ஜ.நா தவறுசெய்தது தமிழர் விடயத்தில் மட்டும்தானா?
– யதீந்திரா –
சில தினங்களுக்கு முன்னர் ஜ.நாவின் செயலாளர் பான்கீமூன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்;தார். இலங்கைக்கு விஜயம் செய்யும் ராஜதந்திரிகள், ஜ.நாவின் உயரதிகாரிகள் ஆகியோர் வடக்கிற்கு செல்லாமல் செல்வதில்லை. அதேபோன்றே பான் கீ மூனும் வடக்கிற்கு சென்றிருந்தார். பான்கீ, இன்னும் சில மாதங்களில் பதிவியிலிருந்து ஓய்வுபெறவுள்ளார். இலங்கை விவகாரத்தில் ஜ.நா தோல்வியடைந்துவிட்டதான பலவாறான விமர்சனங்களுக்கு மத்தியில்தான் அவர் அவை எதற்கும் பதிலற்றவராக ஓய்வுபெறவுள்ளார். பொதுவாக விமர்சனங்களுக்கு பதிலில்லாதபோது ஒரு தப்பிக்கொள்ளும் உக்கதியுண்டு. அதுதான் நடந்த தவறுகளுக்கு மன்னிப்புக் கோருவது. இலங்கையில் வைத்து மூன் அதனைத்தான் செய்திருக்கிறார். இது அவருக்கு ஒரு ஆத்மதிருப்தியை வழங்கியிருக்கலாம் ஆனால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் இவ்வாறான மன்னிப்பின் பெறுமதி என்ன? இப்படிக் கேட்கும் தமிழர்கள் உண்டு.
இதற்கும் ஒரு படிமேல் சென்று ஜ.நா தொடர்பில் ஆவேசப்படுவோரும் உண்டு. ஆனால் யதார்த்தம் என்னவென்றால், இது உலகிற்கு உறுத்தலானதொரு விடயமல்ல. ஏனெனில் இது ஜ.நாவின் முதலாவது தவறுமல்ல, அதே வேளை இது கடைசித் தவறாகவும் இருக்கப் போவதில்லை. ஜ.நா இன்னும் தவறுகளை செய்யும், பின்னர் பதவிக்காலம் முடிவுறும் போது, ஒரு செயலாளர் மன்னிப்பைக் கோரிவிட்டு திருப்தியாக ஓய்வுபெறுவார். ஒரு சிலர் நிம்மதியாக நித்திரை கொள்ளவேண்டுமென்பதற்காக தங்களின் மனப்பாரத்தை இறக்கிவைக்க முயற்சிப்பர். அவ்வாறான ஒருவர்தான் கனடிய இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் ரோமியோ டலாரி.
ரோமியோ டலாரி 1994இல் ருவாண்டாவில் இடம்பெற்ற இனப்படுகொலையின் போது ஜக்கிய நாடுகள் அமைதிப்படையின், ருவாண்டா இலக்கிற்கு பொறுப்பாக இருந்தவர். ஆனால் இவரது கண்ணுக்கு முன்பாகவே டுட்சி (வுரவளi) இனக்குழு மக்கள் பெரும்பாண்மை இனக்குழுவாக ஹ}ட்டுவினால் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் ஜ.நாவினால் அதனை தடுத்துநிறுத்த முடியவில்லை. இதன்போது டலாரி மேலதிகமாக 5000 படையினரை தருமுhறு ஜ.நாவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார் ஆனால் ஜ.நா அதனை நிராகரிதித்துவிட்டது. ஒரு நாளைக்கு 8000 பேர் என்னும் வகையில் நூறு நாட்களில் 8 லட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதன் பின்னர் தனது பதவியிலிருந்து விலகிய டலாரி தன்னுடைய அனுபவங்களை தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டார். இது பிசாசுடன் கைகளை குலுக்குதல் (ளூயமந ர்யனௌ றiவா வாந னுநஎடை: வுhந குயடைரசந ழக ர்ரஅயnவைல in சுறயனெய) என்னும் தலைப்பில் வெளியாகியது. உலகமே உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கும் போது எவ்வாறு மனிதகுலமே வெட்கித் தலைகுனியும் வகையில் இவ்வாறானதொரு இனப்படுகொலை நடந்தேறியது? எவ்வாறு இதனை உலகம் அனுமதித்துக் கொண்டிருந்தது? இவ்வாறான கேள்விகளுக்கான பதில்தான் டலாரியின் மேற்படி நூல். இவை எல்லாவற்றினதும் வேர் எது?
டலாரி இவ்வாறு கூறுகின்றார் : இந்தப்பிரச்சினையின் வேரை நான் புரிந்துகொள்கின்றேன். இது உலக சமூதாயத்திற்கும் எட்டு லட்சமளவான கறுப்பு ஆபிரிக்க மக்களுக்குமிடையிலான அடிப்படையான வேறுப்பாட்டுடன் தொடர்புற்றிருக்கிறது அதாவது, இவ்வாறானதொரு மிகச்சிறிய நாடு மூலோபாய ரீதியிலும் வளங்களின் பெறுமதியின் அடிப்படையில் இந்த மக்கள் எந்தவொரு உலக அதிகாரங்களுக்கும் (யலெ றழசடன pழறநச) பயனுடையவர்களாக இருந்திருக்கவில்லை. எனவேதான் இதில் தலையிடுவதற்கான அரசியல் திடசித்தத்தை (pழடவைiஉயட றடைட வழ iவெநசஎநநெ) வெளிப்படுத்தாது, வெறுமனே அவதானித்துக் கொண்டிருந்தனர். இதனை இன்னும் தெளிவாக சொல்வதென்றால், தங்களின் மூலோபாய நலன்களுக்கு பிரயோசனமில்லாத ஒரு மக்கள் கூட்டம் அழிவதைப்பற்றி உலகிற்கு கவலையில்லை. ஆனால் இதுவே ஒரு இஸ்ரேல் என்றால் உலகம் எவ்வாறு பதலளித்திருக்கும் அல்லது ஜரோப்பிய நாடொன்றுடன் தொடர்புபட்ட பிரச்சினையாக இருந்திருந்தால் எவ்வாறு பதலளித்திருப்பர்?
இந்த விடயம் தொடர்பிலும் ஜ.நா மன்னிப்புக் கோட்கத் தவறவில்லை. 1999ஆம் ஆண்டு, அப்போதைய ஜ.நா செயலாளர் கோபிஅனான் ருவாண்டா இனப்படுகொலையை தடுப்பதில் ஜ.நாவின் இயலாமை தொடர்ப்பில் பகிரங்க மன்னிப்புக் கோரியிருந்தார். அதே வேளை இதுவே இறுதியானதாகவும் இருக்க வேண்டும், மீண்டும் இதுபோன்றதொரு தோல்வியை ஜ.நா சந்;திக்கக் கூடாதென்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அப்படி நடந்ததா? இன்று 20 வருடங்களுக்கு பின்னர் 2014இல், ருவாண்டா இனப்படுகொலையின் போது ஜ.நாவின் பாதுகாப்பு பேரவையின் தலைவராக இருந்த கொலின் கீட்டிங் (ஊழடin முநயவiபெ) தங்களின் தவறிற்காக பகிரங்க மன்னிப்புக் கோரியிருக்கிறார். ருவாண்டாவில் டுட்சி மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலையானது ஜ.நாவின் தடுக்கும் முறைமை முன்றிலுமாக தோல்வியடைந்துவிட்டதையே வெளிக்காட்டுவதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.
உண்மையில் ருவாண்டா இனப்படுகொலை இடம்பெற்றபோது ஜ.நாவின் செயலாளராக இருந்தவர் பூத்திரோஸ் பூத்திரோஸ் காலி. ஆனால் இவர் இது தொடர்பில் மௌனம் சாதித்தார். இவர் இந்தப் பதிவிக்கு வருவதற்கு முன்னர் எஜிப்தின் வெளிவிவகார அசைமச்சராக இருந்தார். இவர் அமைச்சாராக இருந்தபோது ருவாண்டாவில் இனப்படுகொலையில் ஈடுபட்ட, ஹ}ட்சி பெரும்பாண்மை ஆட்சியாளர்களுக்கு ஆயுதங்களை விற்பனை செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டு முன்வைப்பட்டிருந்தது. குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட பூத்திரோஸ் காலி, அது தனது தொழிலென்றும், ஆனால் சில ஆயிரம் துப்பாக்கிகள் சூழலை மாற்றிவிடுமென்று தான் நம்பவில்லையென்றும் சிறுபிள்ளைத்தனமாக பதிலளித்திருந்;தார். இவர் ஜ.நாவின் இயலாமை தொடர்பில் எதனையும் கூறாமலேயே 2016இல் தன்னுடைய 93வது வயதில் இறந்துபோனார். ஆனால் ஜ.நாவின் ஒவ்வொரு தோல்விப் படிப்பினைக்காவும் உலகில் பல்லாயிரக்காணக்கான மக்கள் தங்களின் உயிர்களை கொடுக்க வேண்டியிருக்கிறது. இறுதியாக உயிரைக் கொடுத்தவர்கள்தான் தமிழ் மக்கள். எனவே இவ்வாறானதொரு பாரம்பரியத்தில் வந்தவரான, பான்கி மூன் இப்போது மன்னிப்புக் கோரியதில் பெரிய விந்தையெதுவும் இல்லை.
இதே போன்றுதான் ருவாண்டா படுகொலையின் போது அதனை தடுப்பதற்கு அமெரிக்கா முயற்சிக்கவில்லை. ஆனால் எல்லாம் முடிந்த பின்னர் இது தன்னுடைய தனிப்பட்ட தவறென்றும் அதற்காக தான் மன்னிப்புக் கோருவதாகவும் அப்போது அமெரிக்க அதிபராகவிருந்த கிளின்ரன் தெரிவித்திருந்தார். இவ்வாறான தவல்களை இப்பத்தி முதன்மைப்படுத்துவதால் நான் ஜ.நாவை நிராகரிக்குமாறு கூறுவதாக பொருள்கொள்ள வேண்டியதில்லை. அப்படி நிராகரிப்பதால் பயனுமில்லை ஏனெனில் அது குறைபாடுகளை கொண்டிருப்பினும் கூட, அது ஒன்றுதான் எங்களுக்கிருக்கின்ற ஒரேயொரு உலகளாவிய கட்டமைப்பு. ஜ.நாவின் பலவீனங்கள் தொடர்பில் பேசும் மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவிப்பிள்ளை, ஜ.நா குறுகிய தேசிய நலன்களாலும் புவிசார் அரசியல் நலன்களாலும் கட்டுப்படுத்தப்படுவதாக கூறுகின்றார். இதற்கு தனது சொந்த நாடான தென்னாபிரிக்கா கூட விதிவிலக்கல்ல என்கிறார். இதனைவிடவும் ஜ.நாவின் பலவீனம் பற்றி விளக்கிச்சொல்ல வேண்டியதில்லை.
முதலில் விடயங்களை புரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்னும் அடிப்படையிலேயே இந்த விடயங்கள் இப்பத்தி பதிவுசெய்திருக்கிறது. ஒரு விடயம் தொடர்பில் விளக்கமில்லாதபோதுதான் அதனை நோக்கி ஒப்பாரி வைக்க வேண்டியிருக்கிறது அல்லது ஆவேசப்பட வேண்டியிருக்கிறது. ஒப்பாரியாலும் ஆவேசத்தாலும் எதுவும் ஆகிவிடப் போவதில்லை. முதலில் ஒரு விடயத்தை தமிழர் தரப்பு ஆழமாக புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இது தமிழர்களுக்கு மட்டும் நிகழ்ந்த ஒன்றல்ல. பல இனங்களுக்கு நடந்திருக்கிறது இன்னும் பல இனங்களுக்கு நடக்கவுள்ளது. இந்த உலக யதார்த்தத்தை விளங்கிக் கொண்டால் மட்டும்தான் தமிழர் முன்னோக்கி பயணிக்க முடியும். முதலில் ஜ.நா எங்களை கைவிட்டுவிட்டதே, அமெரிக்கா கைவிட்டுவிட்டதே, இந்தியா கைவிட்டுவிட்டதே என்றவாறான அழுகுணி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டியிருக்கிறது. அவர்கள் கைவிட்ட முதல் மக்களும் தமிழரல்ல, இறுதியும் தமிழரல்ல.
இந்த இடத்தில்தான் சிறிய இனங்கள் தந்திரோபாயமாக தப்பிப்பிழைப்பது எவ்வாறு என்னும் கேள்வி எழுகிறது. ஒரு விடயம் வெள்ளிடைமலை. அதாவது, தங்களின் நலன்களுக்கு பிரயோசனமில்லாத மக்கள் கூட்டமொன்று அழிவதைப்பற்றி எந்தவொரு அதிகார சக்தியும் கவலைகொள்ளப் போவதில்லை. தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்ட போதும் இதுபோன்றதொரு உணர்வுநிலைதான் பலம்பொருந்திய சக்திகளை இயக்கிக்கொண்டிருந்தது? தமிழர்கள் மூலேபாய ரீதியிலும், வளங்களின் அடிப்படையிலும் பெறுமதியில்லாத ஒரு கூட்டமென்று அவர்கள் கருதுகின்றார்களா? இதற்கான பதில் ஆம் என்றால் தமிழர்கள் ஒரு மூலோபாய ரீதியில் பிரயோசனமான மக்கள்; கூட்டமொன்றாக மாறுவதற்கான செயற்பாடுகளே தமிழர் தேசத்தின் எதிர்காலத்திற்கான பிரதான செயற்பாடுகளாக இருக்கவேண்டும்.
இதற்கான பதில் இல்லையென்பதாக இருந்தால், அவ்வாறாயின் எவ்வாறு இப்படியொரு அழிவு நேர்ந்தது? ஏன் உலகம் தன்னை பார்வையாளர்களாக சுருக்கிக் கொண்டது? இன்று இவ்வாறானதொரு அழிவு நிகழ்ந்த பின்னரும் கூட எவ்வாறு சிறிலங்கா அரசாங்கத்தால் இந்தளவிற்கு இறுமாப்பாக பதிலளிக்க முடிகின்றது? என்னைப் பொறுத்தவரையில் ஆம் என்னும் பதிலே பிரதானமானது. சிறிலங்காவை மையப்படுத்தி பலம்பொருந்திய சக்திகள் தங்களுக்குள் மோதிக் கொள்வதுதான் சிறிலங்காவின் மூலோபாய முக்கியத்துவமாகும். இதில் தமிழர்களின் இடம் என்ன? தமிழர்கள் யாருக்கெல்லாம் முக்கியமானவர்களாக இருக்கின்றனர்? நிச்சயம் தமிழர்கள் தேவைப்படுவார்கள் ஆனால் எப்போது தேவைப்படுவார்கள் என்பது நிலைமைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களில்தான் தங்கியிருக்கிறது. அது வரைக்கும் தமிழர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்வதுதான் இன்றைய நிலையில் செய்ய வேண்டியது. இது வெறுமனே உள்ளுக்குள் மட்டுமல்ல புலம்பெயர் சமூகத்தின் மத்தியிலும் இது தொடர்பில் தெளிவான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்கு முதலில், களத்திலும் புலத்திலும் ஒரு கூட்டிணைவு ஏற்பட வேண்டும்.




