செய்திகள்

தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானம்

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு விடுவிக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. இதற்கு அமைவாக தமிழக மீனவர்களை விடுவிக்க அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக மீன்பிடித்துறை மற்றும் கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யும் அதேவேளை மீன்பிடி படகுகளை எச்சந்தர்ப்பத்திலும் விடுவிக்க தயாரில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடல் எல்லையில் அத்துமீறி மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்ற முற்றச்சாட்டின் பேரில் 36 தமிழக மீனவர்கள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கிறிஸ்மஸ் பண்டிகையன்று மீனவர்கள் விடுவிக்கப்படுவார்களா என்பதனை தன்னால் உறுதிப்பட கூறமுடியாது என்று தெரிவித்த அமைச்சர் நல்லெண்ண அடிப்படையில் தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்குமாறு மீன்பிடி மற்றும் கடற்றொழில் அமைச்சு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் சட்டமா அதிபர் திணைக்களமே இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டுமென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். -(3)