செய்திகள்

ஜோதிகாவுக்கு இணையான வேடத்தில் ரித்திகாசிங்!

ரியல் பாக்சரான ரித்திகா சிங், மாதவன் நடிப்பில் சுதா இயக்கிய இறுதிச்சுற்று படத்தில் நாயகியாக நடித்தார். பெண் பாக்சர் சம்பந்தப்பட்ட கதையில் ஒரு நிஜ பெண் பாக்சரே நடித்தால் சிறப்பாக இருக்கும் என்பதால் ரித்திகாசிங்கிற்கு நிறைய நடிப்பு பயிற்சி கொடுத்து அந்த படத்தில் நடிக்க வைத்தார் டைரக்டர் சுதா. அதோடு படப்பிடிப்பு தளத்தில் மாதவனும் அவருக்கு நடிப்பு பயிற்சி கொடுத்தாராம். அப்படி இறுதிச்சுற்று படத்தில் நடித்த ரித்திகா சிங்கின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.

அதையடுத்து தமிழ் தெரியாததால், தனக்கு தெரிந்த இந்தி மொழிப்படங்களிலேயே நடிக்க ரித்திகா சிங் ஆசைப்பட்டபோதும், அவருக்கு மீண்டும் தமிழில் காக்கா முட்டை மணிகண்டன் இயக்கிய ஆண்டவன் கட்டளை படவாய்ப்பு கிடைத்தது. விஜயசேதுபதிக்கு ஜோடி என்பதால் உடனே கமிட்டாகி நடித்து விட்டார் ரித்திகா. இந்த படத்திலும் இறுதிச்சுற்று படத்தை மாதிரி ரித்திகாவுக்கு கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகள் கூடுதலாக கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.

அதேபோல் பி.வாசு, லாரன்சை வைத்து இயக்கும் சிவலிங்கா கன்னட ரீமேக்கிலும் கமிட்டாகியிருக்கும் ரித்திகாசிங்கிற்கு வெயிட்டான கதாநாயகி வேடம்தானாம். கன்னடத்தில் வேதிகா நடித்த ரோலில் தமிழில் ரித்திகா நடிப்பதோடு, தமிழுக்காக கதையில் நிறைய திருத்தம் செய்திருப்பதால், சந்திரமுகியில் ஜோதிகா நடித்தது போன்று ரித்திகாவின் கேரக்டர் இந்த படத்தில் சித்தரிக்கப்பட்டி ருக்கிறதாம். இதனால் சிவலிங்கா படத்திற்கு பிறகு ரித்திகா சிங், தமிழில் முன்னணி நடிகை பட்டியலில் சேர்ந்து விடுவார் என்கிறார்கள்.

N5