டாக்கா ஆர்ட்டிசன் பேக்கரியில் தீவிரவாதிகளால் 20 வெளிநாட்டவர்கள் படுகொலை
பங்களாதேஸ் தலைநகர் டாக்காவில் இராஜதந்திர அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியில் காணப்பட்டஉணவகம் ஓன்றிற்குள் தீவிரவாதிகளால் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டவர்கள் உட்பட்ட பொதுமக்களை அந்த நாட்டின் கொமாண்டே படையணியினர் விசேட நடவடிக்கையொன்றின் மூலம் மீட்டுள்ளனர்.அதேவேளை இந்த சம்பவத்தில் 20 வெளிநாட்டவர்கள் உட்பட 28 பேர்கொல்லப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதிகள் பொதுமக்களை வெள்ளிக்கிழமை இரவே கொலை செய்துவிட்டனர்,அவர்கள் கூர்மையான ஆயுதங்களால் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அதிகாரிகள் குறிப்பிட்ட டாக்கா ஆர்ட்டிசன் பேக்கரியிலிருந்து பெருமளவு வெடிபொருட்களை ஆயுதங்களை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.வெள்ளிக்கிழமை இரவு பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களை மீட்பதற்கான நடவடிக்கை சனிக்கிழமை அதிகாலை ஆரம்பமானதாக தெரிவித்துள்ள அதிகாரிகள்,ஆறுதீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் 13 பொதுமக்கள் மீட்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த விசேட நடவடிக்கை முடிவடைந்து விட்டது நிலைமை முற்றுமுழுதாக கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது என இராணுவபேச்சாளர் ரசிடுல்ஹசன் தெரிவித்துள்ளார்.அதிகாலை நடவடிக்கையின்போது ஓரு தீவரவாதி உயிருடன்கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கொமாண்டோ படையினரால் மீட்கப்பட்டவர்களில் ஜப்பானியர் ஒருவரும் உள்ளதாகவும் இவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அதிகாரிகள்,இரண்டு இலங்கையர்களும் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
தீவிரவாதிகளால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களில் சிலர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்ற போதிலும் அதிகாரிகள் இது குறித்த விபரங்களை வெளியிடவில்லை.
படையினர் குறிப்பிட்ட உணவுவிடுதிக்குள் நுழைய முயன்றவேளை தீவிரவாதிகளின் கைக்குண்டு தாக்குதலிற்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பெருமளவுபொலிஸார் இரத்தக்காயங்களுடன் அழைத்துச்செல்லப்படுவதை தொலைக்காட்சிகள் காண்பித்துள்ளன.டாக்கா வீதிகளில் படையினரின் பெருமளவு பிரசன்னத்தையும் தொலைக்காட்சிகள் காண்பித்துள்ளன.
தீவிரவாதிகள் பொதுமக்களை பணயக்கைதிகளாக பிடித்து 10 மணித்தியாலத்தின் பின்னரே அவர்களை மீட்கும் நடவடிக்கை ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.படையினர் தீவிரவாதிகளுடன் பேச்சுக்களை மேற்கொண்ட பின்னரே தாக்குதலை ஆரம்பித்ததாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக வெள்ளிக்கிழமை இரவு டாக்காவின் ஹொலே ஆர்ட்டிசன் பேக்கரி மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் இரு பொலிஸாரை கொன்றதுடன் ஏழு இத்தாலியர்கள் உட்பட பலரை பணயக்கைதிகளாக பிடித்தனர்.






