செய்திகள்

தமிழரசுக் கட்சியின் தடுமாற்றம்: கட்சி நலனா…..? மக்கள் நலனா…..?

நரேன்-

அரசியலமைப்பு தொடர்பாக தீவிரமாக பேசப்பட்டு வரும் நிலையில் தென்னிலங்கையிலும், வடக்கிலும் பல்வேறு அரசியல் குழப்ப நிலைகளும் உட்கட்சி மோதல்களும் தீவிரம் பெற்றிருக்கின்றன. தென்னிலங்கையின் பிரதான இரு கட்சிகளும் தமது கட்சியின் உட்பூசல்களை கட்டுப்படுத்தி அடுத்து வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தம்மை தயார்படுத்தி வருகின்றன. ஐக்கியதேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் தனித்து ஒரு தேர்தலை உடனடியாக எதிர்கொண்டு தமது பலத்தை நிரூபிக்க முடியும் என்பதில் நம்பிக்கையற்றவர்களாகவே உள்ளனர். இதன்காரணமாகவே உள்ளூராட்சி சபைத் தேர்தல் மற்றும் மாகாணசபைத் தேர்தல் என்பன ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன. முடிவடைந்த மாகாண சபைகளுக்குரிய தேர்தல் உடனடியாக நடத்தப்படும் என கூறப்பட்ட போதும் நாட்டில் உள்ள 9 மாகாணசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டு அந்த தேர்தலும் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவில் தேர்தல் ஆணையாளர் கூட விசனம் அடைந்திருக்கிறார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தேர்தல் முறை மற்றும் பெண்களின் பிரதிநித்துவம் தொடர்பிலான சர்ச்சைகளை காரணம் காட்டி இழுதடிப்பு செய்யப்படுகின்றது. உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான புதிய எல்லை நிர்ணயம் தமிழ் மக்களைப் பொறுத்தவரை பாதிப்பை ஏற்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றது. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள மணலாறு பிரதேசம் 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தை அடிப்படையாகக் கொண்டு, அங்கிருந்த தமிழ் மக்கள் அனைவரும் அடித்து விரட்டப்பட்ட நிலையில் வெற்றுக் காணி அனுராதபுரம் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. இந்தப் பிரதேசத்தில் மீண்டும் சில கிராமங்களை இணைத்து அதில் சில சிங்கள குடியேற்றங்களையும் செய்து 2010 ஆம் ஆண்டு மீண்டும் முல்லைத்தீவுடன் இணைக்கப்பட்டது. இந்த வெலிஓயாப் பிரதேசம் இன்னமும் திட்டமிட்ட வகையில் எல்லைகள் வரையறை செய்யப்படாத நிலையில் தனிப்பிரதேச செயலகமாக பிரகடனப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனைப் போன்றே, வவுனியா மாவட்டத்தின் வவுனியா, வவுனியா வடக்கு, வெண்கலச் செட்டிகுளம் ஆகிய மூன்று பிரதேச செயலக பிரிவுகளில் இருந்தும் 46 சதுர கிலோமீற்றர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதி பிரித்தெடுக்கப்பட்டு வவுனியா சிங்கள பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு வடக்கு, கிழக்கில் புதிய எல்லை மீள்நிர்ணயம் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வரவிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பிரதிநித்துவ ரீதியாக இதன் தாக்கத்தையும் உணரமுடியும்.

மறுபுறம், இனப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வாக புதிய அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அரசாங்கம் கூறிவருகின்றது. ஆனால் இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரச பிரதானிகள் புதிய அரசியலமைப்பின் உள்ளடக்கம் பற்றி தெரிவித்து வரும் கருத்துக்கள் இந்த நாட்டில் புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக புதிய அரசியலமைப்பு அமையுமா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. இந்த நாட்டின் மகாசங்கத்தினரும், தென்னிலங்கை பிரதானிகளும் பௌத்திற்கு முன்னுரிமை, வடக்கு- கிழக்கு இணைப்பு கிடையாது, ஒற்றையாட்சி முறையின் கீழ் தீர்வு எனக் கூறிவருகின்றனர். இதுவே கடந்த 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பிலும் உள்ள பிரதான விடயம். அதில் சிறு திருத்தத்தை மேற்கொண்டு புதிய அரசியலமைப்பாக கொண்டு வருவதன் மூலம் தமிழ் தேசிய இனத்தை ஏமாற்றலாம் அல்லது தீர்வுக் கோரிக்கையை இல்லாமல் செய்யலாம் என அரசாங்கம் கருதுகிறது. இதனை தட்டிக்கேட்க வேண்டி தலைமைகளும் அரசாங்கத்திடம் சரணாகதி நிலைக்கு சென்றுள்ளது.

ஒரு குறிப்பிட்ட ஆட்புல பிரதேசமும் தங்களுக்கு என்று ஒரு மொழியும், பிரத்தியேகமான கலாசாரமும் கொண்டிருக்கக் கூடிய ஒரு மக்கள் கூட்டமாகிய தமிழ் தேசிய இனம் ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக சமவுரிமை, சமநீதி, சகவாழ்வு கேட்டு போராடி வருகின்றது. அந்த மக்கள் சேர்.பொன்.இராமநாதன், ஜி.ஜி.பொன்னம்பலம், அமிர்தலிங்கம், தந்தை செல்வா என பல ஜனநாயக தலைவர்களை கண்டு அவர்கள் ஊடாக தமது அபிலாசைகளை முன்வைத்து போராடியிருக்கின்றது. அந்த போராட்டங்களை சிங்கள பௌத்த தேசிய அடிப்படைவாதிகளும், மாறி மாறி ஆட்சிக்கு வந்த தென்னிலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளும் கண்டு கொள்ளாதன் விளைவு ஆயுதம் ஏந்த வேண்டிய நிர்பந்தத்தை உருவாக்கியிருந்தது. அதன் விளைவாக தலைவர் பிரபாகரனை தமிழ் தேசிய இனம் கண்டு கொண்டது.

தமிழ் தேசிய இனத்தின் உரிமைக்கான போராட்டத்தை பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் எனக் கூறி சர்வதேச நாடுகளின் உதவியுடன் மனிதகுலமே வெட்கித் தலைகுனியும் அளவில் யுத்த குற்ற மீறல்கள், மனிதவுரிமை மீறல்கள் என்பவற்றுடன் கடந்த மஹிந்த அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வந்திருந்தது. தமிழ் தேசிய இனம் தமது உரிமைப் போராட்டத்தில் பல மிதவாதிகளையும், பல அப்புக்காத்துக்களையும், கல்வி மான்களையும் கண்டிருக்கின்றது. ஆயுத ரீதியில் பல வீரர்களையும், பல உயிர் கொடையாளர்களையும் சிறந்த தலைவரையும் கண்டிருக்கின்றது. ஆயுத வழிப் போராட்டத்தில் இருந்து ஜனநாயக வழிக்கு திரும்பிய தலைவர்களையும் கொண்டிருக்கின்றது. இத்தகைய பின்னனிகளை கொண்டிருக்கின்ற தமிழ் தேசிய இனம் கற்றுக் கொண்டது என்ன…?, கடந்த கால தலைவர்கள் உரிமைகளை பெற முடியாது தோல்வியடைந்தமைக்கான காரணம் என்ன…? அல்லது அவர்களால் வெற்றி இலக்கை அடைய முடியாமல் போனமைக்குரிய காரணம் என்ன என்பதை இனங்கண்டிருக்கின்றதா…? என்ற பல கேள்விகள் எழுகின்றது.

அந்த தேடல்களுக்கான விடைகளை தமிழ் மக்களின் தலைமை தாம் தான் என கூறிக்கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை குறிப்பாக தமிழரசுக் கடசியினர் கண்டிருப்பார்களேயானால் இந்த கேள்வி தேவையற்றது. ஆனால் நடந்து வரும் சம்பவங்கள் கடந்த காலத்தில் இருந்து தற்போதைய தலைமைகள் எதனையும் படிக்கவில்லை அல்லது இராஜதந்திர ரீதியாக தோற்றுப் போனவர்களாகவே தற்போதைய தலைவர்கள் இருக்கின்றார்கள் என்றே எண்ணவேண்டியிருக்கிறது.

இதற்கு எல்லாம் மகுடம் வைத்தால் போல் அமைந்திருக்கிறது வடமாகாணசபை விவகாரம். தமது ஆட்புல அடையாளத்தை பிரதிபலிக்கும் நிலத்தை பாதுகாக்கவும், புதிய அரசியலமைப்பில் நிரந்தர தீர்வை எட்டவும், அரையாண்டு காலமாக வீதியில் குந்தியிருந்து நீதி கேட்கும் மக்களுக்கான தீர்வை பெற்றுக் கொடுக்கவும் தமிழ் தேசிய அரசியல் பரப்பில் உள்ள அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும், சமூக செயற்பாட்டாளர்களையும், மக்களையும் ஒன்றிணைத்து அவற்றை அடைவதற்காக அரசிற்கும், சர்வதேசத்திற்கும் அழுத்தம் கொடுப்பதற்கு பதிலாக தமது கட்சியை பாதுகாக்க வடக்கு முதலமைச்சருக்கு எதிராக மக்களை திரட்ட முயல்வது என்பது வேடிக்கையானதும், வேதனையானதும் ஆன விடயமே. தமிழ் தேசிய இனம் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும், அவர்களது அபிலாசைகளையும் சர்வதேச இராஜதந்திரிகளிடமும், அரசாங்கத்திடமும் வடக்கு முதலமைச்சர் அவர்கள் முன்வைத்து வருகின்றார். கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைவாக தமிழ் மக்களின் அபிலாசைகளை உள்ளடக்கிய ஒரு தீர்வுத் திட்டத்தை வலியுறுத்தியும் வருகின்றார். இந்த நிலையில் அவரையும் உள்வாங்கி நிரந்தர தீர்வு நோக்கி பலமான ஒரு கட்டமைப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்பட வேண்டிய நிலையில், அவரை அகற்றுவதன் மூலம் தமிழரசுக் கட்சி எதனை சாதிக்க முயல்கிறது. முதலமைச்சர் அவர்களின் கொள்கையில் இருந்து தமிழரசுக் கட்சியின் கொள்கை மாறுபட்டதா…?, அப்படியாயின் தமிழரசுக் கட்சியின் தீர்வு நோக்கிய இலக்கு தான் என்ன..? என்ற கேள்விகள் தவிர்க்க முடியாதவை. இந்தநிலையில், தடுமாறும் தமிழரசுக் கட்சியிடம் இருப்பது தமிழ் மக்கள் நலனா…? அல்லது கட்சி நலனா…? என்பது குறித்தும் சிந்திக்க வேண்டி உள்ளது. தமது கட்சியைப் பாதுகாக்க வேண்டியதும் அது சார்ந்த நலனும் ஒரு தலைமைக்கு இருப்பது இயல்பானதே. ஆனால் கட்சி நலனுக்காக உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை வழிநடத்தும் தலைமை தடம்மாறுவது அந்த இனத்திற்கே ஆபத்தானது.

பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட வடமாகாண சபை இன்று பலரது விமர்சனத்திற்கும், விசனத்திற்கும் உள்ளாகியிருப்பதற்கு காரணம் தமிழரசுக் கட்சியின் செயற்பாடே. வடமாகாணசபையில் ஆளுக் கட்சிக்குள் இருந்து கொண்டு சில தமிழரசுக் கட்சி சார்ந்த உறுப்பினர்கள் ஏற்படுத்திய குழப்பங்கள் இன்று விஸ்வரூபம் எடுத்து பலரையும் முகம் சுழிக்க வைத்திருக்கிறது. தமிழரசுக் கட்சி உறுப்பினர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தாத அல்லது அவர்களின் செயற்பாடுகளுக்கு துணைபோன அக் கட்சியின் தலைவரின் ஆளுமை என்பதும் விமர்சனத்திற்குரியதே. முதுமை அடைவதாலோ, சாகும் வரை அரசியலில் இருப்பதாலோ இராஜதந்திரி என்றோ அல்லது சிறந்த தலைவர் என்றோ கூறிவிடமுடியாது. சரியான நேரத்தில் மிகச் சரியான, பொருத்தமான தீர்மானங்களை எடுத்து அதனை நடைமுறைப்படுத்தி அவற்றில் வெற்றி காண்பவர்களே தலைவர்கள். சீனாவின் விவசாய புரட்சியாளர் மாசேதுங், ரஸ்சியாவின் தொழிலாளர் புரட்சியாளர் லெனின், இந்தியாவின் அகிம்சைவாதி மகாத்மா காந்தி போன்ற பல தலைவர்கள் அவ்வாறே உருவானார்கள். ஆனால் அப்படியொரு தலைமையை தமிழ் தேசிய இனம் இன்று காணமுடியாமல் இருப்பது தமிழ் மக்களின் துரதிஸ்டமே.

வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் இன்று விசாரணை வரை சென்று இரு அமைச்சர்கள் பதவியை இழந்திருக்கிறார்கள். ஏனைய இரு அமைச்சர்கள் தொடர்பிலும் குற்றச்சாட்டுக்கள் இருப்பதால் விசாரணை செய்ய வேண்டும் என முதலமைச்சர் எடுத்த நகர்வையடுத்து தமது கட்சி அமைச்சரை பாதுகாக்க தமிழரசுக் கட்சி நடந்து கொண்ட விதமும், தற்போது அமைச்சரவை மாற்றத்திற்காக அந்த அமைச்சரை பதவி விலகுமாறு கூறிய பின்னர் அமைச்சரவையில் அங்கத்துவம் பெறுவதில்லை என எடுத்த முடிவும், அதற்காக தமிழரசுக் கட்சியினர் அடிக்கடி கூடி கலந்துரையாடியமையும் மக்கள் நலன்சாராது வெறும் கட்சி நலன் சார்ந்த ஒரு முடிவே. இதற்காக நடைபெற்ற கூட்டங்களில் ஒன்று, இரண்டையாவது மேல்சொன்ன தமிழ் மக்களது பிரச்சனைகளுக்காக அந்த உறுப்பினர்களை உள்ளடக்கி அதன் தலைவர்கள் ஒரு கூட்டத்தையேனும் கூட்டவில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

ஆக, 2009 இற்கு பின்னரான தமிழர் அரசியல் ஒரு வெற்றிடமாகவே உள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்பி இராஜதந்திர ரீதியாக மக்களை ஒன்று திரட்டி மக்களது அபிலாசைகளை பூர்தி செய்யவும், நிரந்தர தீர்வை பெறுவதற்கும் ஏற்ற ஒரு தலைமை இல்லாத நிலையேயுள்ளது. இருக்கின்ற தலைமை கூட அதை சரி செய்யும் வகையில் செயற்படுவதாக தெரியவில்லை. இதன் விளைவே மாற்றுத்தலைமை பற்றிய தேடல்களை உருவாக்கியிருக்கிறது.

N5