தனுஸ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே நவீன இராமர் பாலம் அமைத்தல்

மருத்துவர் சி. யமுனாநந்தா
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான தரைத்தொடர்பிற்கு உரிய மிகக் குறுகிய வழித்தடமாக இந்தியாவின் தனுஸ்கோடியும் இலங்கையின் தலைமன்னாரும் அமைந்துள்ளன. இவற்றிற்கிடையிலான பாக்குநீரிணைக் கடல் சுமார் முப்பது கிலோமீற்றர் வரையாகும்.
நவீன பொறியியல் தொழில்நுட்பத்தினால் மிதக்கும் பாதைகளை உருவாக்கி கடல் அலைகளினை எதிர்வு கொள்ளத்தக்கதாகவும், புயல் காலங்களில் மீள்தகவு கொள்ளக்கூடியதாகவும் பொருத்தி நவீன மிதக்கும் பாலத்தினை அமைக்க முடியும்.
மிதக்கும் பாதை அலகுகள் ஒவ்வொன்றும் 100 மீற்றர் நீளமும், 12 மீற்றர் அகலமும் உடைய 100 மெட்ரிக்தொன் நிறையைத் தாங்கக்கூடியனவாக அமைக்கலாம். இந்திய கடற்படைப் பொறியியலாளர்கள், இந்திய இராணுவப் பொறியியலாளர்கள் மற்றும் இந்திய பொறியியல் விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இதனை உருவாக்கி தினமும் 30 பாதை அலகுகளை இணைத்தால் பத்து நாட்களுக்குள் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலத்தை அமைக்க முடியும்.
நவீன இந்தியாவில் புரட்சிகர மாற்றங்களை உருவாக்கி வரும் பாரதப் பிரதமர் மோடி அவர்கள், அயோத்தி இராமர் கோயில், இந்திய நாடாளுமன்றம் போன்ற வியத்தகு கட்டமைப்புக்களை நவீன மயப்படுத்தலுடன் மிளிர வைத்தமைபோல் இராமர் பாலத்தினையும் அமைக்கலாம். இதன்மூலம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான கலாச்சாரப் பிணைப்பு மிகவும் உறுதியாகும். மேலும் இலங்கை மக்கள் மின்சக்தி, தொலைத் தொடர்பாடல் என்பவற்றை இந்தியாவில் இருந்து தரை வழியாக மலிவாக பெறக்கூடிய சாத்தியம் உருவாகும்.
இலங்கையில் இதுவரை காலமும் பொருளாதாரப் பிரச்சினைகள் அரசியலாக்கப்பட்டு அதனை இனவாதமாக, மதவாதமாக மாற்றியே அரசியல் தலைவர்கள் தமது காலத்தைப் பயன்படுத்தினர். புதிய புத்தாண்டில் எமது பொருளாதாரத்தை புதிய அணுகுமுறையில் மேன்மையுறச் செய்ய அரசியல் தன்மை அற்றதாக மதவாத இனவாதரீதியல்லாத நிலையான அமைதியினையும், அபிவிருத்தியினையும் தரும் கைங்கரியமாக நவீன இராமர் பாலத்திட்டத்தினைக் கருதுதல் அவசியமாகும்.


