டக்ளஸ் தேவானந்தா – சந்திரகுமார்: விரிசலுக்கு காரணம் என்ன?
டக்ளஸ் தேவானந்தா – சந்திரகுமார் விரிசலுக்கு காரணம் என்ன?
சந்திரகுமார் அடுத்ததாக என்ன செய்யப்போகின்றார்?
ஈ.பி.டிபி.யிலிருந்து வெளியேறப்போவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை விஷேட அறிக்கை ஒன்றின் மூலம் முருகேசு சந்திரகுமார் அறிவித்ததிலிருந்து எழுப்பப்படும் பிரதான கேள்விகள் இவைதான்.
தான் அடுத்ததாக செய்யப்போவது என்ன என்பதை சந்திரகுமார் திட்டவட்டமாகச் சொல்லாத போதிலும். என்னத்தைச் செய்யப்போவதில்லை என்பதை அவர் உறுதியாகச் சொல்லிவிட்டார்.
1. புதிதாக தனிக் கட்சி ஒன்றை ஆரம்பிக்கப்போவதில்லை.
2. தேசியக் கட்சிகள் எதிலும் இணைந்து செயற்படப்போவதில்லை. அதாவது, ஐ.தே.க.விலோ அல்லது ஶ்ரீல.சு.க.விலோ இணையப்போவதில்லை. இதுதான் அவரது நிலைப்பாடு.
இந்த இரண்டையும் தவிர்த்தால், மூன்றாவதாக அவருக்கு இருக்கக்கூடிய தெரிவாக ‘ஒன்று’தான் உள்ளது.
உண்மையில் புதிய கட்சி ஒன்றை அமைத்து புதிய அரசியல் ஒன்றை ஆரம்பிப்பதோ, தேசியக் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதோ தனது அரசியல் எதிர்காலத்துக்கு உதவப்போவதில்லை என்பதை சந்திரகுமார் தெளிவாகவே புரிந்துகொண்டிருக்கின்றார். தமிழ்க் கட்சி ஒன்றிலிருந்து வெளியேறி, தேசியக் கட்சி ஒன்றி ஒன்றில் இணைந்த எவருமே அரசியலில் வெற்றிபெற்றதாக வரலாறு இல்லை. தோல்வியடைந்த வரலாறுகள் நிறைய உள்ளன. அதேவேளையில், புதிய கட்சி ஒன்றை உருவாக்கி அதனை முன்னணிக்குக் கொண்டுவரக்கூடிய அரசியல் சூழ்நிலையும் இன்று காணப்படவில்லை.
புதிய கட்சியை அமைப்பதோ அல்லது, தேசியக் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதோ தனது நோக்கமல்ல என சந்திரகுமார் தெரிவித்திருப்பதற்கு இவை காரணமாக இருந்திருக்கலாம். அப்படியானால் சந்திரகுமாரிடமுள்ள ‘மூன்றாவது’ தெரிவு என்ன?
அவர் அடுத்ததாக என்ன செய்யப்போகின்றார் என்பதைப் பார்ப்பதற்கு முன்னதாக, ஈ.பி.டி.பி.யில் அவருக்கு என்ன பிரச்சினை? எதற்காக இந்த அதிரடியோன முடிவை அவர் எடுத்தார்? என்பதைப் பார்ப்போம்.
தேர்தலுடன் முரண்பாடு
சந்திரகுமாருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான ‘விரிசல்’ கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற பொதுத் தேர்தலின் போதே ஆரம்பமானதாக கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. கட்சித் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அடுத்த நிலையில் நோக்கப்பட்ட சந்திரகுமாருக்கு கிளிநொச்சியில் கணிசமான ஆதரவு இருந்துள்ளது. அங்கு தனக்கான ஒரு ஆதரவுத் தளத்தை 2010 பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் அவர் உருவாக்கியிருந்தார். இதற்காக அவர் திட்டமிட்ட முறையில் அவர் கடுமையாக உழைத்திருக்கின்றார்.
2015 ஆகஸ்ட் பொதுத் தேர்தலின் போது தனித் தனியாகவே இருவரும் பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்தார்கள். கிளிநொச்சியில் தன்னுடைய பிரச்சாரங்களில் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இடமளிக்க சந்திரகுமார் தவறியிருந்தார். அங்கு தனியாக வந்தே தனது பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஏற்பட்டிருந்தது. இருவரும் தனித்தனியாக வியூகம் வகுத்துச் செயற்பட்டிருந்தாலும், சந்திரகுமாருக்குக் கிடைத்த வாக்குகள்தான் ஈ.பி.டி.பி. ஒரு ஆசனத்தைப் பெற்றுக்கொள்வதற்கு வழிவகுத்தது.
1994 இல் ஈ.பி.டி.பி. முதல்முதல் தேர்தலில் போட்டியிட்டு 9 ஆசனங்களைக் கைப்பற்றியபோது முதல் முறையாக பாராளுமன்றத்துக்குத் தெரிவான சந்திரகுமார், பின்னர் கட்சித் தலைமையுடன் முரண்பட்டு சில வருடகாலம் லண்டனில் அஞ்ஞானவாசம் இருந்தவர். போர் முடிவடைந்த பின்னர் யாழ். திரும்பி மீண்டும் ஈ.பி.டி.பி.யில் இணைந்து 2010 தேர்தலில் போட்டியிட்டு ஈ.பி.டி.பி. சார்பில் தெரிவான மூவரில் இரண்டாவதாகத் தெரிவானவர்.
கிளிநொச்சியில் தளம்
இதன்பின்னர் சந்திரகுமார் கிளிநொச்சியை தனது தளமாகக் கொண்டு செயற்படத் தொடங்கினார். கிளிநொச்சி விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களின் கோட்டை என்பது அனைவருக்கும் தெரியும். ஈ.பி.டி.பி. யின் முக்கியஸ்த்தர் ஒருவர் அங்கிருந்து செயற்படுவது எந்தளவுக்கு கடினமானதாக இருக்கும் என்பதும் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றுதான். அந்தக்கடினமான பணியை சந்திரகுமார் முன்னெடுத்தார். கடந்த தேர்தலில் சுமார் 6,500 வாக்குகளை கிளிநொச்சியில் ஈ.பி.டி.பி. பெற்றுக்கொள்வதற்கு அவர் காரணமாக இருந்ததார். யாழ். தேர்தல் மாவட்டத்தில் ஈ.பி.டி.பி.க்கு ஒரேயொரு ஆசனமே கிடைத்ததால் சந்திரகுமாரால் வெற்றபெற முடியவில்லை.
சந்திரகுமார் அரசியலிலிருந்து ஒதுங்கி மீண்டும் லண்டன் சென்றுவிடலாம் என்ற தகவல்கள் அண்மைக்காலத்தில் வெளியாகிக்கொண்டிருந்த நிலையில்தான் தன்னுடைய நிலைப்பாடு என்ன என்பதை அவர் இப்போது திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றார். அரசியலிலிருந்து ஒதுங்கப்போவதில்லை என்பதையும், மக்களின் அபிலாஷைகளைப் புரிந்துகொண்டு அரசியலைச் செய்யப்போவதாகவும் அவர் அறிவித்திருக்கின்றார்.
புலி எதிர்ப்பு அரசியலையோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான அரசியலையோ சந்திரகுமார் முன்னெடுக்கவில்லை. கட்சித் தலைமை முன்னெடுத்த இந்த வகையான அரசிலை அவர் விரும்பியிருக்கவும் இல்லை. இந்தவகையில் அந்தத் தரப்பின் நல்லெண்ணத்தையும் அவர் பெற்றிருக்கின்றார்.
ஈ.பி.டி.பி.யை புனரமைப்புச் செய்ய வேண்டும் என்பதை சந்திரகுமார் அண்மைக்காலமாக வலியுறுத்திவந்திருக்கின்றார். கட்சியில் தலைவருக்கு இருக்கக்கூடிய சர்வாதிகாரப் போக்கையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதிகளவுக்கு ஜனநாயகத் தன்மை தலைமையில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தியிருக்கின்றார். போர் முடிவடைந்திருக்கும் நிலையில், அதற்கேற்றவகையில் கட்சியில் மாற்றங்களைச் செய்து செயற்பாடுகளை வரிவாக்கஞ்செய்ய வேண்டும் என்பது இவரது விருப்பமாக இருந்துள்ளது. இது குறித்த அவரது கருத்துக்கள் கவனத்திற்கொள்ளப்படவில்லை என அவரது தரப்பில் சொல்லப்படுகின்றது.
ஈ.பி.டி.பி.யின் நிலை
இந்தப் பின்னணியில்தான் கட்சியின் செயற்பாடுகளிலிருந்து அண்மைக்காலத்தில் அவர் ஒதுங்கியிருந்தார். இப்போது வெளியேறும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கட்சியிலிருந்து அவர் வெளியேறுவது டக்ளஸ் தேவானந்தாவுக்கு நிச்சயமாக அதிர்ச்சியளிக்கும் ஒரு முடிவாகத்தான் இருக்கமுடியும். 1994 பொதுத் தேர்தலில் 9 இடங்களைப் பெற்ற ஈ.பி.டி.பி., இப்போது, 2015 தேர்தலில் ஒரு ஆசனத்தை மட்டும்தான் பெற்றிருக்கின்றது. இன்று ஈ.பி.டி.பி. அதிகாரத்திலும் இல்லை.
இந்தநிலையில், கிளிநொச்சியில் கணிசமான வாக்குகளைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சந்திரகுமாரின் வெளியேற்றம், ஈ.பி.டி.பி.யை பலவீனப்படுத்துவதாகவே இருக்கும். சந்திரகுமாரின் வெளியேற்றத்தையிட்டு அலட்டிக்கொள்ளவில்லை என்பது போல டக்ளஸ் கருத்துவெளியிட்டிருந்தாலும், அடுத்த பொதுத் தேர்தலில் கடுமையான தாக்கத்தை ஈ.பி.டி.பி.க்கு இது ஏற்படுத்தும் என்ற மதிப்பீடு தவறானதல்ல. இது கட்சித் தலைமைக்கும் நன்கு தெரிந்ததுதான்.
சந்திரகுமாருடன் இணைந்து கட்சியின் முக்கியஸ்த்தர்கள் யாரும் வெளியேறவில்லை என்பது தேவானந்தாவுக்கு ஆறுதலளிப்பதாக இருக்கலாம். கட்சியின் முக்கியஸ்த்தர்கள் சிலர் சந்திரகுமாருடன் தொடர்பில் இருப்பதாகத் தெரிகின்றது. ஆனால், வெளியே வந்தால் எங்கே போவது என்ற பிரச்சினை அவர்களுக்குள்ளது. அதனால், ஈ.பி.டி.பி.யில் உடனடியாக பிளவு அல்லது பாரிய வெளியேற்றம் ஒன்றுக்கு இடமில்லை.
அடுத்தமாத முற்பகுதியில் கட்சியின் மாநாடு நடத்தப்படவுள்ளது. அதில் சந்திரகுமாரின் பிரச்சினையும் முக்கிய கவனத்தைப் பெறும் என எதிர்பார்க்கலாம். கட்சிப்புனரமைப்பு உட்பட முக்கிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய தேவையை சந்திரகுமாரின் வெளியேற்றம் ஏற்படுத்தியிருக்கின்றது என்பதுதான் உண்மை.
இதேவேளையில், சந்திரகுமாரின் அடுத்த நகர்வு எவ்வாறானதாக அமையும் என்ற கேள்வி எழுகின்றது. அதற்கு பிடிகொடுக்காமல் அவர் பதிலளித்துவருகின்றார். பல தரப்பினருடனும் அவர் பேச்சுக்களை நடத்திவருகின்றார். குழுக்களின் பிரதித் தலைவராக செயற்பட்ட காலத்திலிருந்தே அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடனும் நல்ல உறவை வைத்திருப்பவர் ந்திரகுமார். ஏதோ ஒரு ‘சமிஞ்சை’ இல்லாமல் அவர் அவசரப்பட்டு வெளியேற்ற அறிவித்தலை வெளியிட்டிருக்கமாட்டார் என்ற ஒரு கருத்தும் தமிழ் அரசியல் வட்டாரங்களில் காணப்படுகின்றது.
-சபரி




