ஜெயலலிதா -விக்னேஸ்வரன் சந்திப்பின் முக்கியத்துவமும் சவால்களும்
சு. செந்தூரன்
தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் நடைபெற்று முடிந்த தமிழ் நாடு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றமையை வாழ்த்தி மகிழ்ச்சி வெளியிட்டு அவரை சந்திப்பதற்கு விருப்பம் தெரிவித்து வட மாகாண சபை முதலமைச்சர் நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் அனுப்பிய கடிதத்துக்கு எழுதிய பதில் கடிதத்தில் நன்றி தெரிவித்து அவரை சந்திப்பதற்கான தனது விருப்பத்தை ஜெயலலிதா வெளியிட்டிருக்கின்றமை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக கொள்ளலாம்.
ஜெயலலிதா அரசாங்கத்துடன் கிட்டிய தொடர்பாடல்களை வைத்துக் கொள்வதற்கு விரும்புவதாகவும் கலை, கலாச்சாரம் மேலும் அரசியலால் இரு நாடுகளின் தமிழ்ப் பேசும் மக்களின் நெருக்கமான ஒத்துழைப்பை வேண்டி நிற்பதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததுடன் கடந்த வியாழக்கிழமை வட மாகாண சபையின் 53 ஆவது அமர்வு நடைபெற்றபோது தொடக்கத்திலேயே உரை ஒன்றை நிகழ்த்தி ஜெயலலிதாவின் வெற்றியை பாராட்டி வாழ்த்து தெரிவித்திருந்தார்.
விக்னேஸ்வரன் தலைமையிலான வட மாகாண சபைக்கும் மிகவும் வெளிப்படைத் தன்மையும் துணிச்சலும் மிக்க ஜெயலலிதா அரசாங்கத்துக்கும் இடையில் ஏற்படக்கூடிய உறவு அரசியல், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் ஈழத் தமிழ் மக்களுக்கு பெரிதும் வலுச் சேர்க்கும் என்பதன் பின்னணியில் அத்தகைய ஒரு உறவு ஏற்படுவதை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடுவதற்கான நகர்வுகள் இலங்கை அரசாங்கத்தினால் மட்டுமன்றி பல தரப்பினராலும் மேற்கொள்ளப்படும் என்பது எதிர்பார்க்கப்படக் கூடிய ஒன்றே.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து அதனை கடந்த காலத்தில் தேர்தல்கள் நடைபெற்றபோதும் அதற்கு பின்னரும் ஜெயலலிதா வெளிப்படையாக வெளிப்படையாக தெரிவித்து வந்த போதிலும் ஈழத் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமை தொடர்பிலும் , நடைபெற்றது இனஅழிப்பு தான் என்பது தொடர்பிலும் இது தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்றும் தொடர்ச்சியாக ஒரே தொனியில் எல்லாக் காலங்களிலுமே வலியுறுத்தி வந்துள்ளார்.
ஈழத் தமிழ் மக்கள் மீது ஜெயலலிதாவுக்கு உண்மையான ஒரு கரிசனை இருக்கும் பட்சத்தில் ஈழத் தமிழர் விவகாரத்தில் அவர் எடுக்கக்கூடிய நகர்வுகள் அதிக தாக்கம் கொண்டவையாக இருக்கக்கூடும். ஜெயலிதாவின் வெளிப்படைத் தன்மையான அரசியலும் எல்லாவற்றுக்கும் மேலாக அவரதுதுநிச்சல் மிக்க அரசிகள் நகர்வுகளும் பல மாற்றங்களை ஈழத்தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தில் இன்றைய காலகட்டத்தில் ஏற்ப்படுத்த முடியும்.
குறிப்பாக நல்லாட்சி என்ற போர்வையில் ஈழத் தமிழ் மக்கள் மீதான தனது அடக்கு முறைகளை எந்தவித சர்வதேச எதிர்ப்பும் இன்றி தொடர்ந்து முன்னெடுத்துவரும் சிங்களத்துக்கும் தமிழ் மக்களுக்கான அதிகார பரவலாக்கம் எவ்வாறாக இருந்தாலென ஆனால் தமக்கு சாதகமான நல்லாட்சி அரசு நிலைக்க வேண்டும் என்று அடக்கு முறைகளை கண்டும் காணாதது போல இருந்துவரும் சர்வதேசத்துக்கும் குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பை செல்லப்பிள்ளைகளாக வைத்து இலங்கை அரசுக்கு சார்பாக அரசியல் காய் நகர்த்தகளை மேற்கொண்டுவரும் இந்தியாவுக்கும் ஜெயலலிதா எடுக்கக்கூடிய நேர்மையான துணிச்சலான நகர்வுகள் நிச்சயமாக உகந்ததாக இருக்கப்போவதில்லை. அத்துடன் ஈழத்தமிழர்கள் தொடர்பில் ஜெயலிதாவின் சாத்தியமான இந்த அரசியல் நகர்வுகள் தமிழக அரசியலில் அவர் இருக்கும் வரை அவருக்கு என்று ஒரு அசைக்கமுடியாத இடத்தை ஏற்படுத்தி விடக்கூடியது. இதனையும் பலர் விரும்பப்போவதில்லை.
இந்திய மத்திய அரசின் விருப்பங்களுக்கு மாறாகவே தமிழகத்தின் ஒரு முதலமைச்சர் இத்தகைய ஒரு இடஞ்சுழி அரசியலை துணிச்சலாக மேற்கொள்ள முடியும். இது ஆபத்து நிறைந்தும் கூட. ஆனால் இதனை செய்கின்ற துணிச்சலும், ஆளுமையும் ஜெயலலிதாவுக்கு மட்டுமே இருக்கின்றது என்பது இந்திய மத்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் நன்கு தெரியும். தனது குடும்ப நலன்களை கவனத்தில் கொண்டு செயற்படும் கருணாநிதி ஒருபோதும் இத்தகைய அரசியலை செய்யமாட்டார் என்பதும் இவர்களுக்கு தெரியும்.
ஆதலால், விக்னேஸ்வரன் -ஜெயலலிதா சந்திப்பு என்பது பல சவால்களை தாண்டியே நடைபெறும் வாய்ப்பு உள்ளது. சவால்கள் எப்படி இருக்கப்போகின்றன என்பதற்கான அறிகுறிகள் இப்பொழுதே தென்படவும் ஆரம்பித்து விட்டன.
ஜெயலலிதாவின் வெற்றியை பாராட்டி அவரை சந்திப்பதற்கு விருப்பம் தெரிவித்து வட மாகாண சபை அமர்வில் விக்னேஸ்வரன் கடந்த வியாழக்கிழமை கொண்டுவர இருந்த ஒரு முன்மொழிவு சில சபை உறுப்பினர்களால் தடுக்கப்பட்டதாக இந்தியாவின் முன்னணி ஆங்கில பத்திரிகையான த இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. வட மாகாண சபை ஏகமனதாக விக்னேஸ்வரனின் தீர்மானத்தை நிறைவேற்றியமையை முற்றிலும் திரித்து இப் பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளமை முக்கியத்துவம் மிக்கது. இலங்கை தமிழர்கள் தொடர்பில் அதிகம் செய்திகளை வெளியிடும் ஒரு பத்திரிகை அல்ல த இந்தியன் எக்ஸ்பிரஸ். விக்னேஸ்வரன் ஜெயலலிதாவுக்கு அனுப்பிய கடிதத்துக்கு அவர் பதில் அழிப்பதற்கு முன்னர் அவசர அவசரமாக இந்த செய்தி பிரசுரிக்கப்பட்டது. ஜெயலலிதா பதில் அளிக்காமல் இருப்பதற்கு அல்லது அவரது பதிலை தாக்கத்துக்கு (influence) உள்ளாக்குவதற்காக இந்த செய்தி பிரசுரிக்கப்பட்டிருக்கலாம்.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜெயலலிதா பதில் அளித்துள்ளார். இபோதுள்ள கேள்வி இந்த சந்திப்பு எப்போது நடைபெறும் என்பது தான். ஆனால் ஒன்று மட்டும் சொல்லலாம் அதாவது அத்தகைய ஒரு சந்திப்பு என்பது விக்னேஸ்வரன் உலகின் எந்த ஒரு நாட்டின் தலைவரை சந்திப்பதை காட்டிலும் ஈழத் தமிழர் அரசியலில் முக்கியமானதாக இருக்கும்.




