”தமிழரின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதை சகலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்” : பிரதமர் தெரிவிப்பு
”தமிழர்களின் தேசியப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதை சகலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதன் ஒரு அங்கமாகவே காணிகளை விடுவித்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகின்றோம். நாம் அனைவரும் தேசப்பற்றாளர்கள். அனைவரும் தேசியவாதிகள் என்பதால் நாடு பிளவுபடப்போவதாக கண்ணீர்வடிக்கும் தேசியவாதிகளை கையாள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை” என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் இந்து பத்திரிகைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
நாடு பிளவுபடப்போகிறது என கண்ணீர்வடிக்கும் தேசிய வாதிகள் எனக் கூறிக்கொள்ளும் நபர்களை மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லையென்பதுடன், அரசியலமைப்பு தயாரிப்பின்போது சகல மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலேயே ஆட்சிமுறை மற்றும் ஏனைய விடயங்கள் அமையும் என்றும் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தற்பொழுது காணப்படும் ஆதரவு தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பிரதமர், “எனது நிலைப்பாட்டில் அவருக்கான அடிப்படை ஆதரவு இழக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் காலம் கடந்து வருவதால் இளம் ஆதரவாளர்கள் அவருடன் இல்லை. இளம் வாக்காளர்களின் ஆதரவை இழந்தால் இழக்கப்பட்ட ஆதரவைப் பெறுவதற்கு வேறொரு கட்சி முயற்சிக்கும். எமது கொள்கைத் திட்டங்கள் வெற்றியளித்தால், மஹிந்த ராஜபக்ஷ தோல்வியுற்றவர் என்பதை மக்கள் உணர்வார்கள். அவர் மீண்டும் வருவார் என நினைக்கவில்லை. ஏனெனில், மக்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினால் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பமாட்டார்கள். மீண்டுமொரு மாற்றத்தை ஏற்படுத்தவேண்டுமாயின் வேறொரு வித்தியாசத்தையே ஏற்படுத்துவார்கள். அது நடைபெறும் என கருதமுடியாது, ஏனென்றால் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து செயற்படுகின்றன. செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்பதையே மக்கள் பார்க்கின்றனர்” என்றார்.
அதேநேரம், அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாடுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சாதகமாகவும், மிகவும் ஆக்கபூர்வமான வகையிலும் பங்களிப்புச் செலுத்தி வருவதாகச் சுட்டிக்காட்டிய பிரதமர், 1987ஆம் ஆண்டு அரசியலமைப்பை தயாரிக்கும் குழுவில் இருந்தவன் என்ற ரீதியில் முதல் தடவையாக இம்முறையே சகல தரப்பினரையும் உள்ளடக்கியதாக அரசியலமைப்பைத் தயாரிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லை என்பதால் மூன்றில் இரண்டு பற்றிப் பேசாது அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் கூறினார்.
அது மாத்திரமன்றி தமிழர்களின் தேசியப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதை சகலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதன் ஒரு அங்கமாகவே காணிகளை விடுவித்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகின்றோம். இருந்தபோதும் அரசாங்கத்தின் ஆட்சிமுறை தொடர்பான விடயத்தில் பாரிய பிரச்சினை ஏற்படும் என கருதவில்லை. நாம் ஏற்கனவே பாரிய பிரச்சினைகளைத் தாண்டி வந்துள்ளோம். இது விடயத்தில் இன்னமும் முன்னேற்றம் காணவேண்டியுள்ளது என்றார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்படவிருக்கும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் மற்றும் மீனவர் பிரச்சினை உள்ளிட்ட விடயங்களைத் தீர்ப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். குறிப்பாக மீனவர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.
எட்கா ஒப்பந்தம் தொடர்பில் இணங்கப்படாத விடயங்கள் சில இருக்கின்றன. இவற்றை படிப்படியாகத் தீர்ப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். 2016ற்குள் இதனை உறுதிப்படுத்த விரும்பினோம் ஏனெனில், 2017ஆம் ஆண்டு ஆரம்பத்தில் சீனா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன. எனவே இந்தியாவுடனான ஒப்பந்தம் விரைவுபடுத்தப்பட வேண்டும் எனவே விரும்புகிறோம். இந்தியாவுடனான ஒப்பந்தமானது முத்தரப்பைக் கொண்டது.
2017ஆம் ஆண்டு கைச்சாத்திடப்படவிருக்கும் இலங்கை, இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய முத்தரப்பு ஒப்பந்தமானது வங்காள விரிகுடா பிராந்தியத்தில் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு உந்துசக்தியாக அமையும் எனவும் பிரதமர் தனது செவ்வியில் மேலும் தெரிவித்தார்.
த ஹிந்து பத்திரிகைக்கு பிரதமர் வழங்கியுள்ள செவ்வியில் தொடர்ந்தும் கூறியிருப்பதாவது,
நான் அடுத்த வாரமளவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு ஒன்றை மேற்கொள்ள உள்ளேன். எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் இதன்போது கலந்து கொள்வார்கள்.
அத்துடன், நாம் இந்தியாவுடன் எட்கா உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்ள உள்ளோம். இதன் மூலம் இருநாடுகளுக்கும் பொதுவான நன்மைகள் பல உள்ளன. மீனவர்களின் பிரச்சினைகளும் கண்டிப்பாக தீர்க்கப்பட வேண்டும். 2017ம் ஆண்டு ஆரம்ப பகுதியில் சீனாவுடனும் சிங்கப்பூருடனும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொள்ள எதிர்பார்த்துள்ளோம் என்று பிரதமர் கூறியுள்ளார். அதேவேளை சீனாவுடனான உறவு சிறந்த முறையில் தொடரும் என்றும் கூறியுள்ளார். பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியமையானது இலங்கையின் ஏற்றுமதியில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்றும் பிரதமர் த ஹிந்துவிற்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார். -(3)




