டௌனிங் வீதி வாசஸ்தலத்தில் இருந்து வெளியேற தயாராகும் கமரூன்
பிரித்தானியாவின் பிரதமராக 6 வருடங்கள் பணியாற்றிய டேவிட் கமரூன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் இன்று புதன் கிழமை மாலை புதிய பிரதமராக பதவி ஏற்கும் தெரேசா மேயிடம் தனது 10, டௌனிங் வீதியில் உள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலதின் திறப்புக்களை கையளிக்கும் ஏற்பாடுகளை செய்து முடித்துள்ளார். நேற்று மாலையே இதற்காக அவர் தனது பொருட்களை வாகனங்கள் மூலம் தனது வீட்டுக்கு அனுப்பும் பணிகளில் ஈடுபட்டார்.
அவரது பொருட்களை வாகனங்களில் ஏற்றும் பணியாளர்களுடன் தானும் இணைந்து பொருட்களை சுமந்து உதவி செய்தார்.
நேற்று மாலை அவர் தனது இறுதி அமைச்சரவை கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் கடந்த 6 வருடங்களில் கமரூனின் சிறப்பான செயற்ப்பாட்டை அனைவரும் வெகுவாக பாராட்டினார். நிதி நெருக்கடி, பயங்கரவாத பிரச்சினை போன்ற இக்கட்டான காலங்களில் கமரோன் சிறப்பாக பணியாற்றி பிரித்தானியாவை வழிநடத்தியதாக புதிய பிரதமராக பதவி ஏற்கும் தெரேசா மே அவரை பாராட்டினார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறக்கூடாது என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்த கமரூன் அண்மையில் இது தொடர்பில் நடந்த கருத்துக்கணிப்பில் பிரித்தானியா வெளியேறவேண்டும் என்று பெரும்பாலான மக்கள் வாக்களித்திருந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.





