தப்பிப் பிழைக்குமா தமிழ் தேசியக் கூட்டமைப்பு…?
நரேன்-
தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவானதில் இருந்து அன்றைய மிதவாத கட்சிகளின் சின்னமான உதயசூரியன் சின்னத்திலும் அதன் பின்னர் வீட்டுச் சின்னத்திலும் தேர்தல்களில் போட்டியிட்டு வருகின்றது. இந்தக் கூட்டமைப்பில் மிதவாத கட்சியும், ஆயுதப்போராட்ட அமைப்புகளும் அங்கத்துவம் வகிக்கின்றன. இவர்கள் அனைவருமே தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து போரடியவர்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பாக அணிதிரண்டு தேர்தல்களில் போட்டியிட்டதன் பின்னர் இணைந்த வடக்கு, கிழக்கில் ஒரு சமஸ்டி அரசியலமைப்பு முறையை உருவாக்கி அதன் மூலம் இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் முயற்சியை மேற்கொண்டிருந்தனர். இதனையே அவர்களது தேர்தல் விஞ்ஞாபனங்களும் வெளிப்படுத்துகின்றன. தமிழ் மக்களின் ஆணையும் இதற்காகவே அவர்களுக்கு கிடைத்திருந்தது.
ஆயுதப் போராட்டம் முனைப்படைந்த காலத்தில் அத்தகையதொரு சமஸ்டி அலகை வழங்குவதற்கு இணங்கியிருந்த அரசாங்கம், அது மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் எத்தகைய தீர்வுத் திட்டத்தையும் முழு மனதுடன் முன்வைப்பதற்கு விருப்பமின்றியே இருந்தது. சர்வதேச சமூகம் தனது விருப்பத்தை நிறைவேற்றுவதற்கும், இலங்கையில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கும் ஒரு யுக்தியாக தமிழர் பிரச்சனையை கையில் எடுத்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் அரசாங்கத்துடன் இணங்கிச் செயற்பட்டு, ஒரு தீர்வை நோக்கி நகருமாறு வலியுறுத்தியது. இதற்கு அமைவாகவே ஆட்சி மாற்றம் ஏற்படவுடன் முழு பாராளுமன்றமும் அரசியல் நிர்ணய சபையாக மாற்றம் பெற்று அதனை வழி நடத்துவதற்காக வழிநடத்தல் குழுவும், அதற்கு துணை புரிவதற்காக ஆறு உப குழுக்களும் நியமிக்கப்பட்டு, புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு அமைய ஆறு உபகுழுக்களின் அறிக்கையும், வழி நடத்தல் குழுவிடம் கையளிக்கப்பட்டு அது அரசியல் நிர்ணய சபையினால் சகல பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் வழங்கப்பட்டிருந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு வழிநடத்தல் குழு தன்னுடைய இடைக்கால அறிக்கையையும் தயாரித்து அண்மையில் வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிக்கையில் உபகுழுக்கள் முன்வைத்த பரிந்துரைகள் எந்தளவிற்கு உள்வாங்கப்பட்டுள்ளன என்பன குறித்து எந்தவொரு இடத்திலும் சுட்டிக்காட்டப்படவில்லை. மேலும், கூட்டமைப்பானது தமிழ் தேசிய இனத்தின் இனப்பிரச்சனைக்கு தீர்வை கண்டறியும் முகமாகவே, இந்த வழிநடத்தல் குழுவில் இடம்பெற்றிருந்தது. ஆனால், தனது மக்களின் அபிலாசைகளை தெட்டத்தெளிவாக, விட்டுக் கொடுப்பின்றி முன்வைத்து அதற்கான ஆதரவைப் பெற்றுக் கொண்டதா என்ற பெரும் கேள்வி எழுகிறது.
வழிநடத்தல் குழுவில் அங்கம் வகித்து இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இன்று வரை இந்த விடயத்தில் தான் எடுத்த முயற்சிகள் குறித்து எந்தவிடத்திலும் பேசவில்லை. அதேசேமயம், இந்த நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் ஒற்றையாட்சி முறை, பௌத்தத்திற்கு முன்னுரிமை, சமஸ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை போன்ற விடயங்களில் தமிழ் தரப்பும் இணங்கியிருப்பதாக பகிரங்கமாகவே அறிவித்து வருகின்றனர். இந்த விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தன்னுடைய நிலைப்பாடு குறித்து எந்தவொரு கருத்தையும் சொல்ல வேண்டிய இடத்தில் சொன்னதாக தெரியவில்லை. மாறாக மக்கள் மற்றும் மதத்தைலவர்கள் மத்தியில் பேசுகையில், எமது மக்கள் ஏற்றுக் கொள்ளாத எத்தகையதொரு தீர்வையும் நாம் ஏற்கமாட்டோம் என்று கூறி வருகிறார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டவையே தமது விருப்பம் என்று தமிழ் மக்கள் பேரவை நடத்திய மக்கள் சந்திப்பின் போதும், வடக்கிலும், கிழக்கிலும் ஏற்பாடு செய்திருந்த எழுக தமிழ் பேரணியின் மூலமும் தமிழ் மக்கள் வெளிப்படுத்தியிருந்தனர். ஆனால் கூட்டமைப்பு தலைவரின் செயற்பாடுகள் தம்மால் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை நிறைவேற்றும் வகையில் அமைந்திருக்கின்றதா என்ற பலத்த சந்தேகம் எழுந்திருக்கிறது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் முன்னைய அரசாங்கத்துடன் மேற்கொண்டது போலவே, புதிய அரசாங்கத்திற்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் தமிழ் மக்களது நாளாந்த பிரச்சனைகள் தொடக்கம் அரசியல் தீர்வு தொடர்பான விடயங்கள் வரையில் திறந்த மனதுடனான விவாதங்கள் நடத்தப்பட்டு, அதில் எட்டப்படுகின்ற முடிவுகள் வழிநடத்தல் குழுவிற்கு தெரிவிக்கப்பட்டு, அவர்களின் ஒப்புதல்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் கூட்டமைப்பின் தலைவரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தன. ஆனால் கூட்டமைப்பின் தலைவர் இவைகளை செவிமடுத்ததாக தெரியவில்லை. வடக்கு- கிழக்கு இணைப்பு தொடர்பாக இஸ்லாமிய சமூகத்துடன் அந்த இணைப்பின் முக்கியத்துவம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் இணங்குவதற்கு ஏற்ற வகையில் சில விட்டுக் கொடுப்புக்களை மேற்கொள்ளுமாறும் பங்காளிக்கட்சிகளால் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அதுவும் நடைபெற்றதாக தெரியவில்லை. இப்பொழுது பகிரங்க மேடைகளில் முஸ்லிம் சமூகத்திற்கான அறைகூவல் விடப்பட்டுள்ளது. இந்தவிடத்தில் வடக்கு – கிழக்கு இணைப்பிற்காக இஸ்லாமிய சமூகத்துடன் கூட்டமைப்பு தலைவர் எத்தகைய பேச்சுக்களை நடத்தியிருக்கின்றார் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. அத்தகைய பேச்சுக்களை காத்திரமாக முன்னெடுக்காது வெறும் அறிக்கைகள் மூலம் அதனை சாதிக்க முடியும் எனக் கருதுவது எத்தகைய இராஜதந்திரம்..? இரகசியமாக செயற்பட வேண்டிய இடத்தில் பகிரங்கமாகவும், பகிரங்கமாக செயற்பட வேண்டிய இடத்தில் இரகசியமாகவும் கதைப்பதன் மூலம் கூட்டமைபின் தலைவர் எத்தகைய இராஜதந்திரத்தை கையளுகின்றார் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், படைத்தரப்பினராலும் ஏனையவர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொது மக்களின் காணிகள் விடுவிப்பு, பௌத்தர்கள் இல்லாத இடங்களில் நிறுவப்பட்டுள்ள புத்தர்சிலைகளை அகற்றுதல் போன்ற அன்றாட பிரச்சனைகளில் கூட தனது நல்லெண்ணத்தை பயன்படுத்தியும், மக்கள் தமக்கு வழங்கியிருகக் கூடிய ஆணையையும் பயன்படுத்தியும் ஒரு சாதகாமான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதில் இருந்து கூட்டமைப்பின் தலைவர் தவறியுள்ளார். அங்கத்துவ கட்சிகளும் இந்த விடயத்தில் தலைவருக்கும், அரசிற்கும் உரிய அழுத்தத்தை கொடுத்தாக தெரியவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் தங்கள் மீதுள்ள வழக்குகளை துரிதமாக விசாரிக்க கோரியும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை விதிக்கும் படியும், இல்லையேல் விடுதலை செய்யும் படியும் தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். ஆறு மாதத்திற்குள் உரிய தீர்வை வழங்குவதாக ஜனாதிபதி அளித்த உத்தரவாதத்துடன் எதிர்கட்சித் தலைவர் சிறைச்சாலைக்கு சென்று உண்ணாவிரதத்தை முடித்து வைத்திருந்தார். மாதங்கள் பல கடந்தும் அவர்களது கோரிக்கை இன்று வரை நிறைவேற்றப்படாது உள்ளது. இந்நிலையில் தமிழ் அரசியல் கைதிகள் மூவருக்கு எதிராக வவுனியாவில் நடைபெற்று வந்த ஒரு வழக்கு அனுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் தாங்கள் மொழி ரீதியாகவும், வேறு பல வழிகளிலும் பாதிப்கப்படுவதாக கூறி அந்த வழக்கு வவுனியாவில் தொடர்ந்தும் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் மூன்று அரசியல் கைதிகள் அனுராதபுரம் சிறைச்சாலையில் சாகும் வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விடயம் தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் உட்பட மக்கள் பிரதிநிதிகள் எவரும் வினைத்திறன் மிக்க வகையில் செயற்பட்டதாக தெரியவில்லை. பேரவையினரும் கூட இந்த விடயத்தில் உரிய கவனம் செலுத்தாமல் இருப்பது கவலையளிக்கிறது.
அரசியல் கைதிகளின் குடும்பத்தவர்களும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் சமூகத்தில் அனைத்து தரப்பினருடனும் இணைந்து வெகுஜன போராட்டங்களை நடத்த வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். இந்த சம்பவமானது தலைமைகள் ஏதுமின்றி மக்கள் தமது பிரச்சனையை கையில் எடுத்து தன்னெழுச்சியுடன் பேரராட வேண்டிய சூழலை மீண்டும் ஏற்படுத்தியிருக்கிறது. இது ஒட்டுமொத்த தமிழ் தலைமைகளும், வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயம்.
மாகாண நிர்வாகத்திற்கு உட்பட்ட ஒரு பாடசாலையின் விழாவை ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தனது கௌரப்பிரச்சனையாக எடுத்துக் கொண்டு கல்வி சமூகத்தினர் மற்றும் பாடசாலை சமூகங்கள் பற்றியும், பொது மக்களின் விரும்பங்களை கணக்கில் எடுக்காமலும் தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் அந்த விழைவை நடத்தியிருக்கிறார். இணைந்த வடக்கு கிழக்கில் ஒரு சமஸ்டி ஆட்சியமைப்பை உருவாக்கி அதனை எத்தகைய அரசாலும் மீளப்பெறாத வகையில் அரசியலமைப்பின் மூலம் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என்று கோருபவர்கள் ஒரு மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் இருக்கக் கூடிய பாடசாலை விழாவை அந்த மகாணசபையை புறந்தள்ளிவிட்டு செய்திருப்பதானது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உண்மைத் தன்மையின் மீது சந்தேகம் கொள்ள வைக்கிறது.
அங்கத்துவ கட்சிகளில் ஒன்றின் தலைவர் அரசாங்கம் எமக்கு உரிய தீர்வை வழங்காவிட்டால் நாம் சர்வதேச சமூகத்திடம் எப்படி கேள்வி எழுப்புவது குறித்து விவாதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இவருடைய கூற்றில் இருந்து அங்கத்துவ கட்சிகளின் ஒப்புதல் இல்லாமலேயே கூட்டமைப்பு தலைவர் செயற்பட்டு இருக்கிறார் என்பது நிரூபணமாகிறது. ஆனால் அந்த தலைவர் கூட்டமைப்பின் செயற்பாடு குறித்து தனது தலைவரிடம் கேட்டுக் தெரிந்து கொண்டாரா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது. மற்றொரு அங்கத்துவக் கட்சியின் தலைவர் மத்திக்கும், மகாணங்களுக்கும் இடையிலான உறவுகள் குறித்து பரிந்துரைக்க வேண்டிய குழுவின் தலைவராக செயற்பட்ட போதிலும் தனது பரிந்துரைகள் எந்தளவுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அல்லது நிராகரிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து எத்தகைய தகவல்களையும் வெளிப்படுத்தவில்லை. கூட்டமைப்பின் தலைவருடன் கூட இது குறித்து விவாதித்ததாகவும் தெரியவில்லை.
இடைக்கால அறிக்கை வெளிவந்த பின்னர் பாதிக்கப்பட்ட தமிழ் தேசிய இனத்தின் ஒரு அங்கமாகவுள்ள வடமாகாண சபையின் முதலமைச்சரும், இடைக்கால அறிக்கை குறித்து கருத்து வெளியிட்டு இருந்தார். இந்த இடைக்கால அறிக்கையில் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய எந்தவொரு அம்சமும் இல்லை என்ற அடிப்படையில் முன்னாள் நீதியரசராகிய அவரது கருத்து அமைந்திருக்கிறது. அவரை இணைத்தலைவராக கொண்டு செயற்படுகின்ற தமிழ் மக்கள் பேரவை இந்த இடைக்கால அறிக்கையை முற்று முழுதாக நிராகரித்துள்ளது. இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறிப்பாக தமிழரசுக் கட்சி எதனடிப்படையில் இதற்கு அதரவு வழங்குகிறது என்ற சந்தேகம் எழுகிறது.
கூட்டமைப்பின் தலைவர் அண்மையில் பாராளுமன்றத்தில் 70 ஆண்டு பூர்த்தி சிறப்பு அமர்வில் கலந்து கொண்டு சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் முன் கருத்து தெரிவிக்கையில், ஆயுதப் போராட்டத்திற்கு வழிவகுத்த காரணிகள் இன்னமும் அப்படியே இருக்கின்றது என்று கூறியிருக்கின்றார். அவருடைய கூற்றில் இருந்து இந்த இடைக்கால அறிக்கையில் அதனை தீர்ப்பதற்கான எத்தகைய விடயங்களும் இல்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இந்த அமர்வில் உரையாற்றிய அனைவரும் பாராளுமன்றம் தற்பொழுது உரிய ஜனநாயக மரபுகளைக் கொண்டிருப்பதாகவும், தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடக் கூடிய நிலை இருப்பதாகவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முனைந்துள்ளனர். இங்கு பேசிய எவரும் உண்மையிலேயே இதய சுத்தியுடன் பேசியதாக தெரியவில்லை. பாராளுமன்ற ஜனநாயகம் உரிய முறையில் செயற்படாமையே ஆயுதப்போராட்டத்திற்கு காரணம் என்று கூறும் ஜேவிபியன் தலைவர் வடக்கு- கிழக்கு இணைப்பிற்கும், சமஸ்டி ஆட்சிமுறைக்கும் எதிராக குரல் கொடுக்கின்றார்.
தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுப்பதற்காகவே எதிர்கட்சித் தலைவர் பதவியையும், வழிநடத்தல் குழுவின் அங்கத்துவத்தையும் ஏற்றுக் கொண்டதாக கூறும் கூட்டமைப்பின் தலைவர் பெரும்பான்மை இனத்தவர்களின் மனநிலையை மாற்றக் கூடிய விதத்தில் காத்திரமாக செயற்படவில்லை என்பதையே மேற்சொன்ன விடயங்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது. இதன்காரணமாக இன்றைய சூழலில் ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் கூட்டமைபின் தலைமைக்கு எதிராக அணிதிரண்டு இருப்பதை காண முடிகிறது. இதன் வெளிபாடே தமிழரசுக் கடசியின் யாழ்ப்பாணம், மாட்டின் வீதியில் உள்ள அலுவலகத்திற்கு முன்னால் தமிழ் மக்கள் போராட முனைந்திருப்பது. மக்கள் பழகிய சின்னத்திற்கும், அதன் கட்சிக்கும் வாக்களிப்பார்கள் என்ற குருட்டு நம்பிக்கை இனிமேலும் எடுபடாது. கொள்கையின் அடிப்படையிலான ஐக்கியத்தையே மக்கள் விரும்புகின்றனர். அவர்கனின் விருப்பங்களை நிறைவேற்றாத வெற்றுக் கூட்டமைப்பை அவர்கள் ஒரு போதும் அங்கீகரிக்கமாட்டார்கள். இதனை அவ்வப்போது நடந்து வரும் சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன. இனியாவது தமிழ் மக்களின் ஒற்றுமையை பற்றி வெறும் வாயளவில் மட்டும் பேசிக் கொண்டு இருக்காமல் அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து வினைத்திறன் மிக்க செயற்பாட்டினை முன்னெடுத்து, மக்களின் மதிப்பை பெற்றுக் கொள்வதற்கு முன்வந்தால் மாத்திரமே கூட்டமைப்பு தப்பிப் பிழைக்கும். இல்லாதுவிடின் அதில் எத்தனை கட்சிகள் கூட்டாக இணைந்தாலும் மக்களால் நிராகரிக்கப்படும் நிலையே உருவாகும். இனியும் காலம் தாழ்த்தாது மக்கள் அரசியல் விழிப்பு பெற்று விட்டார்கள் என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உணரவேண்டும்.
N5



