டென்மார்க் பாராளுமன்றவளாகத்தில் கஜேந்திரகுமார் ஆற்றிய உரை
டென்மார்க் பாராளுமன்ற வளாகத்தில் டேனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் நடத்திய சர்வதேச சட்டங்களும், மனித உரிமை மீறல்களும் என்னும் வரலாற்றுப்புகழ் மிக்க மாநாடு புதன் கிழமை முற்பகல் 09.15ற்கு ஆரம்பித்து 12.00 மணிவரை சிறப்பாக நடந்தேறியது.
சிறீலங்காவில் நடைபெற்ற, நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள், திட்டமிட்ட குடியேற்றங்கள், நில அபகரிப்புக்கள் போர்க்குற்றங்கள் போன்றன தொடர்பாக சர்வதேச சட்டங்களும் சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல் என்ற தலைப்பில் விவகாரம் பேசப்பட்டது.
போர் முடிந்ததாகக் கூறப்பட்டாலும் கடந்த ஏழாண்டு காலமாக மாற்றமின்றி தொடரும் அவலங்களுக்கு சர்வதேச சமுதாயம் எடுக்கும் தார்மீகப் பொறுப்புத்தான் என்ன.. இதுகுறித்த சர்வதேச அறிஞர், அரசியல் தலைவர்கள் கருத்துப்பகிர்ந்து கவனயீர்ப்பை ஏற்படுத்தும் மாநாடாக இம் மாநாடு அமைந்தது.
இந்த மாநாட்டில் டேனிஸ் பாராளுமன்றத்தின் முக்கிய உறுப்பினர்களான மிச்சேல் அஸ்ரப் ஜென்சன், நிக்கொலாய் விலும்சன், மோண்ஸ் ஜென்சன், கிறிஸ்டியான் யூல் ஆகிய தலைவர்களும், தாயகத்தில் இருந்து முன்னாள் பராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் சிவில் சமூக அமையத்தின் சார்பாக கத்தோலிக்கப் பாதிரியார் எழில் ராஜன், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் பிரான்சிஸ் ஹர்ரிசன், குர்டிஸ்தான் போராட்ட அமைப்புப் பிரதிநிதி, டேனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் பொன் மகேஸ்வரன் ஆகியோர் முக்கிய உரைகளை வழங்கினார்கள். மேற்படி மாநாட்டில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் ஆற்றிய உரை இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழ் தேசத்தின் இருப்பை இல்லாமல் செய்வதற்கு மாடி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் பல்வேறு நடவடிக்கைகளை திட்டமிட்ட முறையில் மேற்கொண்டதாகவும் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தனது உரையில் குற்றம் சாட்டினார்.
அதனால், இலங்கையில் தமிழ் தேசத்தின் இருப்புக்கான அடையாளங்களை பாதுகாக்கக்கூடிய வகையிலேயே அரசியல் தீர்வுத்திட்டம் அமைய வேண்டும் என்று அவர் கூறினார்.
இலங்கையில் உண்மையான நல்லிணக்கம் ஏற்ப்படுவதற்கும் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்குமான மாற்றம் இலங்கையில் அறவே ஏற்படவில்லை என்று கஜேந்திரகுமார் தனதுரையில் குறிப்பிட்டார்.
இலங்கையில் சமஷ்டி தீர்வை ஏற்படுத்துவதற்கு தடையாக இருந்தார்கள் என்று விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டமையை நியாயப்படுத்திய சர்வதேச சமூகம் இன்று சமஷ்டி பற்றி பேசாதீர்கள் என்றும் ஏனென்றால் இந்த நல்லாட்சி அரசை பாதுகாக்க வேண்டும் என்று தமிழ் அரசியல் கட்சிகளுடம் வலியுறுத்தி வருவதாக அவர்களின் இரண்டாக தன்மையை எடுத்துரைத்தார். ( R-06)




