தடுமாற்றமான அணுகுமுறைகளினால் வாய்ப்புக்களைத் தவறவிடும் அரசாங்கம்: மீண்டும் அதிகாரத்துக்கு வரமுடியுமென்ற நம்பிக்கையுடன் செயற்படும் ராஜபக்ஷாக்கள்
வீரகத்தி தனபாலசிங்கம்
இலங்கையில் இதுகாலவரையில் பதவியில் இருந்த அரசாங்கங்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கத்தைப் போன்று வேறு எந்தவொரு அரசாங்கமுமே படுமோசமான ஊழல் மோசடிகள், எதேச்சாதிகாரம், அதிகார துஷ்பிரயோகம், சட்டத்தின் ஆட்சி சீர் குலைவு, குடும்ப அரசியல் ஆதிக்கம் மற்றும் உரிமை மீறல்களுடன் கூடுதலான அளவுக்கு அடையாளப்படுத்தப்பட்டதில்லை. அந்தக் கெடுதிகள் எல்லாவற்றையும் இல்லாதொழித்து ஜனநாயகத்தை மீட்டெடுத்து புதியதொரு அரசியல் கலாசாரத்தை அறிமுகம் செய்து நல்லாட்சியை ஏற்படுத்தப் போவதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்துக்கொண்டுதான் இன்றைய தேசிய ஐக்கிய அரசாங்கம் பதவிக்கு வந்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான இந்த அரசாங்கம் அதன் இரு வருடங்களைப் பூர்த்திசெய்வதற்கு இன்னமும் மூன்று வாரங்களே இருக்கும் நிலையில், மக்கள் மத்தியில் இருந்த நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் மங்கிக் கொண்டுபோகின்ற துரதிஷ்டவசமானதொரு நிலைமையையே காணக்கூடியதாக இருக்கிறது. இந்த அரசாங்கம் செய்திருக்கக்கூடிய காரியங்களினாலும் செய்யாமல் விட்டிருக்கக்கூடிய காரியங்களினாலும் நாட்டின் தற்போதைய அரசியலில் கவலைக்குரிய போக்குகள் தலையெடுத்திருக்கின்றன. அதன் விளைவாக அரசாங்கத்துக்கு ஆதரவளித்த வாக்காளர்களிடமிருந்து அது கணிசமான அளவுக்கு தனிமைப்பட்டுக்கொண்டு போகின்றது. ராஜபக் ஷ ஆதரவு சக்திகள் மீண்டும் அதிகாரத்துக்கு வந்துவிடமுடியுமென்ற நம்பிக்கையுடன் தங்கள் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. ராஜபக் ஷாக்களின் ஊழல் மோசடிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்று நாட்டு மக்களுக்குக் கூறிய இன்றைய அரசாங்கத்துக்கு எதிராக அதே ராஜபக் ஷாக்களும் அவர்களுக்கு ஆதரவான அரசியல்சக்திகளும் பல ஊழல் முறைகேடுகள் தொடர்பில் குற்றச் சாட்டுக்களை சுமத்தத் தொடங்கியிருக்கின்றனர். அரசியலமைப்புச் சீர்திருத்தச் செயன்முறைகளிலும் அரசாங்கத் தலைவர்கள் மத்தியில் தடுமாற்றமான போக்குகளே காணப்படுகின்றன.

இத்தகையதொரு பின்புலத்திலே நாட்டின் அரசியல் நிகழ்வுப் போக்குகளின் திசை மார்க்கத்தை மீண்டும் தீர்மானிக்கக்கூடியவர்களாக ராஜபக் ஷாக்கள் துரிதமாக மாறிக்கொண்டு வருகிறார்கள். புதிய அரசியலமைப்பை வரைவதற்கான செயன்முறைகளுக்கு முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவைக் கோரியிருப்பதன் மூலமாக அரசாங்கத் தலைவர்கள் ராஜபக் ஷ ஆதரவுச் சக்திகளுக்கு இருக்கக்கூடிய அரசியல்வலுவை பகிரங்கமாக ஒத்துக்கொண்டிருக்கின்றனர் என்று தான் சொல்ல வேண்டும்.
இலங்கையின் இருபிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து முன்னொரு போதும் இல்லாத வகையில் தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைத்திருக்கின்றபோதிலும், சுதந்திரக் கட்சிக்குள் இருக்கக்கூடிய ராஜபக் ஷ ஆதரவு முகாம் அரசாங்கத்தில் பங்கேற்காமல் பாராளுமன்றத்திற்குள் தங்களை ‘கூட்டு எதிரணி” என்று அழைத்துக் கொண்டு செயற்பட்டு வருகின்றது.
அதனால் இரு பிரதான கட்சிகளையும் பங்காளிகளாகக் கொண்ட அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கப்படக்கூடிய பயனுறுதியுடைய செயற்பாடுகள் பெருமளவுக்குச் சாத்தியமற்றவையாகிப் போய்க் கொண்டிருக்கின்றன. ராஜபக் ஷாக்களை மீண்டும் தலையெடுக்க விடக்கூடாது என்ற நோக்கம் மாத்திரமே ஐக்கிய தேசியக் கட்சியையும் சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி சிறிசேன முகாமையும் தொடர்ந்தும் ஐக்கியப்படுத்தி வைத்திருக்கிறது. அரசாங்க நிருவாகச் செயற்பாடுகளில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஜனாதிபதி முகாமுக்கும் இடையிலான பெருமளவு முரண்பாடுகள் அடிக்கடி வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
இத்தகையதொரு சூழ்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ராஜபக் ஷவின் அரசியல் எதிர்காலம் குறித்து பிரதமர் விக்கிரமசிங்க இந்தியாவின் பிரபல ஆங்கிலப் பத்திரிகைகளில் ஒன்றான ‘த இந்து’ வின் வெளியீட்டாளர்களான கஸ்தூரி குழுமத்தின் தற்போதைய தலைவரும் முன்னாள் ஆசிரியருமான என்.ராமுக்கு கொழும்பில் வைத்து கடந்த வாரம் அளித்திருக்கும் பேட்டியில் தெரிவித்த சில கருத்துகள் எமது கவனத்தைப் பெரிதும் தூண்டுபவையாக இருக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ராஜபக் ஷ ஆதரவு குழுவுக்கும் சிறிசேன ஆதரவுக் குழுவுக்கும் இடையிலான பிளவு குறித்து உங்கள் கருத்து என்ன? அப்பிளவு உங்களது தலைமையிலான அரசாங்கத்தின் ஐக்கியத்தைப் பாதிக்கிறதா? மகிந்த ராஜபக் ஷ மீண்டும் அதிகாரத்துக்கு வரக்கூடிய சாத்தியம் குறித்து கவலைப்படுகிறீர்களா? என்று பிரதமரிடம் கேட்கப்பட்டது.
‘மகிந்த ராஜபக் ஷவைச் சுற்றியுள்ள குழு பாராளுமன்றத்தில் எதிரணியில் இருக்கிறது. ஆனால், பாராளுமன்றத்தில் செயற்படுகின்ற மேற்பார்வைக் குழுக்களில் அவர்களும் பங்கேற்று இயங்குகிறார்கள். கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. அதேவேளை, ராஜபக் ஷவுடன் இருப்பவர்களில் சில முக்கிய உறுப்பினர்கள் சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் கூட்டங்களிலும் பங்கேற்கிறார்கள். ராஜபக் ஷவினால் சுதந்திரக்கட்சியை விட்டு வெளியில் சென்று சமாளிக்க முடியாது. அவ்வாறு சென்றால் அவர் தனது ஆதரவுத் தளத்தை இழப்பார். அவருக்கு எதிராக அவர்கள் ஒழுங்கு நடவடிக்கையையும் எடுக்க முடியும். எனது அபிப்பிராயப்படி நாளடைவில் அவர் தனக்கு இப்போது இருக்கும் ஆதரவுக் தளத்தை இழப்பார். ஏனென்றால் காலம் மாறிக்கொண்டு போகிறது. இளம் வாக்காளர்கள் அவருடன் இல்லை. அந்த வாக்காளர்களை தம்பக்கம் இழுக்க வேறு கட்சிகள் முயற்சிக்கும். எமது கொள்கைகள் வெற்றியடையும்போது மகிந்த ராஜபக் ஷ ஒரு தோல்வி கண்ட தலைவர் என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள். அவர் மீண்டும் ஆட்சியதிகாரத்துக்கு வரமுடியுமென்று என்னால் பார்க்க முடியவில்லை. ஏனென்றால், மாற்றமொன்றை மக்கள் செய்யும்போது பழைய நிலைக்கு அவர்கள் ஒருபோதும் திரும்பிச் செல்லமாட்டார்கள். மக்கள் இன்னொரு மாற்றத்தை விரும்புவார்களாக இருந்தால், புதிதாக ஒன்றை நோக்கியே அவர்கள் போவார்கள். ஆனால், அவ்வாறு நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் இரு பிரதான கட்சிகளும் சேர்ந்து செயற்படுவதை மக்கள் விரும்புகிறார்கள்’ என்று பிரதமர் பதிலளித்திருக்கிறார்.
ராஜபக் ஷ சுதந்திரக்கட்சியை விட்டு வெளியே போகமாட்டார் என்று பிரதமர் தெரிவித்திருக்கும் கருத்தை ராஜ பக் ஷ ஆதரவுச் சக்திகள் ஸ்ரீலங்கா மக்கள் முன்னணி (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன) என்ற பெயரில் அண்மையில் புதிய கட்சியொன்றைத் தொடங்கியிருப்பதன் பின்புலத்தில் வைத்தே நோக்க வேண்டியிருக்கிறது.
முன்னாள் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை தலைவராகக்கொண்டே அந்த மக்கள் முன்னணி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

அவர் என்னதான் பெரிய மேதையாக இருந்தாலும் அவரின் அரசியல் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது அவர் தலைமையில் கட்சியொன்று நாட்டு மக்களின் ஆதரவைப் பெறக்கூடியதாக இருக்கும் என்று எவரும் நினைத்துப் பார்க்கவோ நம்பவோ மாட்டார்கள். மக்கள் முன்னணியின் தோற்றத்தின் பின்னணியில் யார்யார் எல்லாம் இருக்கிறார்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல. தலைநகர் கொழும்புக்கு வெளியே பத்தரமுல்லையில் அமைந்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி ராஜபக் ஷவின் அரசியல் அலுவலகத்தில் தான் மக்கள் முன்னணியின் முதன் முதலான முறைப்படியான செய்தியாளர் மாநாடு அவரது பிறந்த தினத்துக்கு முதல் நாள் (நவம்பர் 17) நடைபெற்றது. சுதந்திரக்கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரான முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜ பக் ஷ, பேராசிரியர் பீரிஸ் சகிதம் அந்தச் செய்தியாளர் மாநாட்டில் தங்களது எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கமளித்த போது தனது மூத்த சகோதரரான முன்னாள் ஜனாதிபதியே தங்களது கட்சியின் ”ஆன்மீகத் தலைவர்” என்று சொன்னதைக் காணக்கூடியதாக இருந்தது. மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் போன்றே பசில் ராஜ பக் ஷ கட்சிக்கு நாடுபூராவும் உறுப்பினர்களைச் சேர்க்கும் பிரசாரங்களையும் தீவிரமாக முன்னெடுத்திருந்தார்.
மகிந்த ராஜபக் ஷ மக்கள் முன்னணியின் உறுப்பினராக இன்னமும் சேர்ந்துகொள்ளவில்லை. எனினும் அவரைக் கட்சியில் இணைந்துக் கொள்ள இணங்க வைப்பதில் வெற்றிபெற முடியும் என்பதில் முழுமையான நம்பிக்கை இருக்கிறது என்றும் பசில் ராஜபக் ஷ கூறியிருந்தார்.
புதிய கட்சியினால் சுதந்திரக் கட்சிக்கும் அதன் நீட்சியாக தனது அரசியல் அதிகார இருப்புக்கும் ஏற்படக்கூடிய பாதிப்பை உணர்ந்து கொண்டவராகவே ஜனாதிபதி சிறிசேன தனது அணுகுமுறைகளை வகுக்க வேண்டியிருக்கிறது.
அண்மையில் முன்னாள் ஜனாதிபதி ராஜபக் ஷவுடன் சீனாவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பேராசிரியர் பீரிஸ் அங்கு மக்கள் முன்னணியின் முதன் முதலான வெளிநாட்டுக் கிளையை இலங்கையர்கள் மத்தியில் திறந்து வைத்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. அந்த கிளை திறக்கப்பட்ட நிகழ்வில் ராஜபக் ஷ பங்கேற்றாரா இல்லையா என்பது பற்றி தகவல் எதுவும் இல்லை.
தற்போதைய நிலையில் புதிய கட்சியில் இருக்கக் கூடிய பிரபல்யமான அரசியல்வாதிகள் என்றால் அதன் தலைவர் என்று சொல்லப்படுகின்ற பேராசிரியர் பீரிஸும் பசில் ராஜபக் ஷவும் தான். கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் எவரும் இதுவரையில் மக்கள் முன்னணியில் வந்து இணைந்து கொள்ளவில்லை. புதிய கட்சியில் அவர்கள் இணைந்து கொள்வார்களோயானால், பாராளுமன்ற ஆசனங்களை இழக்க வேண்டியிருக்கும். ஆனால், அவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் இப்போதைக்கு புதிய கட்சியில் இணைந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. அதை எந்த ராஜபக் ஷவும் எதிர்பார்க்கவுமில்லை.

அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தல்களில் சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் வேட்பாளர்களாக களமிறங்குவதற்கு ராஜ பக் ஷ விசுவாசிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என்பது நிச்சயம். அத்தகைய சூழ்நிலையில் அந்த விசுவாசிகளுக்கு தேர்தலில் தனியாகக் களம் இறங்குவதற்கு வாய்ப்பைக் கொடுப்பதே புதிய கட்சி அமைக்கப்பட்டதன் பின்னணியில் இருக்கக்கூடிய உடனடி வியூகமாகும். மேலும் அக்கட்சியில் இப்போது அதிகமாக இணைந்து கொள்பவர்கள் உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களே. கடந்த வருட முற்பகுதியில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு சிறிசேனவினால் சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை தன் வசமாக்கிக் கொள்ள முடிந்த போதிலும், கட்சி இன்னமும் முழுமையாக அவரின் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. ஜனாதிபதியாக ஆட்சியதிகாரத்தில் இருக்கின்ற போதிலும் கூட அவரால் முன்னாள் ஜனாதிபதியின் விசுவாசிகள் கட்சிக்குள் தனக்குத் தோற்றுவிக்கின்ற சவால்களைச் சமாளிக்க முடியவில்லை என்பது உண்மையே. சுதந்திரக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள், ஆதரவாளர்கள் மத்தியில் ராஜபக் ஷவுக்கு பெருமளவு ஆதரவு இன்னமும் தொடரவே செய்கிறது. இந்த ஆதரவையே பிரதான தளமாகக் கொண்டு புதிய கட்சி செயற்படுகிறது. உள்ளூராட்சித் தேர்தல்களை ஒரு வருடத்துக்கும் அதிகமான காலமாக ஒத்திவைத்துக் கொண்டு போவதற்கு வட்டார எல்லைகள் மீள் நிர்ணயம் உட்பட சில நடைமுறை சார்ந்த காரணங்களை அரசாங்கம் வெளியில் கூறிக்கொண்டிருக்கின்ற போதிலும், அதன் பின்னணியில் இருக்கக்கூடிய அரசியல்காரணங்கள்ஒன்றும் இரகசியமானவையல்ல. தற்போதைய சூழ் நிலையில் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடத்தப்படுமானால் அதில் ராஜபக் ஷஷ விசுவாசிகள் புதிய கட்சியின் வேட்பாளர்களாகபோட்டியிடும் பட்சத்தில் ஏற்படக்கூடிய பிரதானமான மும்முனைப் போட்டியில்( ஐக்கிய தேசியக் கட்சி – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி– ஸ்ரீலங்கா மக்கள் முன்னணி) சுதந்திரக்கட்சிக்கு கணிசமான பின்னடைவு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. அத்தகைய பின்னடைவு சுதந்திரக்கட்சிக்குள் ஜனாதிபதி சிறிசேனவின் தலைமைத்துவத்துக்கு பலவீனத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. அவ்வாறான சூழ்நிலை ஏற்படுவதைத் தவிர்க்கக் கூடியதான அணுகுமுறையை வகுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் ஜனாதிபதி இருக்கின்றார்.
இதேவேளை, இதுவரையில் சுதந்திரக்கட்சியை தனது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முடியாதவராகஇருக்கும் ஜனாதிபதியை தேர்தல் ஒன்றின் மூலமாக பலவீனமான கட்சித்தலைவராகக் காண்பிப்பதற்கான வாய்ப்பொன்றுக்காகவே முன்னாள் ஜனாதிபதி காத்துக்கொண்டிருக்கின்றார். புதிய கட்சியுடன் தன்னை முறைப்படியாக அடையாளம் காட்டிக்கொள்வதில் மகிந்த ராஜபக் ஷவுக்கு எந்த அவசரமும் இல்லை. ஆனால், அதன் பின்னணியில் தானே இருக்கின்றார்என்பதை தென்னிலங்கைக்கு குறிப்பாக சுதந்திரக்கட்சி ஆதரவாளர்களுக்கு உணர்த்துவதில் அவர் எந்தவிதமான தயக்கத்தையும் காட்டுவதாக இல்லை. அடிப்படையில் மஹிந்த ராஜபக் ஷவின் தந்திரோபாயம் சுதந்திரக்கட்சியின் தலைமைத்துவத்தை மீண்டும் கைப்பற்றுவதேயாகும். தனக்கு சிங்கள மக்கள் மத்தியில் இருக்கக் கூடிய ஆதரவு குறித்து அவர் மிகையான நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றார். தனது ஆசீர்வாதத்துடனான ஒரு கட்சி ஜனாதிபதி சிறிசேன தலைமையிலான சுதந்திரக்கட்சிக்கு பெரிய சவாலாக அமைவதை உறுதிப்படுத்தினால் தன்னையே மீண்டும் கட்சியின் தலைவராக்குமாறு வலியுறுத்துவதற்கு உட்கட்சிக்கிளர்ச்சியொன்றை ஏற்படுத்த முடியும் என்பதே அவரின் நம்பிக்கையாக இருக்கின்றது என்று நம்பலாம்
ஜனாதிபதி உண்மையில் ஒரு திரிசங்கு நிலையில் இருக்கின்றார். ஐக்கிய தேசியக்கட்சியுடன் சுதந்திரக்கட்சி சேர்ந்து தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைத்திருக்கின்றபோதிலும், தேர்தல் அரசியல் என்று வரும்போது ஆட்சிப்பங்காளிகள் ஒருவருடன் ஒருவர் மோதிக்கொள்ள வேண்டியதொரு நிலைமை இருக்கின்றது. முன்னாள் ஜனாதிபதிக்கு விசுவாசமான சக்திகளுக்கு எதிராக மாத்திரமல்ல, தன்னுடன் சேர்ந்து ஆட்சி செய்துகொண்டிருக்கும் கட்சிக்கு எதிராகவும் வியூகத்தை வகுக்கவேண்டியவராக ஜனாதிபதி சிறிசேன இருக்கிறார்.
பிரதமர் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை சுதந்திரக் கட்சிக்குள் வளருகின்ற நெருக்கடி தனது கட்சியின் எதிர்காலத் தேர்தல் வாய்ப்புக்களைப் பிரகாசமாக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். ஆனால் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதனால் அதுவும் குறிப்பாக மக்கள் மத்தியில் பெரும் விரக்தியை ஏற்படுத்தக்கூடிய பல நடவடிக்கைகளில் அரசாங்கம் இறங்கியிருக்கும் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியும் செல்வாக்கை இழந்துகொண்டே போக வேண்டியிருக்கும். சிறுபான்மையினங்கள் மத்தியில் கொண்டிருந்த ஆதரவை எதிர்காலத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது ஜனாதிபதி சிறிசேனவோ மீண்டும் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு நிலைவரங்கள் அவர்களின் கட்டுப்பாட்டை மீறிச் சென்று கொண்டிருக்கின்றன. ஒட்டு மொத்தத்தில் நோக்கும்போது துணிச்சலுடனும் தூர நோக்குடனும் பயன்படுத்தியிருக்க வேண்டிய வாய்ப்புக்களை கடந்த இரு வருடங்களிலும் ஜனாதிபதியும் பிரதமரும் அவர்களின் தடுமாற்றமான அணுகுமுறைகளின் விளைவாக தவறவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது இயல்பாகவே ராஜபக் ஷாக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் ஆட்சியதிகாரத்தில் இல்லாத போதிலும் இன்னொரு அதிகார மையம் போன்றே தங்களைக் காண்பித்துக் கொள்ளக்கூடியதாக இருக்கிறது.




