தடுப்பு மருந்தும் சமூக இடைவெளி பேணலும் கோவிட் தொற்றின் தீவிரத்தைக் குறைக்கும்

கோவிட் தடுப்பூசி பெற்ற பின் கோவிட் தொற்று ஏற்படின் அச்சம் அடையத் தேவையில்லை. கோவிட் தொற்றுக்கு எதிராக தடுப்பு மருந்து பெற்றுக்கொண்டவர்களில் கோவிட் தொற்று ஏற்படின் அதன் அறிகுறிகள் பொதுவாக சாதாரண தடிமல், காய்ச்சல் போல் இருக்கும். தற்போது பரவும் டெல்டா கோவிட் வைரஸ் தொற்றானது தடுப்பூசி பெறாதவர்களில் பாரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றது. தடுப்பூசி பெற்றவர்களில் கோவிட் தொற்றின் வேகம் மிகவும் குறைவு. மேலும் கோவிட் தடுப்பூசி பெறாதவர்களில் டெல்டா தொற்று ஏற்படின் வைத்தியசாலைக்கு அனுமதிக்கும் நிலையும் இறப்பு வீதமும் 25 மடங்கு அதிகமாகும். எனவே கோவிட் தடுப்பூசியினை அனைவரும் பெற்றுக்கொள்ளல் அவசியமாகும்.
தடுப்பு மருந்து பெறாதவர்களில் கோவிட் தொற்று ஏற்படின் தொற்றின் அறிகுறிகளாக தலையிடி, காய்ச்சல், மூக்கு நீர் சிந்துதல், தொண்டைநோ, தொடர்ச்சியான இருமல் என்பன இருக்கும்.
தடுப்பு மருந்து பகுதியாக செலுத்தியவர்களில் கோவிட் தொற்று ஏற்படின் தொற்று அறிகுறிகளாக தலையிடி, மூக்குநீர்சிந்தல், தும்மல், தொண்டை நோ இருமல் என்பன இருக்கும். முற்றாக தடுப்பு மருந்து பெற்றுக்கொண்டவர்களில் கோவிட் தொற்று ஏற்படின ;அறிகுறிகளாக தலையிடி, மூக்குநீர் சிந்துதல், தும்மல், தொண்டைநோ, மணநுகர்ச்சிபுலன் இழப்பு என்பன இருக்கும். தடுப்பு மருந்து ஏற்றியவர்களில் நோயின் தீவிரத்தன்மை குறைவு. மேலும் விரைவாக குணமடைவர்.
தலையிடி, மூக்குநீர் சிந்தல், தொண்டைநோ என்பன கோவிட் தடுப்பு மருந்து ஏற்றினாலும் ஏற்றாவிட்டாலும் கோவிட் தொற்றின் போது ஏற்படுகின்றது. முழுமையாக தடுப்பு மருந்து ஏற்றியவர்களில் கோவிட் தொற்றின் போது மணநுகர்ச்சி குறைதல் பிரதான அறிகுறியாக காணப்படுகின்றது. தடுப்பு மருந்து பெறாதவர்களில் காய்ச்சல் கோவிட் தொற்றின் பிரதான அறிகுறியாக காணப்படுகின்றது. தொடர்ச்சியான இருமல் தடுப்பு மருந்து பெறாதவர்களிலும் ஒரு தடவை மட்டும் தடுப்பு மருந்து பெற்றவர்களிலும் அறிகுறிகளாக காணப்படுக்ன்றது.
எனவே தற்போதைய டெல்டா கோவிட் வைரஸ் பரவும் சூழலில் நாம் தடுப்பு மருந்துகளைப்பெற்றுக் கொள்வதோடு முகக்கவசம் அணிதல், சமூகஇடைவெளி பேணல், கைகளை அடிக்கடி கழுவுதல் கையினால் மூக்கு, வாய், கண் பகுதிகளை தொடாது இருத்தல், மேற்பரப்புகளை தொற்று நீக்கல் என்பனவற்றை முறையாக கடைப்பிடித்தல் வேண்டும்.
மேலும் அநாவசிய ஒன்று கூடல்களைத் தவிர்த்தல், பிரயாணங்களைத் தவிர்த்தல் என்பனவும் கோவிட் பரம்பலைக் கட்டுப்படுத்த உதவும்.
கோவிட் தொற்றுக்கு எதிராக தடுப்பூசியினை பெற்றுக் கொள்வதனால் கோவிட் தொற்றின் தீவிரத்தினைக் தணிக்கலாம். கோவிட் தடுப்பூசி பெற்ற பின் கோவிட் தொற்;றின் அறிகுறிகள் குறைவாக இருக்கும். தடுப்பூசி பெற்ற பின் கோவிட் தொற்று ஏற்படின் அச்சம் அடையத் தேவையில்லை.
மருத்துவர் சி. யமுனாநந்தா


