செய்திகள்

தனியார் அரச காணிகளை விட்டு இராணுவத்தினர் வெளியேற வேண்டும்: பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்திருக்கின்ற தனியார் அரச காணிகளை விட்டு வெளியேற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இணைத்தலைவர்களில் ஒருவராக கலந்து கொண்ட சிவஞானம் சிறிதரன் அவர்கள் மீள்குடியமர்வு தொடர்பாக கலந்துரையாடும் போது இராணுவத்தினர் வசம் பொதுமக்களின் காணிகள் இருப்பதனால் மீள்குடியமர முடியாத நிலை காணப்படுகின்றது எனத் தெரிவிக்கப்பட்டதையடுத்து கிளிநொச்சி ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்டக்காணியின் எண்பது ஏக்கர் இன்னமும் இராணுவ வசம் உள்ளது. அத்துடன் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட குறித்த காணியினை இராணுவத்தினர் விவசாயிகளுக்கு வழங்கி அதற்கான குத்தகையை இராணுவத்தினர் பெற்றுள்ளனர்.

இதே போல் வட்டக்கச்சி விவசாய பண்ணை இன்னமும் இராணுவப் பயன்பாட்டில் உள்ளது.
பரவிப்பாஞ்சான் பகுதியில் 89 குடும்பங்களின் காணிகளை இராணுவம் வைத்துள்ளதுடன் 29 குடும்பங்களின் காணிகளை மாத்திரமே விடுவித்துள்ளது.

தற்போது சகல விடயங்களிலும் வீதிகளை புனரமைத்தல், பாடசாலை கட்டடங்களை கட்டுதல், மரக்கறி வியாபாரம் காணிகளை குத்தகைக்கு வழங்குதல், பாடசாலைகளில் இராணுவப்பிரசன்னம் இவ்வாறு இராணுவ ஆட்சியே நடக்கின்றது.

நல்லாட்சியும் இல்லை விசில் ஆட்சியும் இல்லை எனவும் தெரிவித்த சிறிதரன் அவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ள தனியார் மற்றும் அரச காணிகளில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் இதனை ஒங்கிணைப்பு குழுக்கூட்டத்தின் தீர்மானமாகவும் நிறைவேற்றுமாறு குறிப்பிட்டதையடுத்து குறித்த தீர்மானத்தை வடமாகாண முதலமைச்சர் அவர்கள் வழி மொழித்தார்.