செய்திகள்

டெங்கு நோயை ஏற்படுத்தும் எயிடிஸ் நுளம்பின் இயல்புகளும் அதனை எதிர் கொள்ளும் விழிப்பும்

மருத்துவர் சி. எஸ். யமுனாநந்தா

டெங்கு நோயானது நகரமயமாக்கலுடன் நெருங்கிய நோயாகும். இந் நோய்த் தாக்கம் ஒவ்வொருவருடமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. டெங்கு நோய் அதிகரிப்பிற்குரிய காரணங்களாக டெங்கு பரவும் ஏது நிலையில் மக்கள் குறித்த பகுதிகளில் செறிவாக வசித்தலும் அதிக அளவான மக்கள் தொகைப் பெருக்கமும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. அடுத்து தனிப்பட்ட பிரயாணங்களின் அதிகரிப்பு டெங்கு பரவலை அதிகரிக்கின்றது. மேலும் நகர மயமாக்கலும் பொருளாதார மனிதவள நெருக்கடியும் டெங்கு நோய் அதிகரிப்பிற்கு காரணிகளாக அமைகின்றன.

இலங்கையில் டெங்கு நோயினைப் பரப்புவதில் எயிடிஸ் அயிப்டி இ எயிடிஸ் அலோபிட்டஸ் என்ற இரு வகை நுளம்புகள் செல்வாக்கு செலுத்துகின்றன. இவ்விரு வகை நுளம்புகளும் மனிதன் வாழும் இடங்களிற்கு அருகாமையில் தமது வாழ்விடங்களை அமைத்துக் கொள்ளுகின்றன. இயற்கையாக நீர் தேங்கும் இடங்களிலும் தூய தெளிவான நீர் இருப்பதனை எயடிஸ் நுளம்புகள் எளிதில் கண்டறிகின்ளன.

எயிடிஸ் நுளம்புகள் பொதுவாக தூய நீரில் பெருகும் வகையின. எனவே நுளம்புக் குடம்பிகள் உருவாகும் நீர் தேங்கும் இடங்களை இல்லாது செய்வதனால் எயிடிஸ் நுளம்பின் பெருக்கத்தினைக் கட்டுப்படுத்தலாம். எயிடிஸ் அலோபிட்டஸ் நுளம்புகள் சேதனக் கழிவுகள் உள்ள நீரில் பெருகும் தகையது. மரப்பொந்துகள், மூங்கில் கீற்றுகள், பூச்செடிகளின் இலைகளுக்கு அடையில் உள்ள இடுக்குகள், மெல்லிய கலங்கிய நீர் உள்ள பாத்திரங்கள், நீர் சேகரிக்கும் தொட்டிகள், தற்காலிக கட்டிடங்கள்,  அகற்றப்படாத கட்டமைப்புக்கள்.

அண்மையில் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் எய்டிஸ் பெண் நுளம்பு மனிதனைக் கடிப்பதில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள் கண்டறியப்பட்டன. இந் நுளம்புகள் கூட்டுக் கண்கள் உடையன. இவை சிவப்பு ஒரேன்ச் கறுப்பு நீலப் பச்சை நிறங்களில் நாட்டம் அதிகம்.#

பச்சை நீலம் ஊதா என்பவற்றில் நாட்டம் குறைவு. மனிதனின் தோல் ஒளி படும்போது சிவப்பு நிறத்தினையே தெறிப்படையச் செய்கின்றது. இச் சிவப்பு நிறத்தினை நுளம்புகள் எளிதாக கண்டறிகின்றன.

அடுத்து மனிதன் சுவாசிக்கும் போது வெளிவரும் காபனீரொட்சைட் மணத்தையும் நுளம்புகள் கண்டறிகின்றன. மூன்றாவதாக மனிதனின் உடல் வெப்பத்தையும் வெப்ப உணர்வாங்கிகள் மூலம் அறிந்து கொள்கின்றன.