செய்திகள்

தமிழகத்தை ஆளப்போவது யார்? வாக்கு எண்ணிக்கை காலை 8.00 மணிக்கு ஆரம்பம்

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. பிற்பகல் 12 மணிக்குள் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் யார்? ஆட்சியமைக்கப்போவது யார் என்பது பற்றிய முழு விவரங்கள் தெரியவரும்.

தமிழகம், புதுச்சேரி, கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களில் கடந்த மே 16-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அஸ்ஸாமில் 2 கட்டமாகவும், மேற்குவங்க மாநிலத்தில் 7 கட்டமாகவும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்த 5 மாநிலங்களிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீலிடப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் பணி வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்குப்பதிவு நடந்து முடிந்ததை அடுத்து பல்வேறு தொலைக்காட்சி சேனல்கள் மூலம் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கணிப்பு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் பா.ஜ.க. முதன்முறையாக ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதேபோல கேரளத்தில் ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணி தோல்வியைத் தழுவும் என்றும் இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ஆட்சிமாற்றம் ஏற்படும் என்றும் அங்கு காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் தற்போது அந்த மாநிலத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியே மீண்டும் ஆட்சியமைக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் காங்கிரஸ்-இடதுசாரிகள் கூட்டணிக்கு எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்காது என்றும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தை பொருத்தவரை ஆட்சியைப் பிடிப்பது யார் என்பது குறித்து இழுபறி நிலையே நீடிக்கிறது. ஒரு சில சேனல்கள் அதிமுகவே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் வேறு சில சேனல்கள் திமுக.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளது என்றும் இருவகையான கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளன.

தமிழகத்தில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளைத் தவிர்த்து 232 தொகுதிகளில் கடந்த 16-ஆம் தேதியன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. மொத்தமாக 74.26 சதவீத வாக்குகள் பதிவாகின.

68 வாக்கு எண்ணும் மையங்கள்: வாக்குப்பதிவில் பயன்படுத்தப்பட்ட அனைத்து மின்னணு இயந்திரங்களும் மூடி முத்திரையிடப்பட்டு, 68 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் கனமழை பெய்தாலும், வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்குள் நீர் புகாதபடி உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

தபால் வாக்குகளும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் ஒரே நேரத்தில் எண்ணப்பட உள்ளன. அனைத்துத் தொகுதிகளிலும் முதல் சுற்றின் முடிவுகள் காலை 9 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை விவரங்களும் வெளியாகும்.

இந்த முறை வாக்கு எண்ணிக்கை விவரங்களை சுற்று வாரியாக வெளியிடுவதில் தேர்தல் ஆணையம் தீவிர கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையின் போது, வெளியிடப்படும் முடிவுகள் கணினியில் பதிவு செய்யப்படும். வாக்கு எண்ணிக்கை பணியில், 9,621 பேரும் வாக்குப் பதிவு விவரங்களை கண்காணிக்கும் பணியில் 3,971 நுண் பார்வையாளர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
R-06