளும் வர்க்கம் மறுக்கின்றனது. 2014 சனத்தொகை கணக்கெடுப்பின் போது, ரோகிங்கியா முஸ்லிம்களை மக்களாக ஏற்றுக்கொள்ள மியன்மார் நிர்வாகம் மறுத்தது. ரோகிங்கியா முஸ்லிம்கள் மீது கடுமையாக வெறுப்புற்றியிருந்த பௌத்த பிக்குகள் மற்றும் மியன்மாரின் ஆளும் வர்க்கம் 2017இல், முஸ்லிம்களின் வீடுகளை எரித்து, அவர்களை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்த முற்பட்டது. இதன் போது, ஒரு மாத காலத்தில், சுமார் 6700 பேருக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இதில் 700 மேற்பட்டவர்கள் ஜந்து வயதிற்கும் குறைவான சிறுவர்களாவர். 2017இல், ரோகிங்கியா முஸ்லிம்கள் மத்தியில் இயங்கிவரும், றொகியங்கா ஆயுத அமைப்பு, பொலிஸ் நிலையங்கள் மீது தாக்குதலை நடத்தியது. இதனைத் தொடர்ந்தே ரோகிங்கியா முஸ்லிம்களை அழிக்கும் நடவடிக்கைகளில் பௌத்த பிக்குகள் ஈடுபட்டனர். இதற்கு தலைமை தாங்கிய பிக்குவின் பெயர் விராது. 969 என்னும் பௌத்த தேசியவாத அமைப்பின் தலைவராக இருக்கின்ற விராதுவை, 2014இல், பொது பல சேனா கொழும்பிற்கு அழைத்திருந்தது.
சர்வதேச மன்னிப்புச் சபையின் தகவல்களின் படி, மியன்மார் இராணுவம் ரோகிங்கியா பெண்கள் பலரை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி, கொலை செய்திருக்கின்றனர். சுமார் 217 கிராமங்கள் முற்றிலுமாக எரிக்கப்பட்டிருக்கின்றன. இனப்படுகொலை நோக்கிலேயே திட்டமிட்ட வகையில் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இதனை விசாரித்த ஜ.நா விசாரணையாளர்கள், மியன்மார் இராணுவம் இனப்படுகொலை நோக்கத்தோடு, மக்களை தாக்கியதாக குறிப்பிடுகின்றது.
இந்த விடயத்தில் முஸ்லிம் நாடுகள் கரிசனை காண்பித்தன. முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பான இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான நாடுகளின் அமைப்பு (ழுசபயnளையவழைn ழக ஐளடயஅiஉ ஊழழிநசயவழைn), இந்த விடயத்தில் கவனம் செலுத்தியது. இந்த அமைப்பின் ஆதரவுடன்தான் காம்பியா இந்த விடயத்தில் ஈடுபட்டது. காம்பியா ஒரு மேற்கு ஆபிரிக்க இஸ்லாமிய நாடாகும். ரோகிங்கியா முஸ்லிம்களின் விடயத்தை சர்வதேச நீதிமன்றம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்காக, இஸ்லாமிய நாடுகளுக்கான ஒத்துழைப்பு அமைப்பு, 1.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியிருந்தது. சர்வதேச நீதிமன்றத்தில் நாடுகள் மட்டுமே வழக்குத் தொடர முடியும். மியன்மாரில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலையை சுட்டிக்காட்டி, கம்பியா, சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. எங்களது தலைமுறையில், எங்களுடைய கண்களுக்கு முன்னால் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதியை பெற முடியாதவர்களாக இருப்பதை எண்ணி, நாங்கள் வெட்கப்பட வேண்டியிருக்கின்றது என்றார், கம்பியாவின் நீதியமைச்சர்.#
இந்த விடயம் தொடர்பில் குறிப்பிடுவதற்கு ஒரு காரணமுண்டு. இவ்வாறான பின்னணியை கொண்டிருக்கும் காம்பியா, சிறிலங்கா விடயத்தில், வாக்களிப்பை தவிர்த்திருக்கின்றது. நீதியை மட்டுமே கருத்தில் கொள்ளும் ஒரு நாடு என்றால், காம்பியா, தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டும் பிரேரணையை ஆதரித்தல்லவா இருக்க வேண்டும் – ஆனால் காம்பியா அவ்வாறு வாக்களிக்கவில்லை. ஏன்? நாடுகள் ஒவ்வொன்றினதும் நலன்கள் எவ்வாறு பேரவையின் முடிவுகளோடு மோதுகின்றன என்பதை புரிந்து கொள்வதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும். நீதியை மட்டும் நிறுத்துப் பார்த்து நாடுகளின் முடிவுகள் எடுக்கப்படுவதில்லை. ரோகிங்கியா முஸ்லிம்கள் விடயத்தில் அநீதி இடம்பெற்றிருப்பதாக கூறும் கம்பியா, தமிழ் மக்களின் விடயத்தில் அதனை பின்பற்றவில்லை. ஏனென்றால் கம்பியா, சிறிலங்கா விடயத்தில் ஆர்வம் காண்பிப்பதால், அதற்கு இலாபம் இல்லை. ஆனால் ஒரு விடயத்தில் கம்பியா சிக்குண்டுவிட்டது. அதாவது, பேரவையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கொண்டுவரப்படும் பிரேரணைகளுக்கு எதிராக வாக்களிக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

எனவே ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் ஊடான தீர்மானங்களில் எவ்வாறான விடயங்கள் வரவேண்டுமென்பதை, நாடுகளின் நலன்களே தீர்மானிக்கும். தமிழ் கட்சிகளின் தலைவர்கள் என்போர் அனுப்பும் கடிதங்களின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுமென்று எதிர்பார்த்தால், அது எதிர்பார்ப்பவர்களின் தவறாகும்.
2012இல், அமெரிக்க ஆதரவோடு கொண்டுவரப்பட்ட பிரேரணைகளிலிருந்து, இன்றுவரையில் இடம்பெற்ற விடயங்களை கவனமாக பரிசீலித்தால், ஒரு விடயத்தை நீங்கள் புரிந்து கொள்ளலாம். சிறிலங்காவின் இறுதி யுத்தத்தின் போது, இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூற வேண்டுமென்பதே பிரேரணையின் உள்ளடக்கமாகும். இதனை அப்போதிருந்த மகிந்த ராஜபக்ச மறுத்திருந்தார். இதனால் பிரேரணைகள் தொடர்ந்தன. ஆனால் இதன் அடிப்படையை புரிந்து கொள்வதில் நமது பக்கத்தில் சரியான புரிதல் இருந்ததா என்பதுதான் கேள்வி.
சிறிலங்காவை பாரதூரமாக தனிமைப்படுத்திவிடக் கூடாதென்னும் கரிசனை இந்தப் பிரேரணைகளின் உள்ளடக்கத்தில் இருக்கின்றது. இதன் காரணமாகத்தான், தமிழர்கள் என்னதான் கத்தினாலும் அதனை எவருமே காதில் வாங்கிக் கொள்ளவில்லை. சிறிலங்காவை அதிகம் தனிமைப்படுத்தினால், சிங்களவர்கள் அதிகம் சீனாவின் பக்கமாக சாய்ந்துவிடுவார்கள் என்னும் பார்வை மேற்குலகிடமும், இந்தியாவி;டமும் உண்டு. இது உடனடியாக இந்தியாவிற்கே பாரதூரமான பிரச்சினையாகும். இதன் காரணமாகவே பிரேரணைகளின் போது, இந்தியா நடுநிலை வகிக்கின்றது. நடுநிலையின் ஊடாக, சிங்களவர்களை அதிகம் தள்ளிவிடாமலும் அதே வேளை, தமிழ் மக்களின் மீதான கரிசனையையும் காப்பாற்றிக் கொள்ளும் உக்தியையே இந்தியா பின்பற்றிவருகின்றது. மேலும், இந்தியா நடுநிலை வகிப்பதால், பிரேரணை தோல்வியுறப் போவதில்லை. ஏனெனில் இந்தப் பிரேரணைக்கு மேற்குலக நாடுகள் ஆதரவளிக்கும் வரையில், இது தொடர்ந்தும் வெற்றிப் பெற்றுக் கொண்டேயிருக்கும்.
அமெரிக்கா பேரவையிலிருந்து வெளியேறினாலும் கூட, ஏனைய நாடுகளின் ஆதரவுடன் இந்தப் பிரேரணை வெற்றிபெறும்; கொழும்மை அதிகம் தனிமைப்படுத்திவிடக் கூடாதென்னும் பார்வை இருக்கும் வரையில், ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் அழுத்தங்கள் இப்படித்தான் இருக்கும். அதே வேளை, மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் அறிக்கை காட்டமாக இருக்கும். மேற்குல நாடுகளை, முக்கியமாக அமெரிக்காவை பொறுத்தவரையில் ஆட்சி மாற்றங்களின் மூலம் வருகின்ற புதிய அரசாங்கத்தை கொண்டு, சில விடயங்களை செய்துகொள்ள முடியுமென்னும் அடிப்படையில்தான் அதன் இலக்குகளை தீர்மானிக்கின்றது. இந்தியாவை பொறுத்தவரையில், இந்திய-இலங்கை ஒப்பந்தமே அதன் துரப்புச் சீட்டாக இருக்கும். இதில் எந்தவொரு பெரிய மாற்றங்களும் அண்மைக்காலத்தில் ஏற்பட்டுவிடப் போவதில்லை. அவர்களுக்கு தேவையெனின் நிச்சயம் மாற்றங்கள் இடம்பெறும். இந்த விடயங்களை புரிந்து கொண்டால் ஜெனிவா தொடர்பில் அதிகம் குழும்ப வேண்டியதில்லை.


